கோவை மாவட்ட அதிமுக.வைப் பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளாக தனிக்காட்டு ராஜாவாக இருந்து வந்தவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. முதலமைச்சர் பதவியை இழந்த எடப்பாடி பழனிசாமிக்கு வலது கையாக திகழ்ந்த அவர், கடந்த நான்காண்டுகளில் கோவை மாவட்டத்தில் சீனியர்களாக இருந்த அதிமுக முன்னாள் நிர்வாகிகளை ஒவ்வொருவராக கட்டம் கட்டி படுகுழியில் தள்ளினார்.
அந்த வகையில், முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுச்சாமி, செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர்கள் எஸ்.பி.வேலுமணியின் ஆதிக்கத்தை தகர்க்க துணிந்துவிட்டார்கள் என்று கூறுகிறார்கள் கோவை மாவட்ட அதிமுக முன்னனி நிர்வாகிகள்.
கிணத்துக்கடவு எம்.எல்.ஏ.வாகவும் அதிமுக.வின் அமைப்புச் செயலாளராகவும் முன்னாள் அமைச்சராகவும் உள்ள செ.தாமோதரன், முன்னாள் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ ஆகியோர் மீது தனிப்பட்ட முறையில் அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலர் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்.
இவர்களது ஆதரவாளர்கள் பெரும்பான்மையானோர், கடந்த நான்காண்டுகளாக எஸ்.பி.வேலுமணியால் பழிவாங்கப்பட்டவர்கள். அதனால், அதிமுக ஆட்சியை இழந்த பிறகு இனிமேலும் எஸ்.பி.வேலுமணியின் ஆணவப் போக்கிற்கு ஏன் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என கலகக் குரல் எழுப்ப தொடங்கிவிட்டனர்.
அதற்கு காரணமாக அவர்கள் முன் வைக்கும் வாதம், முன்னாள் அமைச்சரான செ.ம.வேலுச்சாமி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பெரிதும் ஆர்வம் காட்டினார். அவரின் கட்சி விசுவாசத்திற்கு மரியாதை தரும் வகையில், பல்லடம் தொகுதியில் அவரை வேட்பாளராக அறிவிக்க விரும்பினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், செ.ம.வேலுச்சாமி அரசியலில் தலையெடுக்கவே கூடாது என்ற வெறியோடு இருந்த எஸ்.பி.வேலுமணி, அதற்கு முட்டுக்கட்டைப் போட்டார்.
அதிமுக மீதும், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா மீதும் மாறாத விசுவாசம் கொண்ட செ.ம.வேலுச்சாமியை திட்டம் போட்டு கழுத்தறுத்துக் கொண்டிருக்கும் எஸ்.பி.வேலுமணியின் கொட்டத்தை அடக்க இதுதான் சரியான தருணம் என்று கூறுகிறார்கள் கோவையில் உள்ள அதிமுக முன்னணி நிர்வாகிகள்.
இதுபோல, எஸ்.பி.வேலுமணியால் கடந்த நான்காண்டுகளில் பழிவாங்கப்பட்ட அதிமுக முன்னணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் (அமமுக.வில் உள்ளவர்களும்) கடந்த பல நாட்களாக ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.பி.வேலுமணியின் எதேச்சதிகார போக்கிற்கு எதிராக முதல் கல்லை வீசியவர், அ.தி.மு.க இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில துணைத் தலைவராக இருந்த விஷ்ணுபிரபு என்பவர்தான்.
அதிமுக.வில் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஜனநாயகம் இல்லை. மாவட்டஅமைச்சர்களாக இருப்பவர்களின் ஆதிக்கம் ஓங்கிவிட்டது. இளைஞர்களுக்கு, விசுவாசிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. 2021 தேர்தல் தோல்வியில் இருந்தும் அதிமுக முன்னாள் அமைச்சர்களும், அதிமுக.வின் இரட்டை தலைமையும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று ஆவேசமாக அறிக்கை வெளியிட்டுவிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக.வில் ஐக்கியமாகிவிட்டார்.
எஸ்.பி.வேலுமணியின் அதிகாரத் திமிருக்கு எதிராக விஷ்ணுபிரபு வீசிய கல்லால் உருவான கலக அலை அடஙகிப் போகாமல், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக பேரலையாக எழுந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது.
அமைச்சர் பதவியையும் ஆட்சியையும் இழந்து விட்ட இந்த தருணத்தில் தனக்கு எதிராக அதிமுக முன்னாள் நிர்வாகிகள் ஒன்றிணைவதைப் பார்த்து எஸ்.பி.வேலுமணி, திகிலடித்துக் கிடக்கிறார். அவரின் பரிதாப நிலையைப் பார்த்து அவரது விசுவாசிகள் கூட்டம் ரத்தக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது. அவர்களில் ஒருவரிடம் பேசினோம். இருதலைக் கொள்ளி எறும்பு போல எஸ்.பி.வேலுமணி துடித்துக் கொண்டிருக்கும் வேதனை கதையை விவரித்தார்.
திமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்குகள் விரைவில் விசாரிக்கப்பட்டு, அவரை சிறையில் தள்ளுவதற்கு திமுக அரசு தயாராகி வரும் இந்தநேரத்தில், மாவட்ட அளவில் அதிமுக நிர்வாகிகளின் ஆதரவும் இல்லையென்றால் தன்னுடைய அரசியல் வாழ்வே அஸ்தமனமாகிவிடும் என்று அஞ்சுகிறார் எஸ்.பி.வேலுமணி.
வழக்கு விசாரணை, சிறைச்சாலை வாழ்க்கை என தன்னை அலைக்கழிக்கும் சமயமாக பார்த்து, அதிமுக எதிர்த்ரப்பினர், தனது செல்வாக்கை சிதைத்துவிட்டால் என்ன செய்வது என்று கலங்கி போயிருக்கிறார் எஸ்.பி.வேலுமணி.
திமுக.வின் கோபத்தை தணிக்கும் விதமாகதான், தன் வீராப்பை எல்லாம் விட்டுவிட்டு திமுக அமைச்சர்கள் சக்கரபாணி, க.ராமச்சந்திரன் ஆகியோர் கோவையில் கொரோனோ ஆய்வுக் கூட்டத்தை கூட்டிய போது அதில் போய் கலந்துகொண்டார். தான் மட்டும் தனியே சென்று கலந்துகொண்டால், தன்னால் பழிவாங்கப்பட்ட அதிமுக முன்னணி நிர்வாகிகள் கேவலமாக விமர்சனம் செய்வார்கள் என்பதால், மற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்களான செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், அம்மன் அர்ச்சுணன், அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், அமுல்கந்தசாமி, வி.பி.கந்தசாமிரத்தின் ஆகியோரையும் உடன் அழைத்துச் சென்றார்.
எஸ்.பி.வேலுமணியின் பாசாங்கை எல்லாம் திமுக அமைச்சர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அழையா விருந்தாளிகளாக திமுக அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டது முன்னாள் அமைச்சர்களான தற்போதைய எம்.எல்.ஏ.க்களுக்கும், சில அதிமுக எம்.எல்.ஏ.க்களும் பிடிக்கவில்லை. அன்றைக்கு அவர்கள் எதிர்ப்பை காட்டவில்லை என்றாலும், கடந்த சில நாட்களாக அவர்களது மனங்களிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஊழல் வழக்குகளில் இருந்து எஸ்.பி.வேலுமணி தப்பிக்க, தங்களை பகடை காயாக பயன்படுத்த தொடங்கிவிட்டார் என்பதை உணர்ந்துகொண்ட அவர்கள், எஸ்.பி.வேலுமணியின் கோட்டையில் இருந்து எகிறி குதித்து ஓட தயாராகிவிட்டார்கள். அதேபோல மற்ற அதிமுக முன்னணி நிர்வாகிகளும், எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான அணிக்கு தலைமை ஏற்கும்படி முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவரும் சஞ்சலத்தில்தான் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாக தனக்கு எதிராக அதிமுக முன்னணி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியிருப்பதை பார்த்து, கடந்த பல நாட்களாக நிம்மதியாக தூக்க கூட முடியாமல் எஸ்.பி.வேலுமணி படும் அவஸ்தையை கண் கொண்டு பார்க்க முடியவில்லை, என்று உண்மையான விசுவாசத்தோடு சோக கீதம் வாசித்தார்.
பரமசிவன் கழுத்துப் பாம்பு என்ன ஆட்டம் போட்டது?