நாடு முழுவதிலும் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய துரைமுருகன், தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தி.மு.க. இன்னும் தொடங்கவில்லை என்றும், புதிய கட்சிகள் கூட்டணியில் சேர்வார்களா என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்று கூறினார்.
அஞ்சல் துறை தேர்வுகள் இதற்கு முன்பு தமிழில் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் நடத்தப்பட்டு வருவது தொடர்பாக கேள்வி கேட்டபோது, ஹிந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக துரைமுருகன் தெரிவித்தார்.