வேலூர் மாநகராட்சியின் ஆணையாளராக சங்கரன் பணியேற்ற காலத்தில் இருந்து பணியாளர்களை அவதூறாகவும், மிகவும் தரம் தாழ்த்தியும் பேசி வருகிறார் என அவரின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, மாநகராட்சி பணியாளர்களின் கூட்டமைப்பின் மாநில பொதுசெயலாளர் .இரா.சீத்தாராமன், மாநகராட்சி ஆணையாளரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பணியாளர் விரோத நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.
அப்போது அவருக்கு பதிலளித்த ஆணையர் சங்கரன், வேலூர் மாநகராட்சி பணியாளர்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரையும் இனி வரும் காலங்களில் கவனமாக நடத்துவதாக உறுதியளித்துள்ளார். ஆனால், அதன்படி நடந்து கொள்ளாமல் மீண்டும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளிலேயே அவர் தீவிரம் காட்டி வந்தார்.
அவரது நோக்கம் கடுமையாக நடந்து கொண்டு வேலை வாங்குவது என்பதினைவிட பணியாளர்களை துன்புறுத்தி மகிழும் பாசிச t மனப்பான்மையே அதிகமாக இருப்பதாக பணியாளர்கள் புகார் தெரிவித்தனர்.
அவரின் அதிகார மிரட்டலால் மன உளைச்சலுக்கு உள்ளான, வருவாய் உதவியாளர் சதாசிவம், விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார். அவரின் மரணத்திற்கு ஆணையாளர் சங்கரன்தான் என்று குற்றம் சுமத்தும் ஊழியர்கள், மரணத்திற்கு முன்பாக காலை 8 மணிக்கு சதாசிவத்தை பணிக்கு வரவழைத்து இரவு 9.30 மணி வரையில் மனரீதியாக ஆணையர் சங்கரன் துன்புறுத்தியதாகவும் அதன் காரணமாக அவர் மனஉளைச்சலில் இருந்தார் என்கிறார்கள், அவரது சக பணியாளர்கள்.
சதாசிவத்திற்கு நேர்ந்த நிகழ்வு தங்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில், வேலூர் மாநகராட்சி ஆணையர், தனது அதிகாரப் போக்கை மாற்றி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி மாநகராட்சியில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.