Sun. Nov 24th, 2024

சேலம் மாவட்டத்தில் இ.பி.எஸ். தவிர ஒருவருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடையாது…

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஆளும்கட்சியான அ.தி.மு.க.வும், முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க.வும் ஆரம்பத்திலேயே சூட்டை கிளப்பிவிட்டுள்ளனர். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் சவால்விட்டு, தமிழக அரசியல் களத்தையே கொதி நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர். மார்ச்,ஏப்ரல் மாத வாக்கில்தான் தேர்தல் என்றாலும், 50 நாட்களுக்கு முன்பாகவே, தேர்தல் ஜுரம் இரண்டு கட்சிகளையும் பற்றிக் கொண்டுவிட்டது. தலைவர்கள் இப்படி மோதிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவரவர் உட்கட்சிக்குள் எரிமைலைப் போன்று அக்னி குழம்புகள் எப்போது வெடிக்கும் என்ற நிலையில்தான் இருக்கிறது. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல், தன்னுடைய செல்வாக்கே அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுத் தந்துவிடும் என்ற நம்பிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பல நாட்களாக மேற்கொண்டு வரும் தேர்தல் பிரசாரம், தென் மாவட்டத்தில் பெரும்பான்மையான உள்ள சாதியைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னணி தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.

இந்தநேரத்தில், அ.தி.மு.க. ஐ.டி விங்க், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போல ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளதாம். அதைப் பற்றிதான் முன்னணி அ.தி.மு.க. தலைவர்கள் சூடாக விவாதிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? தற்போதைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 75 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதுதானாம்.

தற்போதைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மையானோர் தொகுதி மக்களிடம் எதிர்ப்பைதான் சம்பாதித்து வைத்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் தொகுதி மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்பதையோ, கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதிலோ ஒருவர் கூட முழுமனதோடு அக்கறை காட்டவில்லை. அதைவிட கொடுமையாக, ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர்களை தாண்டி, கிளை கழக அ.தி.மு.க செயலாளர்களுக்கோ, அடிமட்ட கட்சியினருக்கோ, விசுவாசமிக்க தொண்டர்களுக்கோ, அவர்கள் சந்தோஷம்படும்படி ஒரு நல்ல காரியத்தைக் கூட செய்யவில்லை. இதனால், ஒட்டுமொத்த தொகுதி மக்களிடையே நிலவும் கோபம், வரும் தேர்தலின் போது கடுமையாக அ.தி.மு.க.வுக்கு எதிராக திரும்பும். எனவே, தற்போதைய எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் வழங்காமல் புதியவர்களை களத்தில் இறக்கினால்தான், அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பே உள்ளது என்று ஐ.டி. விங்க் விலாவாரியாக ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம்.

மேலும், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும், தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்களில் அடாவடியாக தனக்குரிய கமிஷனை கறாராக வசூலிப்பது, கீழ்மட்ட அதிகாரி முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் வரை அதிகாரப் போதையில் மிரட்டி, அதிகார வர்க்கத்துடன் மனக்கசப்பை பெருமளவில் சம்பாதித்து வைத்திருப்பது, அ.தி.மு.க.வுக்கு எப்போதுமே ஆதரவு மனநிலையில் இருந்து வரும் ஒப்பந்ததாரர்களை புறக்கணித்துவிட்டு, தங்களது உறவினர்களுக்கு அரசு காண்ட்ராக்ட்டுகளை வாரி வழங்கியது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், அந்த ரிப்போர்ட்டில் இருக்கிறதாம். அதையெல்லாம் வாசித்துப் பார்த்த மூவர் அணி, நம்மைவிட எல்லோரும் படுமோசமான ஆட்டம் போட்டு இருக்கிறார்களே என்று அதிர்ந்து போய்விட்டார்களாம்.

எம்.எல்.ஏ.க்களின் அதிகார மிரட்டல்களுக்கும், கமிஷன் மற்றும் ஊழல் பணத்தில் பலதலைமுறைக்கும் உதாரணங்கள் மாநிலம் முழுவதும் ஆயிரம், ஆயிரமாக இருந்தாலும், உதாரணத்திற்கு சேலம் மாவட்டத்தை எடுத்துக் கொள்வோம். அந்த மாவட்டத்தில் உள்ள மொத்த தொகுதிகள் 11 ல், ஒரே ஒரு தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ. இருக்கிறார். அவரைத் தவிர, 10 தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்தான். அதுவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியில் அந்த மாவட்டத்தில்தான் வருகிறது. ஒட்டுமொத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக அ.தி.மு.க. நிர்வாகிகளே அடுக்கடுக்கான புகார் கூறுகின்றனர். கடந்த ஐந்தாண்டுகளில் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு துறைகளில் பதிவான சொத்துகளின் பட்டியலை ஆய்வு செய்தாலே, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஹோட்டல்கள், அடுக்குமாடி கட்டடங்கள், பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளிட்டவை புதிது புதிதாக யார் யாரெல்லாம் வாங்கியுள்ளனர் என்ற பட்டியல் எடுத்தாலே தெரிந்துவிடும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களின் சுருட்டல்கள் என அனல் கக்குகின்றனர் சேலம் அ.தி.மு.க. நிர்வாகிகள்.

மறைந்த ஜெயலலிதா, முதல்வராக இருந்த 15 ஆண்டுகளில் சம்பாதித்த சொத்துகளை விட சேலம் மாவட்டத்தின் புறநகரில் உள்ள தமிழுக்கு பெருமை சேர்க்கும் இலக்கியத்தை படைத்த நாயகனின் பெயரைக் கொண்ட ஒருவர், ஆயிரம் கோடிக்கு மேல் சுருட்டியுள்ளதாக கொதிக்கும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் அள்ளிக் குவித்த பணத்தில், அவர் கல்வித் தந்தையான ரகசியமும், உரிய முறைப்படி விசாரணை நடத்தினால் அம்பலத்திற்கு வரும் என்கிறார்கள் ஆவேசமாக. மேட்டூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான செம்மலை, ஓ.பி.எஸ் அணியாக இருந்து பின்னாளில் இ.பி.எஸ். ஆதரவாளராக மாறியிருந்தாலும்கூட, அவருக்கும் வரும் தேர்தலில் சீட் கிடையாது என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம் என்று அங்கலாய்க்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்..

கடந்த தேர்தலின்போது அவரே போராடிதான் அந்த தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார் என்பதும், அதுவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி கண்பார்வையால் மட்டுமே அவருக்கு அந்த பாக்கியம் கிடைத்தது என்பதும் ஊரறிந்த விஷயம் என்கிறார்கள்.
மற்ற தொகுதி எம்.எல்.ஏ.க்களான சேலம் மேற்கு வெங்கடாசலம், சேலம் தற்கு சக்திவேல், வீரபாண்டி மனோன்மணி, சங்ககிரி ராஜா, எடப்பாடி முதல்வர் இ.பி.எஸ்., ஓமலூர் வெற்றிவேல், ஏற்காடு சித்ரா, கெங்கவள்ளி மருதமுத்து, ஆத்தூர் சின்னதம்பி ஆகிய ஒன்பது பேரில், இ.பி.எஸ். தவிர மற்ற அனைவருமே, இ.பி.எஸ். தேர்வுதான் என்கிறார்கள். 2016ல் நடந்த விஷயம்தான் இது என்றாலும்கூட, இதில் உள்ள மர்மத்தை இப்போது உடைக்கிறோம் என்று கூறும் அந்த அ.தி.மு.க. முக்கியி புள்ளி, 8 தொகுதிகளுக்கும் தனது விசுவாசிகளை தேர்வு செய்த முக்கிய புள்ளியும், அவரது நிழலும், 8 பேரையும் அழைத்து, அவர்களது சொத்துக்களை ஒட்டுமொத்தமாக எழுதி வாங்கிக் கொண்டார்களாம். அதை அடகு வைத்து பணத்தை பெற்றுதான் தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தார்களாம்.

மேலும், மேலிடத்தில் இருந்து கொடுத்த பணத்தையும், தங்களுடைய விசுவாசிகள் மூலம்தான் 8 தொகுதிகளிலும் பட்டுவாடா செய்தார்களாம். அப்போது போட்ட மற்றொரு ஒப்பந்தம்தான், இதுவரை தமிழக அரசியலிலேயே கேட்டிராத அம்சம் என்று பொடி வைத்து பேசிய அவர், எம்.எல்.ஏ. வாக ஆனவுடன், கமிஷனில் பங்கு, அந்த கான்ட்ராக்ட் வேண்டும் என்றெல்லாம் அடம் பிடிக்கக் கூடாது. மாதம்மாதம் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு சம்பளமாக கிடைக்கும். அதுக்கு மேல் ஆசைபடக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டதாம்.
நம்மை மீறி அம்மா கவனத்திற்கு இதெல்லால் போகாது என்று அவர்கள் ஒரு கணக்குப் போட,அவர்களுக்கு மேல் உள்ள சக்தி, கூவத்தூர் வடிவில் வந்து, கோடிக்கணக்கான ரூபாயை அவர்களே வாரி வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியதுதான் தலையெழுத்து என்று சத்தமாக சிரித்தார் அ.தி.மு.க. நிர்வாகி.. ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் சொந்த ஊரில் சென்று விசாரித்துப் பாருங்கள். அவர்களின் கூடவே சுற்றிக்கொண்டு இருக்கும் அடிபொடிகள்கூட, எம்.எல்.ஏ.க்களைப் பற்றி வண்டி கணக்கில் குமறல்களை வாரிக் கொட்டுவார்கள்.

இந்த லட்சணத்தில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்கள் மீண்டும் ஓட்டு கேட்டு பொதுமக்களை சந்திக்க முடியும். இதுபோன்ற சமாச்சாரங்களைதான், ஆதியும் அந்தமுமாக சேகரித்து அ.தி.மு.க. ஐ.டி. விங்க், மூவர் அணியிடம் சமர்ப்பித்துள்ளது. அதைப்பார்த்து ஆடிப்போய்தான், தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மையானோருக்கு சீட் வழங்கக் கூடாது என்றும் அவர்களை வைத்து தேர்தலை சந்தித்தால் மீண்டும் ஆட்சி கனவுக் கூட இல்லை, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கூட அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது என்று திருச்செங்கோடு கடவுள் போல, ஒருபக்க சாமி தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டதாம்..

என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்…