சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பிரபலங்கள் குறித்து முக்கியமான சேர்ஸிடம் இருந்து தகவல் நல்லரசு.காமிற்கு ரகசியமாக கிடைத்துள்ளது. பிரசாத் கிஷோர் டீம் தனியாக சர்வே நடத்தி, வேட்பாளர்கள் பற்றிய பட்டியல் கொடுத்திருந்தாலும், 11 தொகுதிகளில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் பற்றி நாமும் ஸ்மெல் செய்துள்ளோம். அண்ணா அறிவாலயத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களிடம் நமக்கு கிடைத்த வேட்பாளர்கள் பட்டியலை கைபேசி வாயிலாக படித்துக் காட்டினோம். அதைக் கேட்டு கலகலவென சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்தார். மௌனம்தான் சம்மதத்திற்கு அறிகுறி என்று கேள்விப்பட்டிருக்கும் நிலையில், அந்த பட்டியலில் புதிதாக கலகலவென சிரிப்பையும் சேர்த்துக் கொள்ளலாம் போல…
நமக்கு கிடைத்த ரகசிய தகவல்களை இங்கே பகிர்கிறோம். இவர்கள் வேட்பாளராக அறிவிக்கலாம். அதை தவிர்த்து, பட்டியலில் இடம் பெறாதவர்கள் கூட வேட்பாளராக தி.மு.க. தலைமை அறிவிக்கலாம். எல்லாம் மு.க.ஸ்டாலின் செயல்…
2016ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் ஒன்னே ஒன்னு என்ற கணக்கில், சேலம் வடக்கு தொகுதியில் மட்டும் தற்போதைய மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான ஆர்.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். இவர், மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பரம வைரி என்பதாலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினோடு மிக நெருக்கமாக இருக்கும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மிக,மிக நெருக்கமானவர் என்பதாலும் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். அதற்கான முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். ஆனால், இந்த தொகுதியை குறிவைத்து வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தின் வாரிசே முட்டி மோதிக்கொண்டிருக்கிறது என்பதுதான் சுவாரஸ்யம். அவர் யார் என்றால், வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் மறைந்த ஆ.செழியன் என்கிற நெடுஞ்செழியன் என்பவரின் மருமகன் மருத்துவர் தரூண் என்பவர்தான் அவர்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் செல்வாக்கு மற்றும் அவரது மூத்த மகன் மறைந்த செழியன் மீதான பாசம் + ஆளும்கட்சி மீதான அதிருப்தி ஆகியவை எப்படியும் தன்னை கரை சேர்த்துவிடும் என்ற நம்பிக்கையோடு தி.மு.க. தலைமையிடம் முட்டி மோதி சீட் வாங்கிவிடலாம் என தரூண் உயிரைக் கொடுத்து போராடி வருகிறார். பொதுவாக தி.மு.க. தலைமையில் ஒரு பேச்சு அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போதைய எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் வழங்குவதில்லை என்று பேச்சால், மருத்துவர் தரூண் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசலாம் என்பதுதான் நமக்கு கிடைத்த தகவல்.
சேலம் தெற்கு தொகுதிக்கு அசோக் டெக்ஸ் உரிமையாளர் எம்.அசோகன் என்பவரும் சேலம் கல்லூரி உரிமையாளர் லோகநாதனும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
சேலம் மேற்கு தொகுதிக்குதான் கடுமையான போட்டி நிலவுகிறது. முன்னாள் மண்டல குழுத்தலைவர் சரவணன், தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், சேலத்தாம்பட்டி ராஜேந்திரன், மெய்யனூர் கழகப் பொருளாளர் பிரேம்குமார் என நான்கு பேர் மோதிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் பிரேம்குமாருக்கு சீட் உறுதியானால், அவருக்கு எப்படி சீட் கிடைத்தது என்பது குறித்து சேலம் மாவட்ட தி.மு.க. முன்னணி நிர்வாகிகளே பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு நிலைமை இருக்கும்.
ஓமலூர் தொகுதியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருண் பிரசன்னா பெயர் பலமாக அடிபடுகிறது. ஒருவேளை அவர் பக்கம் அதிர்ஷ்ட காற்று திரும்பவில்லை என்றால், கடந்த 2016 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த எஸ். அம்மாசி என்பவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இவருக்கும் ஒரு சிக்கல் இருக்கிறது. எப்படி சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் சீட் வழங்க தி.மு.க தலைமை யோசித்துக் கொண்டிருக்கிறதோ, அதுபோலவே, ஏற்கெனவே தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுக்கும் மீண்டும் சீட் கிடையாது என்பதும் யோசனையாக இருக்கிறதாம்.
மேட்டூர் தொகுதிக்கு தூபாய் கந்தசாமி பெயர் பலமாக அடிபடுகிறது. மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருக்கும் கோபால் பெயர் டிக் அடிக்கப்பட்டுள்ள நிலையில், உடல்நிலை காரணம் காட்டி அவரே போட்டியில் இருந்து ஒதுங்குவதாக தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். அதனால், கந்தசாமிக்கு சீட் உறுதி என்ற நிலையில், சேலம் தி.மு.க. எம்.பி. பார்த்திபனும் தன் பங்கிற்கு தனது ஆதரவாளர் ஒருவருக்கு சீட் பெற்று தர, சென்னையில் காய் நகர்த்துகிறாராம்.
சங்ககிரி தொகுதியைப் பொறுத்த வரை ஒரே சாய்ஸ்தான். அவர், உமாராணி.. வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் தகுதியாக இருந்தாலும் இவர், தி.மு.க. தலைவர் குடும்பத்தின் கிச்சன் கேபினெட் வரை செல்வாக்கு படைத்தவர் என்பதே இவரது அதீத பலம்.
எடப்பாடி தொகுதிக்கு தி.மு.க. நகர செயலாளர் பாஸா. அல்லது பொதுக்குழு உறுப்பினர் ஏ.டி. சுப்பிரமணி. டி.எம்.செல்வகணபதி மனதில் யார் இருக்கிறார்கள் என்பதும் மர்மமான ஒன்றுதான்.
விரபாண்டி தொகுதிக்கு வீரபாண்டி ராஜாவும் மல்லூர் பேரூர் கழகச் செயலாளரும் சுரேந்திரன் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர்.
கெங்கவள்ளி தொகுதிக்கு முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷிணியின் பெயர் முதல் இடத்தில் இருக்க, போகிற போக்கில் முன்னாள் எம்.எல்.ஏ சின்னதுரையும் காய் நகர்த்துகிறார்.
ஏற்காடு தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் அல்லது ஒன்றிய செயலாளர் தங்கசாமி.
ஆத்தூர் தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸுக்குதான் என்று தி.மு.க.வினரே அழுத்தமாக பேசி வரும் சூழலில், காங்கிரஸ் மாநில செயலாளர் அர்த்தனாரிக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்கிறார்கள் சத்தியமூர்த்திபவன் ஆளுமைகள். காரணம், இவர் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவின் நிழல்தான் அர்த்தனாரி என்று கண்சிமிட்டுகிறார்கள் கதர் சட்டைக்காரர்கள்..
.