Sat. Nov 23rd, 2024

கோட நாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தன்னை சிக்க வைக்க திமுக அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கோட நாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரம் குறித்து உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அப்போது குறிப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே காவல்துறை மீண்டும் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக.வினர் முழக்கமிட்டனர். பொய் வழக்குப் போடதே என்ற பதாகையையும் அவர்கள் ஏந்தியிருந்ததால், பேரவையில் அமளி ஏற்பட்டது. மேலும், பேரவைத் தலைவர் அப்பாவின் எச்சரிக்கையும் மீறி அதிமுக உறுப்பினர்கள் நடந்து கொண்டதால், அவர்களை வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கலைவாணர் அரங்கத்தின் நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், பேரவையில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கு பேசுவதற்கு உரிய நேரம் வழங்கப்படாததை கண்டித்து இன்றும் நாளையும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, கோடநாடு கொலை வழக்கில் தன்னை சிக்க வைக்க திமுக அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும், கொலையாளிகளுக்கு துவக்கம் முதலே திமுக ஆதரவாக உள்ளது. கோட நாடு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தன்னை வழக்கில் சேர்க்க தமிழக அரசு முயற்சி செய்கிறது. இந்த நடவடிக்கைகளின் மூலம் அரசின் பழிவாங்கும் நடவடிக்கை உறுதியாகிவிட்டது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்

பேரவைத் தலைவர் கண்டனம்

அதிமுக வெளிநடப்பு குறித்து கருத்து தெரிவித்த பேரவைத் தலைவர் அப்பாவு, எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் பேச அனுமதி கொடுத்தேன்; ஆனால்
அனுமதியில்லாமல் பதாகைகளை ஏந்தி வந்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.