Sat. Nov 23rd, 2024

பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது அபரிதமான வரவேற்பு கிடைக்கும் என்று நப்பாசையுடன் டெல்லி சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும் பேயறைந்த மாதிரி இறுகிய முகத்துடன்தான் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்பியதாக டெல்லியிலேயே வசிக்கும் அதிமுக முன்னணி நிர்வாகி ஒருவர் நல்லரசுக்கு ரகசிய தகவல் அனுப்பியுள்ளார்.

வாட்ஸ் அப்பில் வந்த விரிவான தகவல் இதுதான்…

அதிமுக இரட்டை தலைமையை பிரதமர் மோடி சந்திக்க விருப்பம் தெரிவித்து அழைப்பு விடுக்கவில்லை என்பதிலேயே முதல் ஏமாற்றம் தொடங்குகிறது.  அப்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டிருந்தால் என்னென்ன மரியாதை இரட்டையர்களுக்கு கிடைத்திருக்கும் என்பதை பார்ப்போம்.

முதலில் நாடாளுமன்ற வளாகத்தில் இரட்டையருடனான சந்திப்பு நடந்திருக்காது. காலை அல்லது இரவு நேரத்தில் பிரதமர் இல்லத்தில் வைத்து அதிமுக இரட்டையர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசியிருப்பார். அங்கு விரிவாக அரசியல் பேசப்பட்டிருக்கும். ஆனால், சந்திப்புக்கு தேர்ந்தெடுத்த இடமோ, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அலுவலகம். .இ.பி.எஸ்.ஸும் ஓபிஎஸ். ஸூம் டெல்லியில் ஞாயிறு அன்று இருந்தார்கள்.. அன்றிரவே அவர்களை தனது இல்லத்திற்கு அழைத்து பிரதமர் பேசி இருக்கலம்.. ஆனால் அதை தவிர்த்து நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் நாளில் அங்கு சந்திப்புக்கு நேரம் ஒதுக்கி இருவரின் மதிப்பை குறைத்து இருக்கிறார் பிரதமர்..

பொதுவாக அங்கு யாரை சந்தித்தாலும் அதிக நேரம் அரசியல் பேசும் பழக்கத்தை பிரதமர் மோடி கடைப்பிடிப்பதில்லை என்பது டெல்லியில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், மூத்த ஊடகவியாளர்களுக்கும் நன்றாக தெரியும். எனவே, பிரதமருடனான இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். சந்திப்பு என்பது பத்து நிமிடங்களுக்குள் முடிந்திருக்கிறது.

அதில், அதிமுக உட்கட்சி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒன்றிரண்டு நிமிடங்கள் பிரதமர் மோடி கடுமையாக பேசியிருக்கிறார் என்றுதான் தகவல் கிடைத்துள்ளது. அடுத்து தமிழக நலன் சார்ந்து, இரட்டையர்கள் கொடுத்த கோரிக்கை மனுவை மேலோட்டமாக கூட பிரதமர் படித்துப் பார்த்திருப்பாரா என்பது கூட சந்தேகம்தான்.

அதிமுக வலியுறுத்திய கோரிக்கைகளை பரிசீலிப்பது போல மத்திய அரசு காட்டிக் கொள்ள விரும்பி இருந்தால் இருவருடன் சென்ற அதிமுக எம். பி. க்கள், முன்னாள் அமைச்சர்கள் அனைவருடனும் கலந்து பேசிய இருப்பார் பிரதமர் மோடி.. ஆனால், பிரதமரின் அஜென்டாவே வேற…..

பாஜக.வுடன் கூட்டணி அமைத்ததால்தான் அதிமுக.வுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் அளித்த பேட்டி விவகாரத்தை சுட்டிக்காட்டி கடுமையாக பிரதமர் எச்சரித்துள்ளார். மேலும், சசிகலா விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி கையாளும் விதத்தின் மீதான அதிருப்தியையும் வெளிப்படுத்தி, அதிமுக உட்கட்சிப் பூசலுக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு, தமிழக பாஜக.வுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக தலைவர் அண்ணாமலை முன்னெடுக்கும் ஆளும்கட்சிக்கு எதிரான போராட்டங்களுக்கு அதிமுக ஆதரவு தர வேண்டும் என கடுமை காட்டியுள்ளார் பிரதமர் மோடி என்பதுதான் நம்பகமான தரப்பில் இருந்து கிடைத்துள்ள தகவல் ஆகும்.

இரண்டு பேரையும் தலைவராகவே பிரதமர் மோடி அங்கீகரிக்கவில்லை.. அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போது பிரதமர் அலுவலகத்தில் இதற்கு முன்பு நடந்த சந்தப்புகளில் இருவருக்கும் தனித்தனி இருக்கைகள் வழங்கி மரியாதை கொடுக்கப்பட்டது.. நேற்று அந்த மரியாதை யும் மிஸ்ஸிங்..

பிரதமருடான சந்திப்புக்குப் பிறகு தமிழ்நாடு இல்லம் திரும்பிய இரட்டையர்களான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆகிய இருவர் முகத்தில் துளி கூட மகிழ்ச்சியை பார்க்க முடியவில்லை.. பிரதமரின் சந்திப்பு சந்தோஷம் அளிக்கவில்லை என்பதை வழக்கம் போல ஓ.பி.எஸ்., தனது வார்த்தைகளாலேயே வெளிப்படுத்தியிருக்கிறார்.

தனக்கு நெருக்கான அதிமுக முன்னணி நிர்வாகிகளிடம், பிரதமரை சந்திக்க வேண்டும் என்று நான் (ஓ.பி.எஸ்) அப்பாயின்ட்மென்ட் கேட்கவில்லை. எனது மகன் ரவீந்திரநாத்திற்கு, எம்.பி. கோட்டாவில் ஒதுக்கப்பட்டுள்ள புது வீட்டுக்கு பால் காய்ச்சி குடியேறும் நிகழ்ச்சிக்காகதான் டெல்லிக்கு பயணமானேன். நான் டெல்லி போகிறேன் என்பதை அறிந்து கொண்டே, அவசர, அவசரமாக எடப்பாடி பழனிசாமியும் டெல்லி பயணத்திற்கு திட்டமிட்டு, பிரதமரை சந்திப்பதற்கு அனுமதி கேட்டு வாங்கியிருக்கிறார்.

அப்போது கூட, பிரதமரை சந்திக்க செல்லும் பிரமுகர்கள் யார், யார் என்பதை உரிய முறையில் பிரதமர் அலுவலகத்திற்கு தெரிவிக்காமல் சொதப்பி விட்டார்கள். அவசர கோலத்தில் டெல்லி பயணத்தை திட்டமிட்டதால், நாடாளுமன்ற வளாகத்திற்குள் சென்று பிரதமரை சந்திப்பதற்கு வழங்கப்படும் கார் பாஸ் (அனுமதிச் சீட்டு) கூட போராடி தான் வாங்க வேண்டியிருந்தது. அதுவும் கூட குறித்த நேரத்தில் கிடைக்காததால், பிரதமரை சந்திக்கும் நேரம் கடந்து விடுமோ என்ற அச்சத்தோடுதான் காத்திருந்தோம் என்றெல்லாம் ஓ.பி.எஸ். புலம்பியுள்ளார்.

ஆக, மொத்தத்தில், பிரதமரை சந்திக்க இ.பி.எஸ்., தான் மெனக் கெட்டிருக்கிறார் என்பதும், முதல்வராக அவர் இருந்த போது டெல்லியில் ராஜ கம்பளம் விரித்து பிரதமர் அலுவலகம் வரவேற்பு வழங்கியது போன்ற எந்தவொரு உபசரிப்பும் இன்றைய சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்.ஸுக்கும், 66 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள பிரதான கூட்டணிக் கட்சியான அதிமுக.வின்  ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.ஸுக்கும் பிரதமர் அலுவலகம் வழங்கவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ்., ஆகிய இருவருக்கு மட்டுமே தன்னுடனான சந்திப்பின்போது முக்கியத்துவம் கிடைத்தது மாதிரி ஆகிவிடக் கூடாது என்பதற்காக எம்.பி.க்கள் தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன், தேனி ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம் என ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளையும் சேர்ந்து புகைப்படம் எடுக்க வைத்துள்ளார் பிரதமர் மோடி.

அந்தவகையில், அதிமுக என்ற கட்சி இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஸுக்கு மட்டுமே சொந்தம் இல்லை என்பதையும், அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைந்த இயக்கம்தான் அதிமுக என்பதையும் சொல்லாமல் சொல்லியுள்ளார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி வெளிப்படுத்திய உணர்வுகளால் சோர்ந்து போனதால்தான், தமிழ்நாடு இல்லம் திரும்பிய பிறகும் கூட இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் ஒன்றிரண்டு வார்த்தைகள் கூட மகிழ்ச்சியாக பேசிக் கொள்ளவில்லை. சுரத்தே இல்லாமல்தான் செய்தியாளர்களுக்கு இ.பி.எஸ். பேட்டியளித்தார். பிரதமருடான சந்திப்பின் போது ஓ.பி.எஸ். மீது தனி கரிசனம் பிரதமர் காட்டியிருந்தால், அந்த உற்சாகத்தில் இ.பி.எஸ்., பேட்டியளித்த போது குறுக்கிட்டு அதிமுக.வின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பி.எஸ். பல்வேறு கருத்துகளை உற்சாகமாக தெரிவித்திருப்பார்.

ஆனால், இ.பி.எஸ்., பேட்டி கொடுத்து முடிக்கும் வரை உணர்ச்சியற்ற முகத்துடனேயே ஓ.பி.எஸ்., நின்றுக் கொண்டிருந்த கோலத்தை பார்த்தால், பிரதமர் மோடியிடம் இரட்டை தலைவர்கள் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்றாக புரிந்து கொள்ளலாம்.  

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக டெல்லியில் பிரதமரை சந்தித்து விட்டு நிருபர்களிடம் பேசிய இந்த. இ. பி. எஸ், சசிகலா பற்றிய கேள்விக்கு திமிராக பதிலளித்தார்.. இந்த முறை சசிகலா பற்றிய கேள்விக்கு வாயையே திறக்கவில்லை இ.பி. எஸ். அந்தளவுக்கு பாடம் நடத்தி அனுப்பியுள்ளார் பிரதமர் மோடி..

இனிமேல், இ.பி.எஸ்.ஸோ, ஓ.பி.எஸ்.ஸோ டெல்லிக்கு வருவது என்பதும், பிரதமரை சந்திப்பது என்பதும் லேசுபட்ட விஷயமாக இருக்காது. இரண்டு தலைவர்களும் தமிழகம் திரும்பிய பிறகு அடுத்தடுத்த நாட்களில் பேசுகிற பேச்சை வைத்து, டெல்லியில் பிரதமர் மோடியுடான சந்திப்பு, சாதனையா, சறுக்கலா என்பதை புரிந்து கொள்ள முடியும்.

நல்லரசுக்கு நான் அனுப்பி வைக்கும் தகவல்களைப் போல, பிரதமருடனான இரட்டையர் சந்திப்பு குறித்த தகவல்களும் சென்னையில் உள்ள வி.கே.சசிகலாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம். அந்த தகவல்களை கேட்டு உற்சாகமடையும் வி.கே சசிகலா அடுத்து வெளியிடும் வீடியோவில் இரட்டையர்களைப் பற்றி எந்தவிதமான அர்ச்சனைகளை செய்கிறார் என்பதை பொருத்தும், இரட்டையரின் டெல்லி பயணத்தின் சங்கதி வெளிச்சத்திற்கு வருவதுடன், அதிமுக தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இரட்டை தலைவர்களின் அரசியல் எதிர்காலம் யார் கையில் இருக்கிறது என்பதை ஓரளவுக்கு டெல்லி பயணம் உணர்த்திவிட்டதாகதான் தெரிகிறது. அதிமுக தலைவர்களின் டெல்லி விசிட் குறித்து ஆதியும் அந்தமுமாக தமிழக அரசின் உளவுத்துறை அதிகாரிகளும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சீக்ரெட் ரிப்போர்ட் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.அந்த அறிக்கையை படித்துப் பார்த்தால் உள்ளபடியே முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சந்தோஷம்தான் ஏற்படும் என்று சூசகமாக கூறி வாட்ஸ் அப் ஸ்டோரியை முடித்திருந்தார் டெல்லி அதிமுக முன்னணி நிர்வாகி..

நாட்டாமை காலை வாரிட்டாரோ….