Sat. Nov 23rd, 2024

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறி வைத்துள்ள அமைச்சர்களில் முதல் நபராக இருப்பவர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். அவரைப் பற்றி ஊடகங்களில் அரைகுறையாக வந்த செய்திகள் எல்லாம், இபபோது தி.மு.க.வினரால் பகிரங்க குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டு, அவர் போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் பிரசாரத்தால், தொகுதி முழுவதும் அனல் வீசுகிறது.

அவரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சேனாதிபதி, அமைச்சர் வேலுமணியிடம் 30 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருக்கிறது. அத்தனையும் ஊழல் செய்து சம்பாதித்த பணம். முறைகேடாக ஈட்டிய பணம். அந்த பணத்தைக் கொண்டு தொண்டாமுத்தூர் வாக்காளர்களை விலைக்கு வாங்கி மீண்டும் தேர்தலில் வெற்றிப் பெற்றுவிடலாம் என்று கொக்கரிக்கிறார் என்று வாக்குசேகரிப்புக்காக போகிற இடங்களிலும் எல்லாம் கொளுத்திப் போட்டு வருகிறார் திமுக வேட்பாளர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகளில் அத்தனையிலும் உண்மை இருக்கிறதா? என்று விசாரித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்ததையடுத்து, முதலில் 30 ஆயிரம் கோடி ரூபாய் எல்லாம் 7 ஆண்டு காலம் அமைச்சராக இருக்கும் ஒருவரால் சம்பாதிக்க முடியுமா? என்ற சந்தேகத்திற்கு விடை தேடும் விதமாக, கோயம்புத்தூரிலேயே பல ஆண்டுகளாக மாமூல் அதிகமாக கொட்டும் அரசு துறையில் பணியாற்றி வரும் நட்பு வலையில் உள்ள அரசு உயரதிகாரியிடம் பேசினோம்.

வாட்ஸ் அப் கால், தேர்தல் நேரம் என்பதால், மனதில் இருந்ததையெல்லாம் கொட்டினார். பாவம் அவரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியால், ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருப்பார் போல. அந்த காயத்திற்கு மருந்து போட்டுக் கொள்ளும் விதமாக, மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை எல்லாம் நல்லரசு மீது இறக்கி வைத்தார்.

“அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக நிறைய தகவல்கள் இருக்கினறன. அதையெல்லாம் விரிவாக பேச நேரம் இருக்காது. நீங்கள் கேட்டதற்கு நேரடியாக பதில் சொல்கிறேன். கோவை மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிற நிறுவனம் முதல் மூன்று இலக்கத்தில் கோடிகளில் லாபம் ஈட்டுகிற நிறுவனங்கள் என 6000 தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. வேலுமணி அமைச்சராகி 7 ஆண்டுகளை கடந்து விட்டார். இந்த 7 ஆண்டுகளில், அந்த நிறுவனங்களில் ஏதாவது ஒரு விபத்து அல்லது மரணம் அல்லது மாவட்ட நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு மாறாக இயங்குகிறது என்ற ஏதாவது ஒரு குற்றச்சாட்டிற்குள் அந்த 6000 நிறுவனங்களும் சிக்காமல் இருந்தது இல்லை.

அப்படி ஏதாவது ஒரு புகாருக்கு உள்ளான நிறுவனத்திடம் அமைச்சரின் சகோதரர் மற்றும் சில விசுவாசிகள் நேரடியாக பேசுவார்கள். நிறுவனம் ஈட்டும் ஆண்டு நிகர லாபத்தின் அடிப்படையில் பணம் கறப்பார்கள். சிறு,குறு நிறுவனங்கள் லட்சங்களில் பணம் கொடுத்தால், பெரிய நிறுவனங்கள் கோடிகளில் கப்பம் கட்டுவார்கள். இது ஆண்டுதோறும் குறி வைத்து, ஒவ்வொரு நிறுவனங்களிடமும் கறாராக வசூலித்தார்கள். இந்த வகையில், ஆயிரம், இரண்டாயிரம் என கோடிகளில் கடந்த 6 ஆண்டுகளில் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

அதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால், கொரோனோ காலத்தில் நிகழ்த்தப்பட்ட அராஜகம்தான். கடந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கி நவம்பர் மாதம் வரை 8 மாதங்கள், தொண்டாமுத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் வருமானம் இன்றி தவித்த மக்களுக்கு வீடு வீடாகச் சென்று உணவுப்பொருள்களை வாரி வழங்கி நவீன கொடை வள்ளலாக மாறிப் போனார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இது எப்படி என்றால், கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதைப்போலதான்.

6000 நிறுவனங்களிடமும் கொரோனோ நிதி என்று கட்டாயப்படுத்தி வாங்கிய தொகை மட்டும் 3 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும். நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவன உரிமையாளர்கள், கொரோனோ நிதி என்று கேட்டவடன் அவர்களாகவே மனமுவந்து நிதி கொடுத்தவர்களும் இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்திற்கு பயந்து கொண்டு பணம் கொடுத்தவர்களும் ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள்.

உங்களிடம் நான் பகிர்ந்துகொண்டது, அவர் துறை சார்ந்த ஊழலைப் பற்றியோ, மாவட்டத்திற்கு வந்த மாநில அரசின் நிதிப் பற்றியோ, மத்திய அரசின் நிதிப் பற்றியோ அதில் எல்லாம் எவ்வளவு கமிஷன் அடிக்கப்பட்டது என்ற விவரத்தை சொல்லவில்லை. அதில் கூட எவ்வளவு கமிஷன், எந்தெந்த துறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்று விரிவாக சொல்ல முடியும்.

அதையெல்லாம் சொன்னால், அதை வைத்து அமைச்சரின் விசுவாசக் கூட்டம் என்னை எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள். அவர் பொறுப்பு வகிக்கும் உள்ளாட்சித்துறைக்கு மட்டும் ஆண்டுதோறும் தமிழக பட்ஜெட்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. அவர் மொத்தமாக 7 ஆண்டுகள் அமைச்சராக இருந்திருக்கிறார்.

7 ஆண்டுகளில் மொத்த நிதி ஒதுக்கீட்டை பெருக்கினால், 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி. அதில் சர்வசாதாரணமாக பத்து சதவிகிதம் கமிஷன் என்றால் எவ்வளவு தொகை என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

சார், நீங்களும், நானும்தான் மக்களின் பணத்தில் இவ்வளவு கொள்ளையடித்து விட்டார்களே என்று பொங்குகிறோம். ஆனால், அமைச்சர் வேலுமணியிடம் ஒட்டிக் கொண்டு இருக்கும் விசுவாசக் கூட்டத்தை பார்த்தீர்கள் என்றால், இன்றைக்கும் கூட புனிதரைப் போல அவரை கொண்டாடி கொண்டிருப்பவர்கள் பாமரனில் இருந்து மெத்த படித்தவர்கள் வரை என பெருங்கூட்டமே அவரைச் சுற்றி இருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் பணி நியமனமா,? அவரோடு படித்து இன்றைக்கு உயர்ந்த நிலையில் இருக்கும் இந்நாள், முன்னாள் கல்வித்துறை அதிகாரிகளே லஞ்சப்பணத்தை வசூலித்து ஒப்படைக்கிறார்கள். அதுபோலவே, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கட்டமைப்பு பணியா?, புதிய நியமனங்களா? எந்த வேலையாக இருந்தாலும், அந்தந்த கல்லூரிகளில் வேலைப்பார்க்கும் முனைவர் பட்டங்களைப் பெற்ற பேராசிரியர்களே புரோக்கர்களாக மாறி அமைச்சரிடம் கைகட்டி நிற்கிறார்கள்.

இப்படி மனசாட்சியை விற்று கேவலமான ஒரு பொழைப்பு பிழைக்கும் கூட்டம் ஆயிரக்கணக்கில் அடிமைகளாகவே மாறி விசுவாசம் செய்ய தயாராக இருக்கும் போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு என்ன வந்தது.. அவரா நேரடியாக களத்தில் இறங்கி மிரட்டுகிறார். விசுவாசக் கூட்டம் சொல்லும் போது, சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் செய்வார். அத்தோடு அவரின் வேலை முடிந்து விடுகிறது. மற்றபடி ஊழல் சாம்ராஜ்யத்தை விஸ்தாரமாக்கி, நிலை நிறுத்தியது எல்லாம், மெத்த படித்தவர்களும், அரசியல் அபிலாஷை கொண்டவர்களும்தான்.

அதனால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் எதிர்காலம் இப்போது இருப்பதைப் போல பிரகாசமாக இருக்க வேண்டும் என்றால், எம்.எல்.ஏ., பதவி மிகமிக முக்கியம். அதனால், நீங்கள் கேள்விபட்ட மாதிரி, 60 இல்ல, 600 இல்ல, 6000 கோடின்னாலும் செலவு செய்ய தயங்க மாட்டார் எஸ்.பி.வேலுமணி என்பது, அவரை நன்கு அறிந்த கூட்டத்திற்கே நன்றாக தெரியும். அதைதான் திமுக வேட்பாளர் கார்த்திகேய சேனாதிபதியும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கடைசியாக ஒன்று சொல்கிறேன். உங்களுக்கே கோபம் பொத்துக் கொண்டு வரும். அல்லது வரனும். கோயம்புத்தூரில் உள்ள பத்திரிகையாளர்களில் யார் யாரெல்லாம் adidas shoe போன்று ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புடைய காலணிகளை போட்டுக் கொண்டு திரிகிறார்களோ, அதில் 95 சதவிகிதம் பேர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விலை போனவர்கள்தான்.

கோயம்புத்தூரே செழிப்பாக இருக்கிறது என்ற பேராசையில் சென்னையில் இருந்து விமானத்தில் வந்து அமைச்சரிடம் மாமூல் வசூலித்துக் கொண்டு ஊர் திரும்புகிற பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகளையும் எனக்கு தெரியும். தகவல் போதுமா சார்.”

என்று கூறி சில நிமிடங்கள் மௌனமானார். பதில் கூறுவதற்கு ஒரு வார்த்தைக் கூட இல்லை நம்மிடம்…