அரசு மருத்துவமனையில் 15 நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த போதும் ஏற்படாத முன்னேற்றம், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 20 மணிநேரத்திற்குள் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மையானால், அமைச்சர் ஆர்.காமராஜின் தற்போதைய நிலை குறித்து வீடியோ வெளியிடுவாரா சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் என்று கேள்வி எழுப்புகிறார்கள் ஓய்வுப் பெற்ற அரசு மருத்துவர்கள்.
கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகளில் இந்தியாவிற்கே தமிழ்நாடு தான் முன்னோடியாக இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும் மார்தட்டிக் கொண்டு வருகிறார்கள். கொரோனோவால் பாதிக்கப்பட்ட பல லட்சம் மக்கள் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்ட தரமான சிகிச்சைகளால் குணமடைந்து வீடு திரும்பியதாக பெருமை பேசி வருகிறார், அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள வசதிகள், வழங்கப்படும் சிகிச்சை முறைகளைப்போல, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் வழங்கப்படுவதில்லை என்றும், இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது என்பதும் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீராப்புப் பேச்சு.. இப்படி, அவர் கடந்த 4 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறைப் பற்றி அவர் பெருமைப்பட்டுக் கொண்டதற்கு எல்லாம், சும்மா பம்மாந்து பேச்சு என்று, ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பதைப் போல, கடந்த இரண்டு நாள்களாக அரங்கேறி வரும் நிகழ்வுகள் வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக அமைந்துள்ளது என்கிறார்கள், ஓய்வுப் பெற்ற அரசு மருத்துவர்கள்.
ஏழை எளிய மக்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டால் அரசு மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள். ஆனால், சாதாரண உடல்நலம் பாதிப்புக்குகூட, கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், அமைச்சர்கள் என அரசியல் தலைவர்கள் எல்லோரும் தனியார் மருத்துவமனைகளில் தஞ்சம் அடைகிறார்களே, ஏன்?என்ற கேள்வி சாதாரணமாகவே எழுப்பப்படும் இந்த நேரத்தில், அரசு மருத்துவமனையை முழுமையாக நம்பி, உயிர்க்கொல்லி நோயான கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் ஒருவர், சிகிச்சைக்காக அங்கு சேர்ந்தார். ஆனால், அவரைக் கூட குணமாக்கி வீட்டிற்கு அனுப்பாமல், அவருக்கு உயர்தர சிகிச்சை தேவைப்படுகிறது என்று கூறி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்றால், அரசு மருத்துவமனையின் தரம் குறித்து இத்தனை வருடங்கள் கட்டியெழுப்பப்பட்ட பிம்பங்கள் அத்தனையும் போலியா? என்ற கேள்வி இயற்கையாகவே எல்லோர் மனங்களிலும் எழுந்துவிட்டது.
உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கொரோனோவால் பாதிக்கப்பட்டபோது, கடந்த 5 ஆம் தேதி சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். கொரோனோ சிகிச்சையைப் பொறுத்தவரை உலகளவில் ஒரே மாதிரியான சிகிச்சைக் காலம்தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முதல்வாரத்தில் நோயின் தாக்கத்தை கண்டுபிடித்து, அடுத்தடுத்த வாரங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு 21 வது நாளுக்குள், கொரோனோ பாதிப்பில் இருந்து நோயாளி முழுமையாக குணமடைந்துவிடுவார்.
அந்த அடிப்படையில், கடந்த 15 நாள்களாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அமைச்சர் காமராஜ், 75 சதவிகிதம் குணமடைந்திருக்க வேண்டும். ஆனால், இத்தனை நாள்களுக்குப் பிறகும் அவரது உடலில் முன்னேற்றம் இல்லை, ஆபத்தான நிலைக்கு செல்கிறார் என்று கூறி, அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு அவசர, அவசரமாக கடந்த செவ்வாய்கிழமை இரவு (19 ஆம் தேதி) மாற்றப்படுகிறார். அங்கு அனுமதிக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அபாயக் கட்டத்தில் அமைச்சர் இல்லை என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம், மருத்துவ சிகிச்சை அறிக்கையை ஊடகம் மற்றும் பொதுதளங்களில் வெளியிடுகிறது.
கொரோனோ பாதிப்பில் இருந்து அமைச்சர் காமராஜ் மீண்டுவிட்டார் அல்லது மீண்டு வருகிறார் என்றால், அவரே, தான் நலமுடன் இருப்பதாகவும், தமிழக மக்கள், குறிப்பாக திருவாரூர் மாவட்ட மக்கள் அச்சப்பட தேவையில்லை என்ற வகையில் நம்பிக்கை ஊட்டும் விதமாக அவரை பேச வைத்து , வீடியோவில் பதிவு செய்து அதை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று ஓய்வுப்பெற்ற அரசு மருத்துவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த விவகாரத்தில், அவர்களுக்கு ஏன் சந்தேகம் எழுகிறது என்று கேட்டபோது, அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அமைச்சர் காமராஜ், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் போது அவ்வளவு மோசமாகவா இருந்தார் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்து, அரசு மருத்துவமனையை நம்பினால் பலன் இல்லை என்பதுபோன்ற ஒரு கருத்தை இந்த விவகாரம் மூலம் எழ வாய்ப்பு உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகள் மீது மக்களுக்கு ஏற்படும் அதிருப்தியை தவிர்க்கவாவது, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜின் உடல்நிலைப் பற்றி, வீடியோ மூலம் தெளிவுப்படுத்தலாம் என்பதுதான் அவர்களுடைய வாதம். அவர்களின் வாதத்தில் 100 சதவிகிதம் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. ஏனெனில், கடந்த கால கசப்பான நிகழ்வுகள் நம் கண்முன் வந்து நிற்கிறது. பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வெற்றிவேல் போன்ற செல்வாக்கு மிக்கவர்களின் மரணமும், அதைவிட அதிர்ச்சியாக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைகண்ணுவின் இழப்பால் ஏற்பட்ட துயரமும் அதிகம். அவர்கள் எல்லாம் கொரோனோ தாக்கத்தின் உச்சத்தில் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி மறைந்தர்கள். ஆனால், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜோ, கொரோனோ தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு தமிழகம் முழுவதிலும் சில நூறு என்ற கணக்கில் இருந்த போது அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், இளமையானவர். முன்னெச்சரிக்கையாக இருந்தவர். அப்படிபட்ட அமைச்சர் ஆர்.காமராஜே, கடந்த 15 நாட்களாக தொடர் மருத்துவச் சிகிச்சையில் இருக்கிறார். அதுவும், உயர்தர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் என்றால், அரசு மருத்துவமனையில் இத்தனை நாட்களாக என்னவிதமான சிகிச்சை வழங்கினார்கள் என்று சாதாரண மக்கள் கேள்வி எழுப்பப் மாட்டார்களா?
உயிரைக் கொடுத்து இத்தனை நாட்களாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் மனநிலை எப்படியிருக்கும், கொரோனோ ருத்ரதாண்டவம் ஆடியபோது, தனியார் மருத்துவமனைகள் மூடிக்கிடக்க, 10 மாதங்களுக்கு மேலாக உயிரைக் கொடுத்து வேலைப் பார்த்த பல்லாயிரக்கணக்கான அரசு மருத்துவர்களின் தியாகம், இப்போது கேலிக்குரியதாக மாறாதா ? என்று பல கேள்விகளை எழுப்புகிறார்கள் ஓய்வுப் பெற்ற மருத்துவர்கள். இப்படி அரசு மருத்துவமனைக்கும், அரசு மருத்துவர்களுக்கும் ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்கவாவது, அமைச்சர் ஆர்.காமராஜ், நல்ல ஆரோக்கியத்தில் இருந்தால், அவரே பொதுமக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் வீடியோவில் பேசி, அதை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் ஓய்வுப் பெற்ற அரசு மருத்துவர்கள். சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் என்ன செய்ய போகிறார்?
நம்பிக்கையோடு காத்திருப்போம்..