முந்தைய அதிமுக ஆட்சியைப் பற்றியும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஊழலில் கொடி கட்டி பறந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர், கே.டி.ராஜேந்திரபாலாஜி உளளிட்டவர்களைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைதி காக்கிறாரே, காரணம் என்ன? புரியாமல் மண்டையே வெடித்துப் போய் விடும் அளவிற்கு துடித்துக் கொண்டிருக்கிறார்கள் திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள்.
அவர்களுக்கு எல்லாம் வார்த்தைகளால் பதில் சொல்லாமல், செயல்களால் பதில் சொல்லி கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று சொல்கிறார்கள் அவரின் ஒவ்வொரு அசைவிற்குள்ளும் மறைந்து கிடக்கும் வியூகங்களை மோப்பம் பிடிப்பதில் கில்லாடிகளான திமுக முன்னணி தலைவர்கள்.
அவர்களில் நமக்கு அறிமுகமான ஒருவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.. அவர் கூறிய தகவல்கள் அனைத்தும், அதிர்ச்சி ரகம். அதிமுக.வே இல்லாத சட்டப்பேரவையை உருவாக்குவதற்கு ஸ்கெட்ச் போட்டு பக்காவாக காய் நகர்த்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கூறி நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்தார, அவர்.
முகத்தில் துளிர்த்த வியர்வைத் துளிகளை துடைக்கும் முன்பாகவே, வழக்கத்திற்கு மாறான உற்சாகத்தோடு பேசத் தொடங்கினார் அந்த திமுக முன்னணி தலைவர்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரை நிகழ்வுகளிலும் தேர்தல் பிரசாரங்களிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறக்காமல் குறிப்பிட்ட ஒரு விஷயம். அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்களை சிறைக்கு தள்ளாமல் விடமாட்டேன் என்பதுதான்.
மே 7 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் அதற்கான பணிகளைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் துரிதப்படுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், கொரோனோ பேரிடர் மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிக்கிறது. அதனால், கொரோனோவை கட்டுப்படுத்தும் பணியில் முழுமையான கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆனால், கொரோனோ தொற்றை சமாளிக்க முடியாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திணறி வருகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, மருத்துவர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எல்லோரும் வெளிப்படையாகவே கிண்டலடிக்க தொடங்கிவிட்டார்கள்.
இப்படிபட்ட தகவல்கள் எல்லாம் நம்பிக்கைக்குரிய பிரமுகர்களிடம் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்தவுடன்தான், அவரது அரசியல் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார். கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் இடைவிடாது கவனத்தை செலுத்தி வரும் அதே வேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஒருவர் கூட ஊழல் புகாரில் இருந்து தப்பி விடக் கூடாது என்று ஸ்கெட்ச் போட்டு, அதையும் சத்தமில்லாமல் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் எங்களுக்கு கிடைத்திருக்கும் ரகசிய தகவல்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு டிஜிபி அந்தஸ்தில் உள்ள பி.கந்தசாமி ஐபிஎஸ் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் சாகசங்கள் கடந்த ஒருவாரமாக சமூக ஊடகங்களில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கும் தெரியும். தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையே iகைது செய்தவர்தான், டிஜிபி கந்தசாமி ஐபிஎஸ்.
2010-ஆம் ஆண்டில் சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் குஜராத் உள்துறை அமைச்சராக அப்போது பதவி வகித்த அமித்ஷாவை கைது செய்த சிபிஐ டீமின் தலைவராக இருந்தவர்தான் டிஜிபி கந்தசாமி. அமித்ஷாவை கைது செய்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நாலாபுறமும் மிரட்டல்கள் எழுந்தபோதும் கூட, அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் கைது செய்த இவருக்கு, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட ஊழல் கூடாரம் எம்மாத்திரம்?
ஊழல் தடுப்புத்துறையின் இயக்குனரே அதிரடிக்கு அஞ்சாதவர் என்று பார்த்தால், அவரின் கீழ் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலும் அதகளம்தான்.
சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த பவானீஸ்வரி, சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் சிறப்பு விசாரணை பிரிவு ஐ.ஜி ஆகவும். குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த வித்யா ஜெயந்த் குல்கர்னி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குநராகவும், நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினபு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குநராகவும் நியமனம் செய்து நேற்றிரவு தமிழக அரசு உத்தரவுப் பிறப்பித்திருக்கிறது.
டிஜிபி கந்தசாமி ஐபிஎஸ்.ஸோடு கைகோர்க்கும் ஐபிஎஸ் உயரதிகாரிகள் பவானீஸ்வரி, வித்யா ஜெய்ந்த் குல்கர்னி, பிரவின்குமார் அபினபு ஆகிய மூன்று உயரதிகாரிகளுமே நேர்மையான அதிகாரிகள். கண்டிப்புக்கு பெயர் பெற்றவர்கள். கடமையில் இருந்து சிறிதும் தடம் மாறாதவர்கள். சமரசம் என்ற பேச்சிற்கே இடமளிக்காதவர்கள். இப்படிபட்ட டீம்தான், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கப் போகிற கண்ணியமிக்க காவல்துறை படை..
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியில் தொடங்கி ஜுனியர் நிலையிலான முன்னாள் அமைச்சர்கள் வரை ஒட்டுமொத்த முந்தைய அதிமுக அமைச்சரவையையுமே டிஜிபி கந்தசாமி ஐபிஸ் தலைமையிலான ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் கூண்டோடு விசாரணைக் கூண்டில் ஏற்றுவார்கள்.
அவர்கள் மீது திமுக தரப்பில் இருந்து புதிதாக புகார்கள் கொடுக்க தேவையில்லை..எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக தொடுத்துள்ள ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அவர் உள்பட அனைத்து அதிமுக நிர்வாகிகள் மீதும் அறப்போர் இயக்கம், ஆம் ஆத்மி, மக்கள் செய்தி மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஏற்கெனவே ஊழல் தடுப்புப் பிரிவில் கொடுத்துள்ள எண்ணற்ற புகார்களை தூசி தட்டி எடுத்தாலே போதும், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அனைவருக்குமே சிக்கல்தான்..
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி என ஒட்டுமொத்த முன்னாள் அதிமுக அமைச்சர்களின் மீதான ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நாள்தோறும் நடைபெறும். எப்படியும் ஆறு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திற்குள்ளாகவோ வழக்குகளில் தீர்ப்பு சொல்லப்பட்டு விடும்.
ஊழல் முறைகேடுகளுக்கு குறைந்த பட்சம் 2 ஆண்டுகளுக்கு மேல்தான் தண்டனை கிடைக்கும். அப்படிபட்ட தீர்ப்புகள் வந்தால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி இழப்பார். அவரைப் போல அனைத்து முன்னாள் அமைச்சர்களும் எம்.எல்.ஏ. பதவிகளையும் இழப்பார்கள். ஆறு வருடத்திற்கு தேர்தலிலேயே நிற்க முடியாது.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இல்லாத சட்டப்பேரவையாக தமிழக சட்டப்பேரவை இருக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வியூகம். அரசியல் ரீதியாக பழிவாங்கும் குணத்தோடு செயல்படாமல், அவர்கள் செய்த சட்டவிரோத செயல்களே அவர்களது தலையெழுத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் திட்டம் என்று எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுவிட்டது. அதனால், ஜூலை மாதத்திற்குப் பிறகு இ.பி.எஸ்..ஓ.பி.எஸ்.ஸில் தொடங்கி ஒவ்வொருத்தராக முன்னாள் அமைச்சர்கள் சிறைக்குப் போவது உறுதி.
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்று சம்மாவா சொன்னார்கள் என்று கூறியவாறே சிட்டாக பறந்தார் திமுக முன்னணி நிர்வாகி…
கட்டுரைகள் அனைத்தும் விறுவிறுப்புசார் உங்களால்தான் இப்படி எழுத முடியும் என்பதை கண்கூடாகண்டவன் இளமதி சார்,
இந்த பத்திரிகை உலகம் பல கூமுட்டைகளை கொண்டாடுகிறது. உங்களுக்கும் காலம் வரும் காத்திருக்கவும்,
அன்புள்ள ஞானமணி
உங்கள் பதிவுகளை தவறாமல் படிப்பவன்…உங்கள எழுத்து துப்பறியம் ரசனையுடன் இருப்பதால்..இதற்காகவே தங்கள் பெயரில் உள்ள பேஸ் புக்கில் சேர்ந்து இதை கண்டறிவேன்…..உங்கள் பணி எப்போதும் தொடர வாழ்த்துக்கள்……மகிழ்ச்சி…..ரசிகன்செல்லத்துரை ஆறுமுகம்
செய்திகள் அத்தனையு அருமை