சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர்மு.க.ஸ்டாலின் இன்று தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சேலம் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் சிட்டிங் எம்.எல்.ஏ.வும், சேலம் மாநகர செயலாளருமான ராஜேந்திரனை ஆதரித்து இன்று காலையில் வாக்குசேகரித்தார். அப்போது அவர் வணிகர்கள் நிறைந்த பகுதியான செவ்வாய்பேட்டையில் வீதி, வீதியாகச் சென்று திமுக.வுக்கு ஆதரவு திரட்டினார்.
திருவாரூரில் நேற்று மாலை பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்று புதுக்கோட்டை அறந்தாங்கியில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், பயண திட்டத்தில் மாற்றும் செய்து, இன்று காலை சேலம் சென்றார் மு.க.ஸ்டாலின். அங்கு சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அவரைச் சந்தித்து ஆசிப் பெற்றனர். அதனைத்தொடர்ந்து முன்னறிவிப்பு இன்றி திடீரென்று, சேலம் வடக்கு தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ ராஜேந்திரனை ஆதரித்து பிரசாரத்தில் குதித்துவிட்டார்.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, ராஜேந்திரனுக்கு ஒரு வீர வரலாறு உண்டு. சேலத்தின் சிங்கமாக வர்ணிக்கப்பட்ட மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் நெருங்கிய ஆதரவாளராக ஒருகாலத்தில் இருந்தவர் இவர். வழக்கறிஞரான இவர், ஆறுமுகத்தின் அனைத்து வழக்குகளையும் கவனித்து வந்தார். ஒரு சில விவகாரங்களில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனவருத்தத்தில், அவரையே எதிர்த்து அரசியல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார் வழக்கறிஞர் ராஜேந்திரன். அதன் விளைவாக, அவருக்கு சேலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அப்போது அவர், மு.க.ஸ்டாலினின் நிழலில் தஞ்சமடைந்தர்.
சேலம் மாவட்ட திமுக.வைப் பொறுத்தவரை ஒரு கசப்பான வரலாறு உண்டு. யார், யாரெல்லாம் வீரபாண்டியாரை எதிர்த்து கொண்டு, சென்னையில் கலைஞர் மு.கருணாநிதியின் குடும்பத்து உறவுகள் ( மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர்) மூலம் சேலத்தில் அரசியல் செய்ய முற்பட்டால், அவர்களின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகும் அளவுக்கு நெருக்கடி கொடுத்தார் வீரபாண்டியார்.அந்தவகையில் , சேலம் சந்திரசேகரன், தாரை மணியன், சிடிஎன் கேபிள் டிவி உரிமையாளர் குணா என்கிற குணசேகரன் என பட்டியல் நீளம். இந்த பட்டியலில் சேராமல் தப்பிப் பிழைத்தவர், ராஜேந்திரன் ஒருவர் மட்டுமே.
அவர் மீது தனிப்பட்ட பாசத்தையும், ஆதரவையும் வீரபாண்டியார் உயிரோடு இருக்கும்போதே காட்டி வந்த தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராஜேந்திரனையே திக்குமுக்காடு செய்யும் வகையில் இன்று காலை சாலையில் இறங்கி நடந்து சென்று ஓட்டு கேட்டதைக் கண்டு சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளே வியந்து போயினர்.
மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் உள்ளபடி, இன்று மாலை வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதியில் வீரபாண்டி வேட்பாளர் மருத்துவர் தருண் மற்றும் ஏற்காடு வேட்பாளர் தமிழ்செல்வனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபடவுள்ளார்.