இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இடிக்கப்பட்டது, அங்குள்ள தமிழர்களை மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நினைவிடம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து, யாழ்ப்பாண மாணவர்களும், இலங்கைத் தமிழக மக்களும் ஆர்வலர்களும் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பகுதியில் பதற்றநிலை நிலவும் நிலையில், இலங்கை ராணுவமும், காவல்துறையினரும் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், யாழ்ப்பாண நிகழ்வுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஓ.பி.எஸ்.ஸின் கண்டனம் இதோ
இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும், இனவெறியினரின் இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது.
வைகோ ஆர்ப்பாட்டம் காவல்துறையினரும், ராணுவமும் பல்கலைக்கழக வளாகத்தில் குவிப்பு.யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து ஜனவரி 11ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என வைகோ அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும்
இந்தப் போராட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், மதிமுகவினர் பங்கேற்க வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கல் இடிப்பு முதல்வர், தினகரன், திருமாவளவன் கண்டனம்…
இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்ட செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது என்றும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு முதல்வர் பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய நடவடிக்கைகள் சரியானதல்ல. தமிழ் மக்களின் எண்ணங்களில் நிறைந்திருக்கும் போராட்டத்தின் நினைவுகளை, சின்னங்களை அழிப்பதன் மூலம் அகற்றிவிட முடியாது என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும்
சிங்கள ஆதிக்கத்தைத் தகர்ப்போம். தமிழர் அடையாளம் காப்போம் என்று வி.சி,க தலைவர் திருமாவளவன் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.