Mon. Nov 25th, 2024
vs

ஜனவரி 27 ஆம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆவது உறுதி என அவரது வழக்கறிிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் உறுதி பட தெரிவித்திருக்கிறார்..கர்நாடக சிறைத்துறையிடம் இருந்து அலுவல்பூர்வ கடிதம் கிடைத்துவிட்டதாகவும்அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் அடித்து கூறியுள்ளார்.. இந்த தகவல் தமிழக உளவுத்துறை மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாஸ் செய்யப்பட்டுள்ளது. அதனால், டெல்லியில் இருந்தபடியே, மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு பற்றி அறிவிப்பை வெளியிட அவர் உத்தரவிட்டுள்ளார்.

அவரது நினைவிடத்தை திறந்து வைக்க பிரதமர் மோடியை எப்படியும் அழைத்து வருவேன் என இரண்டாம் கட்ட தலைவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், பிரதமர் பெப்பே காட்டிவிட்டதால், விரக்தியடைந்த நிலையில் இருந்த இ.பி.எஸ்.ஸுக்கு, சசிகலா விடுதலை என்ற செய்தியும் இடி போல தாக்கியுள்ளது. சசிகலாவா, நானோ என்ற ஆடு புலி ஆட்டத்திற்கு தயாராகிவிட்ட இ.பி.எஸ்., தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்யவும் மட்டுமல்ல, அவரை அசிங்கப்படுத்தவும் தயாராகி விட்டார் என்று கொதிக்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள்.

வரும் ஜனவரி 27 ஆம் தேதி, சசிகலா எந்த நேரத்தில் விடுதலையாகி சென்னைக்கு வந்தாலும், அவர் ஜெயலலிதா நினைவிடத்தில் காலை வைக்க முடியாத அளவுக்கு செக் வைக்கவே, அன்றைய தினமே ஜெயலலிதா நினைவிடம் திறந்து வைக்க முடிவு செய்தாராம் எடப்பாடி பழனிசாமி. அன்றைய தினம் காவல்துறையின் கெடுபிடி அதிகமாக இருக்கும் என்பதாலும், பொதுமக்களின் கூட்டமும் அதிகமாக இருக்கும் என்பதாலும், சசிகலா வருகைக்கு எந்த முக்கியத்துவமும் கிடைக்காது. அவரது வருகை தமிழக அரசியலில் எந்த விதமான அதிர்வலைகளையும் ஏற்படுத்தாது என்று திட்டம் போட்டே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆட்டம் ஆடுகிறார் என்று கொதிக்கிறார்கள் டி.டி.வி.தினகரனின் விசுவாசிகள்.

அதே சமயம், அவர்கள் ஆண்டவன் இருக்கான் குமாரு என்று இ.பி.எஸ். ஸுக்கு எதிராக கும்மாளமும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் தான் சுவாரஸ்யமானது. ஆமாம், சசிகலா விடுதலையாகி சென்னை வரும்போது, அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற, இ.பி.எஸ். தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்றுள்ள பத்து அமைச்சர்கள் ஆர்வமாக இருப்பதும், குறைந்தது 50 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், தங்களுடைய விசுவாசத்தை சசிகலாவுக்கு காட்ட, டி.டி.வி.தினகரனிடம் ரகசியமாக அனுமதி கேட்டிருப்பதையும் போட்டு உடைக்கின்றனர் டி.டி.வி.தினகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஊடகவியலாளர்கள்.

ஆக, மொத்தத்தில், நானும் ரவுடி தான் என்ற கணக்கில் உதார் விட்டுக் கொண்டு இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, சசிகலா விடுதலையும், வரும் நாட்களும் மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என்று கெத்து காட்டுகிறார்கள் மன்னார்குடி விசுவாசிகள். தமிழக அரசியலில், எடப்பாடியா, ஸ்டாலினா, எடப்பாடியா…ஓ.பி.எஸ்.ஸா என்ற பலப்பரீட்சை காணாமல் போய்விடும். சசிகலாவா…இ.பி.எஸ்.ஸா என்ற மோதல்தான் ஜனவரி 27 ஆம் தேதிக்குப் பிறகு அ.தி.மு.க.வையும், தமிழகத்தையும் ஒருசேர ஆட்டம் காண வைக்கும் என்கிறார்கள் அ.தி.மு.க.வில் உள்ள சசிகலா ஆதரவு அமைச்சர்கள்..

அதற்கு மேல் அவர்கள் ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அதை இங்கே எழுத முடியாது. நமக்கே மனசாட்சி உறுத்துவதால் அதை பதிவு செய்யாமல் தவிர்க்கிறோம். எடப்பாடி திட்டப்படி, ஜனவரி 27 ல் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நடக்காது. அந்த விழா தள்ளிப் போகவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், எடப்பாடி கனவுக்கு முதல் அடி, இந்த விழா தள்ளிப் போவதுதான் என்று அந்த அமைச்சர்கள் மனம் நொந்து போய் பேசுகிறார்கள்..

ஜன.27ல் விடுதலையாகி சென்னைக்கு வரும் சசிகலா,ஜெயலலிதா சமாதிக்குள் காலடி எடுத்து வைப்பார் என்பது அம்மாவின் ஆசிர்வாதம். அதை எடப்பாடி நினைத்தால் மட்டுமல்ல, எந்த கொம்பனாலும் முடியாது என ஆவேசமாக கொதிக்கிறார்கள் தென்மாவட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்.

ஏழை விவசாயி மகன் எடப்பாடி பழனிசாமி கை ஓங்குகிறதோ அல்லது தியாகத் தலைவி சின்னம்மாவின் கை ஓங்குகிறதோ என்று பார்த்துவிடுவோம் என்று தொடை தட்டுகிறார்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள்..

பலே..பலே..போட்டி..