உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.ரமணா, நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற தலைமை நீதிபதி பி.வி.ரமணா, தேசிய கொடியை ஏற்றிவைத்த பின்னர் பேசியதாவது:
நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுவதன் உள்நோக்கத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் தெளிவில்லை.
விவாதமின்றி சட்டங்கள் இயற்றுவது வருத்தமளிக்கிறது.
போதுமான விவாதமின்றி சட்டங்கள் இயற்றப்படுவதால் அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
இந்திய சுதந்திரமடைந்த நேரத்தில், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் சட்டம் படித்தவர்களாகவும், சட்ட அறிவு படைத்தவர்களாகவும் இருந்தார்கள்.
அப்போதைய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்ட ஞானம் படைத்தவர்கள் நிறைய பேர் இருந்ததால், மக்களுக்கு பயனளிக்கும் எண்ணற்ற திட்டங்கள், சட்டங்களாக்கப்பட்டன.
ஆனால், தற்போதைய நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டம் படித்தவர்கள் குறைவாக இருப்பதால், சட்டத்தின் அடிப்படையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் வாய்ப்பு குறைந்து வருகிறது.
தற்போதைய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெறுவதை பார்ப்பது துரதிருஷ்டவசமானது . முந்தைய காலங்களில் அவைகளில் நடந்த விவாதங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், சட்டத்தின் மகத்துவத்தையும் வெளிப்படுத்துபவையாக இருந்தன.
நிதி மசோதாக்கள் மீதான விவாதங்கள் மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன். சட்டங்களை நுட்பமாக ஆராய்ந்து, அதனடிப்படையில் விவாதிக்கப்பட்டு, தேவைப்படும் இடங்களில் புள்ளி விவரங்களை அளித்து முழுமையான சட்டம் இயற்றப்படும்.
அப்படிபட்ட நேரங்களில் நாடாளுமன்ற அவையின் பங்களிப்பை ஒவ்வொருவரும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.ஆனால், தற்போதையை நிலைமை வருந்தத்தக்க நிலையாக உள்ளது.
வழக்கறிஞர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். சட்ட சேவை மற்றும் செயல்பாடுகளுக்குள் மட்டுமே உங்களை கட்டுப்படுத்தாதீர்கள். பொதுமக்களுக்கு நேரடியாக பயனளிக்கக் கூடிய பொது சேவையிலும் ஈடுபடுங்கள். உங்கள் ஞானத்தையும் சட்ட அறிவையும் இந்த நாட்டிற்காக பயன்படுத்துங்கள்
இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.ரமணா தெரிவித்தார்.