ஜனவரி 14 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் இதழ் ஆண்டுவிழாவில், ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார். அப்போது அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் நீதித்துறைப் பற்றி அவதூறாக சில கருத்துகளை வெளிப்படுத்தினார். சசிகலாவைப் பற்றி கூறும் போது அவர் பயன்படுத்திய சாக்கடை நீர் என்ற உவமை அரசியல்கட்சியினரிடம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், ஆடிட்டர் குருமூர்த்திக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல, நீதிபதிகள் பற்றி ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதும், வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் என நீதித்துறையைச் சேர்ந்தவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகோபால் என்பவர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிராக சேரன் மகாதேவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரின் மனுவை பதிவு செய்துள்ள சேரன்மகாதேவி காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.