மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தமிழ்நாட்டுக்கும், தமிழினத்துக்கும் பெருமை சோ்ப்போருக்கு, தகைசால் தமிழா் விருது அளிக்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
அந்த விருது நிகழாண்டில் முதுபெரும் தலைவா் என்.சங்கரய்யாவுக்கு அளிக்கப்படுவதாகவும் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும், விருதுடன் பத்து லட்ச ரூபாய் நிதியும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
விருது அறிவிப்பு வெளியானவுடன் மகிழ்ச்சி தெரிவித்த மூத்த தலைவர் சங்கரய்யா, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்ததுடன், விருது தொகையாக பத்து லட்ச ரூபாய் நிதியை கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளுக்கு திருப்பி வழங்கப்படும் என்று அப்போதே அறிவித்திருந்தார்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதியான நாளை சுதந்திர தின விழாவில் தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் மூத்த தலைவர் சங்கரய்யாவின் உடல்நிலை கருதி, இன்று மாலையில் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கே முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ததைகசால் தமிழர் விருதை வழங்கி கௌரவப்படுத்தினார்.
தொடர்ந்து விருது நிதியான பத்து லட்சம் ரூபாய்க்கான தமிழக அரசின் காசோலையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூத்த தலைவர் சங்கரய்யாவிடம் வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட அவர், ஒருநிமிடம் கூட தாமதிக்காமல், தனது பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் இருந்து பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார் மூத்த தலைவர் சங்கரய்யா.
நெகிழ்ச்சி மிகுந்த இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன், க.பொன்முடி மற்றும் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மற்றும் மூத்த தோழர்கள் கலந்துகொண்டனர்.
அங்கிருந்து விடை பெற்று திரும்பும் போது சிறுமிகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்பி எடுத்துக் கொள்ள காட்டிய நிதானம், அங்கிருந்த பொதுமக்களிடம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.