Mon. Nov 25th, 2024

அரசியல்

விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.40 ஆயிரம் வழங்க வைகோ வேண்டுகோள்

வைகோ அறிக்கை : அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கிவிட்டன. லட்சக்கணக்கான ஏக்கர் நெல், கரும்பு, வாழை, மணிலா, மக்காசோளம், சூரியகாந்தி, உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர்கள் நாசமாகி உள்ளதைக் கண்டு வேளாண் குடிமக்கள் ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். எனவே தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வருவாய் குறுவட்ட வாரியாக கணக்கிடாமல், வருவாய் கிராம வாரியாக வருவாய் இழப்பைக் கணக்கிட்டு, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும். பெரும் துயரில் வாடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் விவசாயக் கடன்களை தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசுக்கு கனிமொழி எம்.பி. வேண்டுகோள்:

தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி உறுதி என மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. தலைமைக் கழகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், இன்னும் நான்கே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. என்ன தான் செய்தாலும் தமிழகத்தில் அதிமுக எதிர் கட்சியாக கூட வர முடியாது. சில தினங்களுக்கு முன்பு நான் 200 சீட்களுக்கு மேல் திமுக வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தேன். ஆனால் தற்போது மக்கள் கிராம சபை கூட்டங்கள் மூலம் கிடைக்கும் மக்கள் ஆதரவு மூலம் பார்த்தால் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் நிலை உள்ளது என்று கூறினார்.

தி.மு.க.வில் இணைந்த ரஜினி ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர்கள்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின் (தூத்துக்குடி) கே.செந்தில் செல்வானந்த் (இராமநாதபுரம்) ஆர்.கணேசன்( தேனி) மற்றும் தலைமைக்குழு, தொழில்நுட்ப அணி தலைவர் கே.சரவணன், இராமநாதபுரம் மாவட்ட இணைச் செயலாளர் ஏ.செந்தில்வேல், இராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அதேப்போல், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் பி.ஆர்.சிவக்குமார் தி.மு.க.வில் இணைந்தார்.

இந்தியா

காங்கிரஸுக்கு அமித்ஷா கேள்வி:

கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா பாகல்கோட்டில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் பேசினார். அப்போது அவர்,
காங்கிரஸ் கட்சி தலைவர்களை பார்த்து நான் ஒன்றை கேட்கிறேன். நான்கு தலைமுறையாக நீங்கள் ஆட்சி செய்தீர்கள். அப்படி இருக்கும்போது ஏழை பெண்கள் வீட்டில் ஏன் சமையல் எரிவாயு இல்லை?. அவர்களுக்கு ஏன் கழிப்பிடம் வசதி இல்லை?. மின்சாரம், வீடுகள், ஆயுஷ்மன் பாரத் திட்டம் ஏன்  இல்லை?. ஏனென்றால், அவர்கள் வறுமையை ஒழிக்க விரும்பவில்லை.
காங்கிரஸ் சொல்வதை நம்ப வேண்டாம். உங்களுக்கான நேரம் வரும்போது, தடுப்பூசி போட்டுக்கொள்ளவும். இந்தியா விரைவில் கொரோனா இல்லாத நாடாகும் என்று அமித்ஷா பேசினார்.