பொதுக்குழுவில் முதல்வர் இ.பி.எஸ். நம்பிக்கை….
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
இனிவரும் காலங்களில் சிறப்பாக பணியாற்ற உறுதி ஏற்போம். ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றினால் தான் வெற்றியை அடைய முடியும். உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி அதிமுகவை வீழ்த்த முடியாது. ஏப்ரல்,மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
திட்டம் போட்டு தேர்தலை சந்தித்தால் வெற்றி உறுதி என்று நம்பிக்கையுடன் கூறிய முதலமைச்சர், ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும், திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயார் என்றும் தெரிவித்தார்.
என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்த கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி கூறுகிறேன். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் போல தான் இல்லை என்று கூறிய இ.பி.எஸ்., 4 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார். இரவு, பகல் பாராமல் உழைக்க தான் தயாராக உள்ளதாகவும், சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் முதல்வர் இ.பி.எஸ். பழனிசாமி கூறினார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உரை
ஜெயலலிதாவின் பல திட்டங்கள் மூலம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறிய ஓ.பி.எஸ், மக்களின் ஆதரவை அதிமுகவை நோக்கி திருப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். சட்டசபையில் அதிமுகவிற்கு எதிர்கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த அவர், அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை என்று கூறினார். சட்டமன்ற தேர்தலுக்காக ஓடி, ஓடி உழைக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்..
இங்கு யார், யாருக்கும் அடிமை இல்லை; யாரும், யாரையும் கட்டுப்படுத்த முடியாது என்றும் ஓ.பி.எஸ். உறுதிபட கூறினார்.