Thu. Nov 21st, 2024

தாரை.இளமதி., சிறப்புச் செய்தியாளர்..

கரூர் நாடாளுமன்றத் தொகுதியிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலும் அடாவடி அரசியலுக்குப் பெயர் பெற்ற எஸ்.ஜோதிமணி எம்பி, முதல்முறையாக 2019 ஆம் ஆண்டில் டெல்லி நாடாளுமன்றத்திற்குள் காங்கிரஸ் எம்பியாக நுழைந்த போது கிடைக்காத வரவேற்பையும், பாராட்டுகளையும், ஆச்சரியங்களையும், விசாரிப்புகளையும் தற்போதைய நாடாளுமன்றத்தில் அமோகமாக அறுவடை செய்திருக்கிறார் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி வழக்கறிஞர் ஆர்.சுதா என்று ஆச்சரியம் விலகாமல் விவரிக்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர்கள்.
2019 முதல் 2024 வரை 5 ஆண்டு காலத்தில், நாடாளுமன்றத்தை கலங்கடித்த காங்கிரஸ் எம்பிக்களில் முதலிடத்தில் இருந்தவர் கரூர் எம்பி எஸ்.ஜோதிமணிதான். காங்கிரஸ் இளம் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைருவமான ராகுல்காந்தியின் தனித்த அபிமானத்திற்குரியவர் என்பதாலேயே, உட்கட்சி ஜனநாயகத்திற்கு எதிராக ஜோதிமணி செயல்படும் போதெல்லாம் அமைதி காப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்,தமிழக காங்கிரஸ் தலைவர்கள் .


எம்.பி.ஜோதிமணியின் அதிரடியான அரசியல் நடவடிக்கைகளால், அவரை தேர்ந்தெடுத்த கரூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், கூட்டணி கட்சியான திமுக மற்றும் தோழமை கட்சிகளைச் சேர்ந்த எந்தவொரு நிர்வாகிக்கும் துளியும் நன்மை இல்லை என்று வெளிப்படையாகவே குமறல்கள் கேட்ட போதும் கூட, தமது அரசியல் செயல்பாடுகளை சிறிதளவும் மாற்றிக் கொள்ளாதவர் எஸ்.ஜோதிமணி என்பதுதான் அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்களின் ஒட்டுமொத்த வருத்தமாகும். 2024 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெறுவதே கேள்விக்குறி என்று கரூர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளே பகிரங்கமாகவே குமறியபோதும், டெல்லி செல்வாக்கால், மீண்டும் களத்தில் குதித்து, நல்வாய்ப்பாக வாகை சூடி விட்டார் ஜோதிமணி.
இரண்டாவது முறையாக காங்கிரஸ் எம்பியாக நாடாளுமன்றத்திற்குள் ஜோதிமணி நுழைந்திருந்தாலும் கூட கடந்த 5 ஆண்டு காலம் போல, வருகின்ற 5 ஆண்டு காலமும் அவருக்கு வசந்தத்தை தந்துவிடாது என்பதற்கான அறிகுறிகள் தற்போதே வெளிப்படத் தொடங்கிவிட்டது என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள் டெல்லி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள்.


திமுக மகளிர் அணித் தலைவி கனிமொழி கருணாநிதி எம்பியின் ஆத்மார்த்தமான நட்பால், வடமாநிலங்களில் செல்வாக்கு மிகுந்த அரசியல் கட்சித் தலைவர்களின் பெண் வாரிசுகளோடு நெருக்கமாக பழகி, சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட தோழியாக தன்னை வார்த்துக் கொண்டவர் எஸ்.ஜோதிமணி எம்பி. தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்பி என்ற அடையாளத்தால் கடந்த 5 ஆண்டு காலம் டெல்லி மற்றும் வடமாநிலங்களில் எஸ்.ஜோதிமணிக்கு கிடைத்து வந்த மரியாதையும் செல்வாக்கையும் பங்கு போடும் போட்டியாளராக தற்போது தலையெடுத்துகிறார் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி வழக்கறிஞர் ஆர்.சுதா என்று கூறி அதிர்ச்சியூட்டுகிறார்கள் டெல்லி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள்.

தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய எஸ்.ஜோதிமணியின் பேச்சை விட வழக்கறிஞர் ஆர்.சுதாவின் உணர்ச்சிமிகுந்த உரைதான், ராகுல்காந்தி உள்பட அனைத்து வடமாநில காங்கிரஸ் எம்பிக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள், கன்னிப் பேச்சின் போதே மத்திய பாஜக அரசின் பாசிச கொள்கைகளையும், பாரபட்சமான நிதி ஒதுக்கீடுகளையும், செயல் திட்டங்களையும், எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் வஞ்சிப்பதையும் ஆவேசமாக வெளிப்படுத்திய ஆர்.சுதாவின் உரை, காங்கிரஸ் மற்றும் தோழமைக்கட்சி எம்பிக்களிடம் மட்டுமின்றி ஆளும்கட்சியான பாஜக எம்பிக்களிடமும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது என்கிறார்கள்.


எப்போதுமே சிடுசிடுவெனவே இருக்கும் ஜோதிமணியிடம் இருந்து அனல் வார்த்தைகள் தான் வெளிப்படும் என்பதை நாடாளுமன்ற எம்பிக்கள் யூகிக்கும் வேளையில், சாந்தமாக காட்சியளிக்கும் வழக்கறிஞர் ஆர்.சுதாவிடம் இருந்து தீப்பொறிகள் பறக்க தொடங்கியதைப் பார்த்து, அதுவும் முதல்முறையாக பேசும் போது, பிரதமர் மோடியையும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், மத்திய பாஜக அமைச்சர்களையும் சீற்றம் கொள்ளச் செய்யும் வகையில் வேண்டுமென்றே சீண்டி பேசியதை பார்த்து, காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தியே வியந்து போய்விட்டார் என்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள்.
கன்னிப்பேச்சின் தொடக்க வார்த்தையாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பெயரை உச்சரித்த நொடியே, தமிழ் எம்பிக்களை மட்டுமல்ல, தென்னிந்தியாவைச் சேர்ந்த எம்பிக்களையும் ஆர்.சுதா, தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்ததுதான் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் என்கிறார்கள் தமிழ் மொழியின் மாண்பை அறிந்திருக்கும் தென்னக எம்பிக்கள்.


புயல் போல ஜோதிமணி நாடாளுமன்ற வளாகத்தில் நடமாடிக் கொண்டிருக்க… பூவுக்குள் ஒரு பூகம்பமாய் கொள்கைப் பிடிப்போடு கம்பீரம் காட்டும் வழக்கறிஞர் ஆர்.சுதா எம்பியின் மீது காங்கிரஸ் மட்மின்றி வடமாநில தோழமைக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் கவனமும், முழுமையாக திரும்பி இருக்கிறது. வரும் 5 ஆண்டு காலமும் டெல்லியில் ஜொலிக்கப் போகும் தமிழக காங்கிரஸ் எம்பியாக வழக்கறிஞர் ஆர்.சுதா திகழ்வது நிச்சயம் என்று கூறும் தமிழக எம்பிக்கள், ஜோதிமணியின் அதிரடி, ஆர்ப்பாட்ட அரசியலை வெறுக்கும் காங்கிரஸ் தலைவர்களால், காங்கிரஸ் தலைமையோடு இருக்கும் நெருக்கத்தில் விரிசல் ஏற்பட்டு, அவரின் வரும்கால அரசியலில் கருமை அதிகமாகவே படர வாய்ப்பு இருக்கிறது என்று முணுமுணுக்கிறார்கள்.