Sun. Nov 24th, 2024

அமமுக கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விருத்தாசலம் தொகுதியில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :

முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தேமுதிக பற்றி தேவையில்லாமல் கருத்து சொல்லியிருக்கிறார். பக்குவமில்லாத அரசியலைச் செய்கிறது என்று கூறும் அவருக்கு ஒன்றறை நினைவூட்ட விரும்புகிறேன். மறைந்த முஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை.

2011 தேர்தலில் தனது பிரச்சாரத்தையே ரத்து செய்து, விஜயகாந்த் வந்தால்தான் பிரச்சாரத்துக்குச் செல்வேன் என்று காத்திருந்தவர் செல்வி ஜெயலலிதா. அப்போது,தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை வழங்கி, அதிமுக தேமுதிக கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக மாற்றிக் காட்டியவர் ஜெயலலிதா. அவரிடம் காணப்பட்ட அந்த பக்குவம் இ.பி.எஸ்.ஸிடம் காணப்படவில்லை.

கடந்த 2019ல் எம்.பி. தேர்தலின் போது வேண்டுமென்றே காலதாமதம் செய்து நான்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்தததுடன், நாங்கள் விரும்பாத தொகுதிகளை வழங்கியதால்தான், அப்போது தோல்வி ஏற்பட்டது.

கடந்த தேர்தல் போல் நடக்காமல் இருக்க, கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சியினரையும் ஒரே நேரத்தில் அழைத்து பேசுங்கள் என்று வலியுறுத்தியபோதும், அதை அதிமுக ஏற்கவில்லை.

கடைசி கட்டமாக பேசி, எங்களுக்கு குறைவாக 13 தொகுதிகள் மட்டும் தான் என்று கூறி காலத்தை கடத்தினார்கள். கடைசி முயற்சியாக எல்.கே. சுதீஷ் அணுகியபோது கூட அதிகபட்சமாக 13 தொகுதிகள் தான் என்று விடப்பிடியாக இருந்தார்கள். அப்போதும் அமைதியாக இருந்தோம்.

கூட்டணியில் இருந்து விலகாமல் இருக்க, 18 தொகுதி, ஒரு ராஜ்யசபா கொடுங்கள் என்று கோரினோம். அதை ஏற்காமல் 13 தொகுதி தான் என்று கறாராக இருந்தவர்கள், தொகுதிகள் விவரமும் சொல்ல மறுத்தார்கள்.

அதிமுக பேச்சுவார்த்தை குழு, எதற்கும் இறங்கி வராததால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணியிலிருந்து விலக வேண்டி இருக்கும் என்று சுதீஷ் சொன்னார். ஆனால், அவரோ, உங்கள் விருப்பம். நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

அதன் பிறகு வேறு வழியில்லாமல் மாவட்டச் செயலாளர்களை அழைத்து விவாதித்துவிட்டு, அவர்களின் ஒப்புதலோடு அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவது என்ற கேப்டன் அறிவித்தார். எங்களுக்கு பக்குவம் இல்லை என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, முதல் அமைச்சர் பதவிக்கு எப்படி வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரின் அணுகுமுறை, பக்குவம் எங்களிடம் இல்லை என்பது உண்மைதான்.

அமமுக தேமுதிக கூட்டணி இந்த தேர்தலில் மகத்தான வெற்றிப் பெறும். எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தினகரன் தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை