Sun. Nov 24th, 2024

இணைய வழி வர்த்தகத்தை (ஆன் லைன் செல்ஸ்) ஆரம்பித்த ஓராண்டிற்குள் இந்தியாவின் நெம்பர் 1 தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஜியோ மார்ட் ஆன் லைன் வர்த்தகம், பிரபலமான பிக் பேஸ்கட்டை நிறுவனத்தின் விற்பனையில் 30 முதல் 50 சதவிகிதம் முழுங்கிவிட்டதுதான் இன்றைய வணிக அரசியலில் பரபரப்பு விவாதமாக மாறியுள்ளது.

வேளாண் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைவதால், சிறு,குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறி புதிய வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 45 நாட்களாக லட்சக்கணக்கான விவசாயிகள், கடும் பனி, குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். இதுவரை 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக போராடி வரும் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால், புதிய வேளாண் சட்டங்களால், விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று மத்திய அரசு திரும்ப, திரும்ப வலியுறுத்தி வருகிறது. இந்த நேரத்தில், கார்ப்பரேட் வருகையால், ஆன் லைன் வர்த்தகமும், இந்தியாவின் பாரம்பரிய தொழில்துறையும் எந்தளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தொழில் வல்லுனர்கள், பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில், தமிழகத்தில் அறிமுகமாகியுள்ள ஆன் லைன் வர்த்தகத்தால், பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வரும் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துக் கொண்டு இருக்கிறது என்று புலம்புகின்றனர் மாநிலம் முழுவதும் உள்ள தொழில் நிறுவன உரிமையாளர்கள்..அவர்களின் குற்றச்சாட்டில் 100 சதவிகிதம் உண்மையிருக்கிறது என்பதற்கு அண்மைக்கால உதாரணம் தான் இது…

மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறி விற்பனையில் கடந்த ஆண்டு ஜியோ மார்ட் குதித்தது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் சோதனையடிப்படையில் தொடங்கப்பட்ட ஆன் லைன் விற்பனை, கொரோனோ தடைகளைத் தாண்டி இன்றைக்கு, அதே துறையில் விற்பனையில் முன்னணியில் இருந்த பிக் பேஸ்கட் எனும் நிறுவனத்தின் விற்பனையில் 30 முதல் 50 சதவிகிதம் வரை குறுகிய காலத்திற்குள்ளாகவே முழங்கிவிட்டதாக, பிக் பேஸ்கட் நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தெருக்களில் சிறிய அளவில் மளிகை கடை வைத்திருக்கும் அண்ணாச்சி கடைகளில், சோப்போ, பருப்போ அதன் எம்.ஆர்.பி விலைக்குதான் விற்பனை செய்வார்கள். அவர்களிடம் ஒரு மாதத்திற்கு மொத்தமாக பொருள்களை வாங்குபவர்கள், இப்போது ஆன் லைன் விற்பனையில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் 5 முதல் 10 சதவிகித கமிஷனின் கவர்ச்சியால் கவரப்பட்டு, பிக் பாஸ்கட், ஜியோ மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். ஜியோ மார்ட் வருகைக்கு முன்பாக, சென்னை போன்ற பெருநகரங்களின் விற்பனையில் பிக் பாஸ்கட் ஆன் லைன் நிறுவனம்தான் நெம்பர் 1 இடத்தில் இருந்ததாம்.
இந்த நிறுவனம் ஆன் லைனில் காய்கறிகளை விற்பனை செய்யாததால், அந்த குறையை பயன்படுத்திக் கொண்ட ஜியோ மார்ட், மளிகைப் பொருட்களுடன் காய்கறி விற்பனையையும் அறிமுகப்படுத்தியது. இதனால், இதுவரை பிக் பாஸ்கட் வாடிக்கையாளராக இருந்த மக்கள், ஜியோ மார்ட்டின் வாடிக்கையாளராக மாறி வருகிறார்களாம். இதனால், ஓரிரு மாதங்களிலேயே பிக் பாஸ்கட்டின் விற்பனை 30 சதவிகிதம் அளவுக்கு குறைந்துவிட்டது. கூடிய விரைவில் பிக் பாஸ்கட் எனும் கார்ப்பரேட் நிறுவனத்தின் விற்பனையை முழுமையாக ஜியோ மார்ட் நிறுவனம் ஸ்வாகா செய்து விடும் என்கிறார்கள், பொருளாதார நிபுணர்கள்.
பல்லாயிரம் கோடி ரூபாயை முதலீடாக போட்டு, ஆன் லைன் வர்த்தகத்தை தொடங்கியுள்ள பிக் பாஸ்கட் நிறுவனமே மற்றொரு கார்ப்பரேட் நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க முடியவில்லை என்றால், உள்ளூரில் பல லட்சங்களில் மளிகை கடையை, காய்கறி கடையை வைத்துள்ள மண்ணின் மைந்தர்களின் எதிர்காலத்தை பற்றி நினைத்துப் பார்த்தால், அதிர்ச்சியாகதான் இருக்கிறது. ஒரு பிக் பேஸ்கட் நிறுவனம் மூடப்பட்டால், பல ஆயிரம் பணியாளர்களுக்குத்தான் வேலையிழப்பு ஏற்படும். ஆனால், ஆன் லைன் வர்த்தகத்தை முழுமையாக மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தால், நாடு முழுவதும் கோடிக்கணக்கில் உள்ள சிறு வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்பதுதான் வணிகர்கள் சங்கங்களின் தொடர் குற்றச்சாட்டாக உள்ளது.

மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறி பொருட்கள் விற்பனையில், தன்னை தவிர வேறு எந்த நிறுவனங்களும் தொழில் நடத்தக் கூடாது என்ற நீண்ட கால திட்டத்தில், எப்படி ஜியோ போனை, இணையச் சலுகையை அறிவித்து, தொலைதொடர்புத்துறையில் மற்ற நிறுவனங்களையெல்லாம் அழித்து ஒழித்ததோ, அதேபோன்று மளிகைப் பொருட்கள் விற்பனையில், நெம்பர் 1 இடத்தை பிடிக்க, முகேஷ் அம்பானி தீர்க்கமாக இருக்கிறார் என்கிறார்கள் மும்பையில் உள்ள பிரபல ஊடகவியலாளர்கள். இந்த திட்டத்தை நிறைவேற்ற ஜியோ மார்ட்டில் கூடுதல் சலுகைகளையும், கவர்ச்சிகரமான திட்டங்களையும் அறிவித்தும், சிறுசிறு நகரங்களுக்கும் ஜியோ மார்ட் விற்பனை விரிவுப்படுத்தி, முகேஷ் அம்பானிதான் இந்தியா, இந்தியாதான் முகேஷ் அம்பானி என்ற நிலையை உருவாக்கிவிடுவார் என்று அச்சம் தெரிவிக்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.
சேல்ஸ் பாய்ஸின் கண்ணீர் கதை
பிக் பேஸ்கட் மற்றும் ஜியோ மார்ட் போன்ற ஆன் லைன் வர்த்தகத்தை முழுமையாக செயல்படுத்தி வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைக் குறி வைத்து, செயல் திட்டங்களை உருவாக்கியுள்ளது. வீடு வீடாக மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிப் பொருட்களை விற்பனை செய்வதற்கு, ஒவ்வொரு நடைக்கும் (டெலிவரிக்கும்) 40 ரூபாய் முதல் 50 ரூபாய் என கூலியாக வழங்குகிறது. 5 அல்லது 6 மணிநேரங்கள் உழைத்தால், சராசரியாக 10 இடங்களுக்குச் சென்று பொருட்களை டெலிவரி செய்து, மொத்தமாக 500 ரூபாய் அளவுக்கு வருமானத்தை ஈட்ட முடியும். குறைந்தபட்சம் 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் அதிகளவு போக்குவரத்து நெரிசல் உள்ள சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்று திரும்ப வேண்டும். அதாவது தங்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி, அதற்கு பெட்ரோல் போட்டு, வீடு வீடாக ஏறி இறங்க வேண்டும். இப்படி குதிரையை விட மின்னல் வேகத்தில் பறக்கும் இளைஞர்களுக்கு விபத்து காப்பீடு, வேலை பாதுகாப்பு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை, அரசு அறிவித்துள்ள விடுமுறை நாள்கள் என்று தொழிலாளர் துறை விதித்துள்ள எந்த சட்டமும் பொருந்தது.

இப்படி உயிரையும், இளமையையும் பணையம் வைத்து ஓடி ஓடி உழைக்கும் இளைஞரிடம் (சேல்ஸ் பாய்) பேசினோம். என்ன சார் பண்றது. சென்னையில் வசிக்கிறோம். குடும்பமே உழைத்தால்தான் மூன்று வேளையும் சாப்பிட முடிகிறது. அதிகாலை 6 மணி முதல் 11 மணிவரை இப்படி சேல்ஸ் பாயாக வேலை செய்துவிட்டு, அதற்குப் பிறகு வேறு வேலைக்கு சென்றுவிடுவேன். அரசாங்கம் கூறுகிற சலுகைகளையெல்லாம் கேட்டால், இந்த வேலையில் நீடிக்க முடியாது. சத்தமாக பேசுகிற ஆட்களையே இதுபோன்ற கார்ப்பரேட் நிறுவவனங்கள் வேலைக்கே எடுப்பதில்லை. இதில் எங்கே போய், எங்கள் உரிமைகளை கேட்பது. படிப்புக்கு உரிய வேலையில்லாததால்தான் இப்படி நாயாக உழைக்கிறோம். என்னைப் போன்று பல லட்சம் இளைஞர்கள் சென்னையில் மட்டும் இதுபோன்ற கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விட்டில் பூச்சிகளாக சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்று வேதனையோடு தெரிவித்துவிட்டு, மூச்சிரைக்க அடுத்த டெலிவரிக்கு ஓடினார்.

எங்கே செல்கிறது இந்தியா ? தலையெடுக்குமா தற்சார்ப்பு பொருளாதாரம்….