சென்னை மாநகர காவல்துறையினர் பல ஆயிரம் பேர் தங்கள் சந்தோஷத்தை தியாகம் செய்துவிட்டு பொங்கல் திருநாளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருவதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய போகி பண்டிகை முதல் காணும் பொங்கல் நாளான இன்று வரை, சென்னை மாநகர பொதுமக்கள் உற்சாகமாகவும், மிகுந்த பாதுகாப்புடனும் தை திருநாளை கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி, பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பணிகளில் காவல்துறையைச் சேர்ந்த பல ஆயிரம் பேர், பகல், இரவு பாராமல் 24 மணிநேரமும் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆயுதப்படையைச் சேர்ந்த ஆண், பெண் காவலர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் சென்னையிலேயே தங்கியிருந்து காவல் பணியில் துளியும் சோர்வின்றி பணிபுரிந்து வருகின்றனர்.
சென்னை மாநகர் முழுவதும் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், காவல் அலுவலர்கள், காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து அவரவர் இல்லங்களில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாத நிலை ஏற்படும்போது, வருத்தம் ஏற்படுவது இயல்பானதுதான். ஆண்டுதோறும் காவல் துறையினர், பொங்கல் திருநாளில் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க முடியாத நிலை இருப்பதை உணர்ந்த, சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ்., இந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, சிறப்பு ஏற்பாடுகளை செய்ய அறிவுரை வழங்கினார். ஆணையரின் தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாகவும், உற்சாகப்படுத்தியதாலும், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என நான்கு காவல் மண்டலங்களிலும் கடந்த 3 நாள்களாக காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா, களைகட்டியுள்ளது.
ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் திருவிழா, புனித தோமையர் மலை ஆயுதப் படை மைதானத்தில், தமிழ்நாடு ஆயுதப்படை காவல்துறை சார்பில் விமர்சையாக கொண்டாப்பட்டது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். காவல் துறையினரின் குடும்பத்தினரோடு கலந்துரையாடிய முதல்வர், சிறுவர், சிறுமிகளுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள், விழாவின் முத்தாய்ப்பாக அமைந்தது.
மறுநாள் திருவள்ளூவர் தினத்தில் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த காவல் அலுவலர்கள், காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா, வண்ணாரப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், பொதுமக்கள் வைத்த பொங்கல் பானையில் அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்டப் பொருள்களை போட்டு, சமத்துவப் பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்களுடன் காவல்துறையைச் சேர்ந்த குடும்பத்தினரும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
விழாவின் சிறப்பாக, சிறுவர், சிறுமியர்களின் சிலம்பாட்டம், கத்திச்சண்டை, குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனை, பொதுமக்களுடன் அமர்ந்து காவல் ஆணையர் மற்றும் உயரதிகாரிகள் ரசித்து பார்த்தனர். பின்னர், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கி மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக வாழ்த்தினார்.
தொடர்ந்து, ஆயுதப்படையைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் காவலர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருமணமானவர், திருமணமாகாதவர் என ஆண், பெண் காவலர்கள் கலந்திருக்கும் ஆயுதப்படையில், பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் அதிகமானோரிடம் இருக்கும். அதனால், காவல் பணிகளில் அவர்கள் ஒருவிதமான மனச்சோர்வுடனே பணியாற்றக் கூடும் என்பதால், அவரவர் சொந்த ஊரில் பொங்கல் விழாவை எப்படி கொண்டாடி மகிழ்ந்திருப்பார்களோ,அதுபோன்ற ஏற்பாடுகளை ராஜரத்தினம் திடலில் செய்யப்பட்டிருந்தது.
ஓலையால் வேயப்பட்ட குடிசைகள், விநாயகர் கோயில், மேள தாளம், ஆலமரத்து நிழல் தாங்கி நின்ற மேடை, மாட்டு வண்டி சவாரி, வாரச்சந்தை, தெருவோர தேநீர் கடை, பலசரக்கு கடை, வளையல் கடை, கிளி ஜோதிடம், கைரேகை ஜோதிடம், பெயர் ராசி பலன் என ஒரு கிராமத்தை அப்படியே பெயர்த்து வந்து வைத்ததுப் போல, ராஜரத்தினம் திடலே கிராமத்து பொங்கல் விழாவைப் போல சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆயுதப்படை ஆண், பெண் காவலர்களுக்கு தனித்தனியாக கபடி, கைப்பந்து, உறியடித்தல், அதிர்ஷ்டச் சுற்று உள்ளிட்ட போட்டிகள் நடந்தப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான இருபாலாரும் உற்சாகமாக கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, ஆண், பெண் காவலர்கள் தனித்தனியாக பங்கேற்றநாட்டியம், கிராமத்து பாரம்பரிய நடனம் என கலை நிகழ்ச்சிகள் களை கட்டின. அனைத்து காவலர்களிடம் கரைபுரண்டியே உற்சாக மிகுந்த இந்த சமத்துவப் பொங்கல் விழாவில், சிறப்பு அழைப்பாளராக மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்தும் அவரது துணைவியார் பட்டுச்சேலையிலும் கலந்துகொண்டது, காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு சுழற் கோப்பைகளையும் பரிசுகளையும் காவல் ஆணையர் வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து, சிறப்புப் பரிசாக, 500 ரூபாய் வெகுமதியும் அனைவருக்கும் வழங்கி வாழ்த்திய மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உரையாற்றினார். அப்போது அவர், காவல்துறையைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் தங்கள் சந்தோஷத்தை மறந்து கடந்த 4 நாள்களாக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். காவலர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பணி நியமனம், மகளிருக்கு சுய தொழில் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நற்பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. காவல்துறை குடும்பத்தினர் நிம்மதியாக இருக்க வேண்டும் என நல்ல உள்ளம் படைத்தோர் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கும், காவல்துறை குடும்பத்தினருக்கும் நான் பாலமாக மட்டுமே இருக்கிறேன்.
எனது துணைவியார் மூலம் வாரந்தோறும் மகளிர் காவல்துறையினர் உடல் ஆரோக்கியத்துடனும், மனநலத்துடனும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்பதற்காக வாரந்தோறும் யோகா உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதை எல்லோரும் அறிவீர்கள்.
காவல் நிலையங்களில், பொது இடங்களில் காவல் அலுவலர்கள், காவலர்கள் என அனைத்துப் பிரிவினரும் உற்சாகமாக, நிம்மதியாக பணியாற்ற வேண்டும் என்றால், அவர்களது குடும்பத்தினர் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம். அந்த நிலையை உருவாக்கதான், காவல் அலுவலர்கள் பிறந்தநாள், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதுபோலவே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்களுக்கு சுழற்றி முறையில் 3 நாள்கள் தொடர்ந்து விடுமுறை வழங்க அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ். உரையாற்றினார்.
காவல்துறை வரலாற்றிலேயே, பொங்கல் பண்டிகையையொட்டி, ஒவ்வொரு மண்டலத்திலும், காவல்துறையினர் குடும்பத்தினரும், பொதுமக்களும் இணைந்து சமத்துவப் பொங்கலை கொண்டாடியது, இதுதான் முதல்முறை என்பது நினைவுக்கூரத்தக்கது.