Mon. Nov 25th, 2024

வரும் 27 ஆம் தேதி பிரம்மாண்டமான விழா….

துணை முதல்வர் ஓ.பி.எஸ். முன்னிலை வகிக்கிறார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு 50 கோடி ருபாய் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

பீனிக்ஸ் பறவை போன்ற வித்தியாசமான தோற்றத்தில் நினைவிடத்தை அமைக்கும் பணி கடந்த மே மாதம் 8-ந்தேதி நடந்தது.

பொதுப்பணித் துறை சார்பில் கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 50 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் இத்தாலி மார்பிள், பளிங்கு கற்கள் ஆகியவை பதிக்கப்பட்டு ஜெயலலிதா நினைவிடம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை தேசியத் தலைவர்கள் திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. பிரதமர் மோடியை திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதாக தகவல் வெளியானது. ஆனால், இன்று பிற்பகலில் நினைவிடம் திறப்பு விழா குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த நிகழ்வில் தேசியத் தலைவர்கள் யாரும் பங்கேற்வில்லை என்பது உறுதியாகியுள்ளது. .

வரும் 27-ம் தேதி (ஜன. 27) ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர் செல்வம் முன்னிலை வகிக்கிறார். விழாவில், அமைச்சர்கள், அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.