சென்னை கோட்டூர்புரம் நாயுடு தெருவில் 4-வது தெருவைச் சேர்ந்தவருக்கு சொந்தமான இட பிரச்சினை தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கூட்டமாக புகார் கொடுக்க, அதே பகுதியில் உள்ள கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு நேற்று சென்றனர்.
அப்போது திடீரென்று இருதரப்பு வழக்கறிஞர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.
கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்குள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அங்கு பணியில் இருந்த மகளிர் காவலர்கள் உள்பட பலர் அதிர்ச்சியடைந்தனர்.
மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தினர். இந்த மோதல் காட்சி காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் முழுமையாக பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் என வழக்கறிஞர்களுக்கான சீருடை அணிந்திருக்கும் அவர்கள், கொலை வெறியோடு மோதிக் கொள்ளும் காட்சிகள், பார்வையாளர்களை பதற வைக்கிறது.
சட்டத்தையும் நீதியையும் நிலை நாட்ட வேண்டிய வழக்கறிஞர்களே, தெரு ரவுடிகளைப் போல காவல்நிலையத்திற்குள்ளே எவ்வித அச்சமும் இன்றி மோதிக் கொள்வதைக் கண்டு சமூக ஆர்வலர்கள் குமறுகின்றனர். காவல்நிலையத்தில் மோதிக் கொண்ட வழக்கறிஞர்கள் மீது உரிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தல் நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என கோபாலபுரம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.