Sat. Nov 23rd, 2024

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற நாளில் இருந்து மீண்டும் உற்சாகமாகிவிட்டார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தனது தலைமையை பெரும்பான்மையான அதிமுக முன்னணி நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டதால் தெம்பாகியிருக்கும் இ.பி.எஸ்., திமுக ஆட்சியை எதிர்ப்பதற்கான ஆயத்தப்பணிகளை எல்லாம் தொடங்கிவிட்டார் என்கிறார்கள் அவரின் நம்பிக்கைக்குரிய விசுவாசிகள்.

அவர்களில் ஒருவரிடம் பேசினோம்…

சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் சோர்ந்துப் போயிருந்த எடப்பாடிபழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தவுடன் மீண்டும் உற்சாகமாகிவிட்டார். தேசிய கொடி கட்டிய கார், போலீஸ் பாதுகாப்பு, பைலட் வண்டி ஆகியவை கிடைத்தவுடன், பழையபடி முதலமைச்சர் என்ற அந்த பதவிக்குரிய கெத்து வந்துவிட்ட மாதிரிதான் அவரின் நடை, உடை பாவனை எல்லாம் இருக்கிறது.

இ.பி.எஸ்., சென்னையில் இருந்த போதும் சரி, சேலத்தில் இருக்கும் போதும் சரி, தற்போதைய தேர்தலில் வெற்றிப் பெற்ற எம்.எல்.ஏ.க்கள், தோல்வியடைந்த வேட்பாளர்கள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள் என பலர் நாள்தோறும் வந்து அவரை சந்தித்துவிட்டு செல்கிறார்கள்.

பொன்னாடை, மாலை மரியாதை எல்லாம் நாள்தோறும் கிடைத்து வருவதால், முதலமைச்சர் பதவி போனாலும், அப்போது கிடைத்த மரியாதை எல்லாம் இப்போதும் கிடைக்கிறதே என்ற பூரிப்பு அவரிடம் காணப்படுகிறது.

அந்த உற்சாகத்தில், தன்னை வந்து சந்திக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம் ஆர்வமாக பேசுகிறார். திமுக ஆட்சிக்கு பயந்து, ஒடுங்கியெல்லாம் நாம் அரசியல் பண்ண வேண்டியதில்லை. கொரோனோ தொற்றில் இருந்து மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்காகதான் திமுக ஆட்சிக்கு எதிராக பேசாமல் மௌனம் காத்துக் கொண்டிருக்கிறேன்.

தன்னைப் போலவே நீங்களும் (முன்னாள் அமைச்சர்கள் எல்லாம்) அமைதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. முந்தைய அம்மாவின் ஆட்சியையோ அல்லது தனது தலைமையிலான நான்காண்டு ஆட்சியைப் பற்றியோ ஆளும்தரப்பினர் குற்றம்சாட்டினால், கொரோனோ காலம் என்று காத்திருக்காமல் பதிலடி கொடுங்கள் என்று உசுப்பேற்றி வருகிறார் இ.பி.எஸ்.

அதன் காரணமாகதான், செல்லூர் ராஜு, ஜெயக்குமார் ஆகியோர் திமுக ஆட்சிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்க தொடங்கிவிட்டார்கள். அதுபோல, அதிமுக எம்.எல்.ஏ.க்களிடமும் மக்கள் நலத்திட்டப் பணிகள் என்றால், உங்கள் தொகுதியில் உங்களுடைய அதிகாரத்தை விட்டுக் கொடுக்காதீர்கள் என்று கொம்பு சீவி விடுகிறார். இ.பி.எஸ்.ஸின் பேச்சை கேட்டு சூடாகும் சில எம்.எல்.ஏ.க்களும், தங்களுடைய தொகுதியில் கொரோனோ நிதி வழங்குவதில் திமுக நிர்வாகிகளோடு மல்லுக்கு நிற்கிறார்கள்.

வெளிப்பார்வைக்கு இ.பி.எஸ்., அமைதியாக இருப்பதாக தோன்றினாலும், தேர்தல் தோல்வியால் தொய்வுற்று இருக்கும் அதிமுக நிர்வாகிகளை சுறுசுறுப்பாக்க தொடர்ந்து எதிர்ப்பு அரசியல் பாடங்களை நடத்திக் கொண்டிருக்கிறார் இ.பி.எஸ்., கடந்த பல நாட்களாக இ.பி.எஸ்.ஸிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பார்த்து அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலர், புத்துணர்வு பெற்றாலும் கூட, இ.பி.எஸ்.ஸின் நம்பிக்கைக்கு வேட்டு வைக்கும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் பலர், திமுக ஆட்சியில் தங்களுக்கு எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது என்று உள்ளடி வேலைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது என்றார் எடப்பாடி பழனிசாமியின் விசுவாசி..

உள்ளடி வேலையா? இதென்ன புது குண்டா இருக்கே? என்று கேட்டோம்.. மெல்லிய விரக்தியோடு மீண்டும் அவரே பேசினார்.

இ.பி.எஸ்., முதல்வராக இருந்த போது, அவரது வலது, இடதாக இருந்த இரண்டு அமைச்சர்கள், தேர்தல் தோல்விக்குப் பிறகு தங்கள் மீது வழக்கு பாய்ந்திடுமோ என்ற பயத்தில் டெல்லி பாஜக மேலிடத்திடம் சரணாகதி அடைந்திருக்கிறார்கள்.

இதேபோல, வட மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், தென் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும், அவரவருக்கு அறிமுகமான தொழிலதிபர்கள் மூலம் டெல்லி பாஜக மேலிடத்திற்கு தூது விட்டிருக்கிறார்கள்.

அதேநேரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான உறவு வட்டம், நண்பர்கள் வட்டாரம் என புதிது புதிதாக தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள இரவு பகல் பாராமல் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். கிட்டதட்ட இ.பி.எஸ்.ஸை தவிர்த்து பெருங்கூட்டமே திமுக ஆட்சியின் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க, அவரவர் சக்திக்கு ஏற்ப ஏதாவது ஒருவழியில் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிபட்டவர்களை நம்பிதான் திமுக ஆட்சியை எதிர்த்து அரசியல் செய்வோம் என்று முஷ்டியை உயர்த்த தொடங்கியிருக்கிறார் இ.பி.எஸ். அவருக்கு ஆதரவான கூட்டம் போல தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் முன்னாள் அமைச்சர்கள் பலர், திமுக ஆட்சியோடு இணக்கமாக போக மறைமுகமாக காய் நகர்த்துவது கூட தெரியாமல் வெள்ளந்தியாக இருக்கிறாரே இ.பி.எஸ் என்பதுதான் எங்களுக்கு வேதனையாக இருக்கிறது என்றார் அந்த விசுவாசி.

நான்காண்டு காலம் முதல்வராக இருந்தவருக்கு, தன்னை சுற்றி இருப்பவர்கள் யார் விசுவாசி? யார் துரோகி? என்று கூடவா அடையாளம் கண்டு கொள்ள முடியாது என்றோம்..

சிறிய விக்கலுக்குப் பிறகு மீண்டும் பேசினார் இ.பி.எஸ். விசுவாசி.

என்னத்த சொல்ல. அரசியலில் நீண்ட அனுபவம் கொண்டவருக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தவுடன் யூகிக்கக் கூடிய சக்தி போயிடுச்சோ என்னவோ.. தன்னைச் சுற்றியிருக்கிற அரசியல்வாதிகளில் போலி யார்? என்று கண்டுபிடிப்பது ஒருபக்கம் இருக்கட்டும், கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் இருப்பவர்கள் எல்லோரும் விசுவாசிகளாக இருக்கிறார்களா ?என்றே இ.பி.எஸ்.ஸுக்கு தெரியவில்லை.

அதேபோல நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், செய்திப் பிரிவில் இருப்பவர்களும் ஊடக அறத்தோடு இருப்பவர்களா ? என்று கூட இ.பி.எஸ்.ஸால் கண்டறிய முடியவில்லை.

கடந்த வாரத்தில் ஒரு நாள் தனது உதவியாளர் மூலம் நியூஸ் ஜெ செய்திப்பிரிவின் நிர்வாகிக்கு ஒரு தகவலை சொல்லியுள்ளார் இ.பி.எஸ்.. ஆட்சிப் போயிடுச்சி என்று கவலைப்பட வேண்டாம். தொலைக்காட்சி தொடர்ந்து செயல்படும். பணி நிரந்தரம், சம்பளம் பற்றி கவலைப்படாமல் திமுக ஆட்சிக்கு எதிரான செய்திகளை விரிவாக போடுங்கள். ஆளும்கட்சி தரப்பில் இருந்து எந்த தொந்தரவு வந்தாலும் உடனே தன்னை (இ.பி.எஸ்) தொடர்பு கொள்ளுங்கள், பார்த்துக் கொள்வோம் என்று தைரியமூட்டியிருக்கிறார் என்றார் அந்த விசுவாசி.

எவ்வளவு நல்ல மனுஷர் இ.பி.எஸ். அதிமுக கட்சி தொலைக்காட்சியில் வேலைப் பார்க்கிற ஊழியர்கள், ஆளும்கட்சியின் மிரட்டலை கண்டுப் பயப்பட வேண்டாம் என்று தைரியமூட்டுகிற ஒரு தலைவர், ஒரு முதலாளி கிடைப்பாரா என்றோம்.

சார், எரிச்சல் படுத்தாதீர்கள்..இ.பி.எஸ்.ஸின் உதவியாளர் யாரை தொடர்பு கொண்டு பேசினாரோ, அந்த செய்திப்பிரிவு நிர்வாகி, கலைஞர் தொலைக்காட்சியில் வேலை பெறும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் சென்னையில் உள்ள எல்லா ஊடகவியலாளர்களுக்கும் தெரிந்திருக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். அவரின் சிபாரிசின் பேரில் நியூஸ் ஜெ.வில் வேலைபார்த்துக் கொண்டிருக்கும் அத்தனை பேருமே, கலைஞர் டிவிக்கு அந்த நிர்வாகி போனால் அவரின் பின்னாலேயே மூட்டையை கட்டிவிடுவார்கள்.

எங்கு வேண்டுமானாலும் வேலைப் பார்க்கட்டும். சம்பளம் கொடுக்கிற நிறுவனத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டாமா? இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல், தன் முன் வந்து நின்று பணிவு காட்டினால் நம்பிவிடுகிறார் எடப்பாடியார். ஒவ்வொருவராக துரோகம் இழைத்துவிட்டு வெளியேறும்போதுதான் இ.பி.எஸ்.ஸுக்கு புரியும். தன்னைச் சுற்றியிருப்பது ஏமாற்றுக் கூட்டம் என்பது என்று கூறியவாறே விடை பெற்றார் அந்த இ.பி.எஸ். ஸின் விசுவாசி…