புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் திறப்பு….
நவீன சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது அவர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன வசதிகள் உள்ளன. அடுத்த சிறப்பு அம்சமாக, ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கேத்லாப் சிகிச்சைப் பிரிவு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, இதன்மூலம், மாரடைப்பு, ரத்தக்குழாயில் அடைப்பை எளிதாக கண்டறிய முடியும். இருதய வால்வு சுருக்க நோய்களுக்கு பலூன் சிகிச்சை, இருதயத்தில் ஏற்பட்ட ஓட்டைகளை அடைக்கும் சிகிச்சை, இருதயத்தில் உள்ள ரத்தக்குழாயில் அழுத்தங்களை கண்டறிதல், செயற்கை இருதய துடிப்பு கருவி பொருத்துதல்,ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகளை சரிசெய்தல் போன்ற பல்வேறு சிகிச்சைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்க விழாவில், ஆட்சியர் உமாமகேஸ்வரி , காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.பூவதி, சிகிச்சை முறைப்பற்றி விளக்கி கூறினார்.