Sun. Nov 24th, 2024

போகி பண்டிகையை கொண்டாடும் விதமாக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பொதுமக்கள் இன்று அதிகாலையிலேயே பழையப் பொருட்களை எரித்து கொண்டாடியதுடன், மிகுந்த உற்சாகத்துடன் பொங்கல் திருநாளை வரவேற்றனர்.

மார்கழி மாதத்தின் நிறைவு நாளில் போகி பண்டிகை, பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மறுநாள் மாதப் பிறப்பான தை முதல்நாள் தொடங்குவதால், அன்றைய நாளை அறுவடைத் திருநாளாகவும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படையலிட்டு வழிபடுவதுதான் பொங்கல் திருநாளின் மகிமையாகும்.

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மார்கழி மாத இறுதியில் இல்லங்களை தூய்மைப்படுத்தி அழகுப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பு அடையும். அப்போது, கழிவுப் பொருள்களாக சேகரிக்கப்படும் பழையனவற்றை எரித்து, புதிய பொருள்களை இல்லங்களை சேர்ப்பார்கள். அந்த அடிப்படையில், பழைய கழிதலும், புதியன புகுதலும் சிறப்பாக நடைபெறும் நாள்தான் போகியாக தமிழகத்தில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழையவற்றை போக்கி என்று முன்னோர்கள் சொன்னதை நாம் சுருக்கி, போகி என்றாக்கிவிட்டோம்.

நாளை தமிழகமெங்கும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படவுள்ள நிலையில், அதனை வரவேற்கும் விதமாக இன்று அதிகாலையிலேயே குடும்ப பெரியவர்கள், சிறுவர், சிறுமிகள் படை சூழ, வீட்டின் முன்பு பழைய பொருட்களை எரித்து போகியை கொண்டாடியதுடன், ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு, பொங்கல் திருநாளை உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்.

பூமி வெப்பமயமாவதை தடுக்க, புகையில்லா போகியை கொண்டாடுங்கள் என்று தமிழக அரசும் அறிவுறுத்தியிருந்தது. அந்த வகையில், ரப்பர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தாமல், போகி பண்டிகையை கொண்டாடிய நல்ல உள்ளங்களுக்கு நல்லரசு சார்பில் போகி பண்டிகை வாழ்த்தும், பொங்கல் திருநாள் வாழ்த்துகளையும் காணிக்கையாக்குகிறோம்…