Sat. Nov 23rd, 2024

இதுதொடர்பாக, பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை;

தமிழக பால்வளத்துறையில் பல்வேறு வகைகளில் முறைகேடு செய்ததாக பால் பத அலுவலர் அலெக்ஸ் ஜீவதாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், கூடுதல் ஆணையர் கிறிஸ்துதாஸ் துணை ஆணையராக பதவி இறக்கம் என்கிற தண்டனை வழங்கி அவரை மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் இது நிகழந்து ஒருவார காலத்திற்கு மேலாகியதாக பால்வளத்துறை மற்றும் ஆவின் வட்டாரங்களில் தகவல் பரவி வரும் நிலையில் அது தொடர்பான எந்த ஆணைகளையும் வெளியிடாமல் பால்வளத்துறையும், ஆவின் நிர்வாகமும் ரகசியம் காத்து வருவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருக்கு பினாமியாக செயல்பட்ட பல்வேறு அதிகாரிகள் ஆவினில் செய்த பலநூறு கோடி ரூபாய் ஊழல், முறைகேடுகள் தகுந்த ஆதாரங்களோடு வெளிச்சத்திற்கு வர காரணமாக இருந்த பால்வள கூட்டுறவு தணிக்கைத்துறை இயக்குனர் மீதே ஆவணங்கள் காணாமல் போனதாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய ஊழல்பேர்வழி பால் பத அலுவலர் அலெக்ஸ் ஜீவதாஸ் அளித்த அறிக்கை அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, நேர்மையான அதிகாரியை ஊழல் அதிகாரி போல் ஊடகங்களில் சித்தரிக்க அதனை செய்தியாக வழங்கிய பால்வளத்துறை ஆணையரும், ஆவின் நிர்வாக இயக்குனருமான திரு கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் அதே அலெக்ஸ் ஜீவதாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தகவலையும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான ஆணைகளையும் வெளியிடாமல் ரகசியம் காப்பது ராஜேந்திர பாலாஜியையும், அவரது பினாமிகளாக செயல்பட்ட அலெகஸ் ஜீவதாஸ், கிறிஸ்துதாஸ் போன்ற அதிகாரிகளையும் காப்பாற்றுவதற்காகவா..? என்கிற பலத்த சந்தேகம் எழுகிறது.

மேலும் தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை இருக்கும் என தமிழக முதல்வர் அவர்கள் அடிக்கடி கூறி வரும் நிலையில் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினிலும், பால்வளத்துறையிலும் முறைகேடுகள் செய்து தண்டனை பெற்றவர்கள் விபரத்தை ஊடகங்களில் வெளியிடாமல் பால்வளத்துறை செயலாளர் திரு. ஜவஹர் அவர்கள் தயங்குவது ஏன்? ஒருவேளை அந்த அதிகாரிகளை மீண்டும் அதே பணியிடத்திற்கு கொண்டு வரும் ரகசிய திட்டம் ஏதும் தீட்டப்படுகிறதா..? என்பதை பால்வளத்துறை செயலாளர் அவர்கள் விளக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.

பால் உற்பத்தியாளர்களின் உழைப்பில் உருவான ஆவினில் கடந்த 10ஆண்டுகால ஆட்சியில் நடைபெற்றுள்ள சுமார் 1000ம் கோடி ரூபாய்க்கு மேலான ஊழல் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்து அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக ஆவினை ஏமாற்றி சம்பாதித்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும், அதன் மூலம் இழப்பில் இருக்கும் ஆவின் நிறுவனம் காப்பாற்றப்படும், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் நிலை நிறுத்தப்படும் என்று நம்பிய நிலையில் பால்வளத்துறை மற்றும் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகள் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியையும், அவரது பினாமியாக செயல்பட்ட ஊழல் அதிகாரிகளையும் காப்பாற்ற போராடுகிறதோ.? என்கிற சந்தேகம் அழுத்தமாக எழுகிறது

எனவே அலெக்ஸ் ஜீவதாஸ் மீது எடுக்கப்பட்ட பணியிடை நீக்கம் மற்றும் கிறிஸ்துதாஸ் மீது எடுக்கப்பட்ட பதவியிறக்க நடவடிக்கை குறித்த ஆணைகளை வெளிப்படைத்தன்மையோடு உடனடியாக ஊடகங்களில் வெளியிட்டு, உண்மையை நிலையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என பால்வளத்துறை செயலாளர் மற்றும் பால்வளத்துறை ஆணையர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்…