Fri. Nov 22nd, 2024

காவல் துறை அதிகாரிகளின் அதிகார போட்டியால் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் கடந்த 3 மாதங்களாக காலியாக உள்ள கிழக்கு மண்டல இணை ஆணையர் பதவி நிரப்பப்படாமல் வைக்கப் பட்டிருந்ததால் தமிழ்நாடு காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பல மாதங்களாகவே தமிழ்நாடு காவல்துறை முழுமையாக ஸ்தம்பித்து நிற்பதை பார்த்து வேதனைப்படும் மனித உரிமை ஆர்வலர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சனாதான தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் செப்டம்பர் மாதம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டம் நிறைவடையும் நேரத்தில், திடீரென்று டிஜிபி அலுவலகம் நோக்கி அண்ணாமலை தலைமையில் புகார் மனு கொடுக்கப் போவதாக கூறி ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலத்தை காவல் துறை தடுத்து நிறுத்த முயன்றபோது, பாஜகவினர் அண்ணாமலை தலைமையில் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு களைந்து சென்றனர்.

அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்யாததால் சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றி வந்த திஷா மிட்டல் ஐபிஎஸ் மீது ஆட்சியாளர்களின் கோப பார்வை விழுந்தது. அதை மேலும் சூடாக்கும் விதமாக சென்னை மாமல்லபுரம் அருகே இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரியின்போது ஏற்பட்ட குளறுபடியால் முதல்வரின் வாகனமே நிறுத்தப்பட்ட சம்பவமும் திஷா மிட்டல் ஐபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு ஆட்சியாளர்களை தூண்டிவிட்டது.

இசைக்கச்சேரி ஏற்படுத்திய சர்ச்சையை அடுத்து, அந்த பகுதிக்கு பொறுப்பான பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன் IPS.,ம், உயரதிகாரியான திஷா மிட்டல் ஐபிஎஸ் ஆகிய இருவரும் செப்டம்பர் 11ம் தேதியன்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

பெருநகர சென்னை மாநகர காவல்துறை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொறுப்பு வகிக்கும் இணை ஆணையர் பதவி மிகவும் முக்கிய இடமாக காவல் துறையினரால் கருதப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம், சென்னை சேப்பாக்கம், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் ஆகிய இடங்களில் தினம்தோறும் பல்வேறு அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருவதுதான்.

முதல்வர் தினமும் தலைமை செயலகம் செல்லும் போது இணை ஆணையர் தலைமையில் தான் காமராஜர் சாலை முழுவதும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொள்ளும் கிழக்கு மண்டல இணை ஆணையர் பதவி, கடந்த 3 மாதங்களாக இணை ஆணையர் பதவி நிரப்பப்படவில்லை என்பது சென்னை மாநகர காவல் துறை அதிகாரிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய பதவியை உடனடியாக நிரப்பாமல், அர்த்தமற்ற காரணத்தையே தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டிஐஜி அந்தஸ்திலான அதிகாரிகள் காலிப்பணியிடம் அதிகமாக இருப்பதால் இந்த பதவியை நிரப்பவில்லை என காவல்துறை வட்டாரங்களும் தகவல்களை கசிய விட்டன.

இதனிடையே, நவம்பர் மாதம் 15ம் தேதியன்று வடக்கு மாநிலங்களில் தேசிய புலனாய்வு பிரிவு டிஐஜியாக பணியாற்றிவந்த தர்மராஜன் மத்திய அரசு பணியில் இருந்து மீண்டும் மாநில பணிக்கு அனுப்பப்பட்டார். தமிழ்நாட்டில் பணியாற்ற வேண்டும் என்று ஆர்வமுடன் திரும்பிய டிஜஜி தர்மராஜன் ஐபிஎஸ்ஸுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்காமல், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

நேர்மை மற்றும் கடமையுணர்வு மிகுந்த தர்மராஜன் ஐபிஎஸ்ஸை, சென்னை மாநகர கிழக்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்படுவார் என அவரது சக அதிகாரிகளாலேயே மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

3 ஆண்டுகளுக்கு மேல் தேசிய புலனாய்வு அமைப்பில் பணியாற்றியதோடு, ஏற்கனவே திருவல்லிக்கேணி மாவட்ட துணை ஆணையராகவும் பணியாற்றி இருப்பதால் தர்மராஜன் ஐபிஎஸ், இணை ஆணையர் பணியில் மிகவும் சிறப்பாக செயல்படுவார் என்றும் தகவல்கள் வெளியானது.

ஆனால், கடந்த 25 நாட்களுக்கும் மேலாக டிஐஜி தர்மராஜனை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதோடு, கிழக்கு மண்டல இணை ஆணையர் பதவியில் வேறு எந்தவொரு டிஐஜியும் நிரப்படவில்லை என்பதுததான் சர்ச்சைக்குரிய ஒன்றாகியது. இந்த பதவிக்குரிய தகுதியான அதிகாரி காத்திருப்போர் பட்டியல் வைக்கப்பட்டிருந்த நேரத்தில், ஒட்டுமொத்த தமிழ்நாடு காவல்துறைக்கும் தலைமை வகிக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸின் பரிந்துரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒப்புதல் வழங்கிவிட்ட பிறகும் கூட, அவரின் கீழ் பணியாற்றி வரும் இரண்டு ஐபிஎஸ் உயரதிகாரிகள், தர்மராஜன் ஐபிஎஸ் பணி நியமனத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வருவது எந்த வகையில் நியாயம் என ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்கள் எஸ்பி அந்தஸ்திலான காவல்துறை உயரதிகாரிகள்.

சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பதவி தொடர்பான சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வந்த நேரத்தில் வெளியான தகவல்தான், முதல்வர் மு.க.ஸ்டாலினையே ஒன்றிரண்டு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆட்டிப்படைக்கிறார்கள் என்ற அதிர்ச்சிக்குரிய தகவலம் கசிந்திருக்கிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பே தர்மராஜன் உள்ளிட்ட 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பணிமாறுதலில் முதல்வரே கையெழுத்து போட்டுள்ளதாக தகவல்கள் வெளியான போதும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாறுதல் பட்டியல் வெளியாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்து காவல் துறை வட்டாரங்களை விசாரித்த போது காவல் துறை அதிகாரிகளுக்கிடையே ஏற்பட்ட அதிகார மோதல்கள் காரணமாகவே பதவி மாறுதல் பட்டியல் வெளியாகாமல் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய புலனாய்வு அமைப்பில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் டிஐஜி தர்மராஜன் ஐபிஎஸ்ஸுக்கு இருப்பதால் இவரை மாநில உளவுத்துறை உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக நியமிக்க காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உளவுத் துறையில் பணியாற்றி டம்மி பதவிக்கு மாற்றப்பட்ட உயர் அதிகாரியான அடிஷனல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கும், தற்போதைய உளவுத்துறை அதிகாரியான ஐஜி செந்தில்வேல் ஐபிஎஸ்ஸுக்கும், தர்மராஜன் ஐபிஎஸ்ஸை, மாநில உளவுத்துறை உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜி பதவியில் நியமிக்க விருப்பம் இல்லை என்ற தகவலும் வெளியானது.

மத்திய அரசுப்பணியில் இருந்து வந்திருப்பதால் பாஜக கட்சிக்கு ஆதரவாக டிஐஜி தர்மராஜன் செயல்பட வாய்ப்பு இருப்பதாக, பள்ளி மாணவர்கள் கேள் மூட்டுவதைப் போல முதல்வரிடம் கூறி உளவுத்துறையில் நியமிக்க விடாமல் தடுத்து விட்டார்கள் என்று குமறும் காவல்துறை உயரதிகாரிகளும் சென்னையிலேயே பணிபுரிந்து வருகிறார்கள்.

ஒரே ஒரு பதவியை மையப்படுத்தி இவ்வளவு குழப்பங்கள் எழுந்துள்ள நிலையில், டிசம்பர் மாத இறுதியில் காவல் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில் தற்போது மாநில உளவுத்துறைக்கு டிஐஜியாக பணியாற்றும் ராஜேந்திரன் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெறும் போது அந்த காலிப்பணியிடத்தில் தர்மராஜன் ஐபிஎஸ்ஸை நியமித்துவிடலாம் என கருதிய டிஜிபி சங்கர் ஜிவால் சென்னை மாநகர கிழக்கு மண்டல இணை ஆணையர் பதவியில் தர்மராஜன் ஐபிஎஸ்ஸை நியமிக்க பரிந்துரைத்தார்.

இப்பதவிக்கு பல டிஐஜிக்கள் முட்டி, மோதிவரும் நிலையில் தங்களுக்கு வேண்டிய அதிகாரியை நியமிக்க டிஜிபிக்கு எதிராக செயல்படும் காவல் துறை உயர் அதிகாரிகள் திட்டமிட்டு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமன பட்டியலை வெளியிட விடாமல் முதல்வர் அலுவலக அதிகாரிகள் துணையோடு தடுத்து நிறுத்திவிட்டனர் என்ற விமர்சனம், தமிழ்நாடு அரசு நிர்வாகத்திற்கு தலைமை ஏற்றிருப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தானா என்ற சந்தேகம் எழுவதாக, ஆளும்கட்சி முன்னணி நிர்வாகிகளே அதிர்ச்சியோடு கேள்வி எழுப்புகிறார்கள்.

காவல்துறையில் ஒரே ஒரு பதவிக்கான நியமனம் சர்ச்சையாக, பொதுமக்கள் அளவுக்கு விவாதப் பொருளாகிவிட்ட நேரத்தில்தான், அவசர அவசரமாக திரு. தர்மராஜன் ஐபிஎஸ் உள்ளிட்ட சில உயர் அதிகாரிகள் பணி நியமனம் தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் வெளியிட்டார்.

அந்த அறிவிப்பை பார்த்து காவல்துறையில் நேர்மையாக பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரிகள் கொதிப்பின் உச்சநிலைக்கு சென்றுவிட்டார்கள். டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் பரிந்துரையின்படி, சென்னை கிழக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் பதவிக்கு டிஐஜி தர்மராஜன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுவிட்டார். ஆனால், சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி ஐபிஎஸ்ஸின் பணியிட மாற்றமும், கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டிருக்கும் பிரமோத் குமார் ஐபிஎஸ்ஸுக்கும் வழங்கப்பட்டுள்ள பணியிட மாற்றம்தான், நேர்மையான ஐபிஎஸ் அதிகாரிகளை மிகவும் சோர்வடைய வைத்திருக்கிறது.

சிறைத்துறையில் பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு, மனித உரிமை ஆர்வலர்களின் பாராட்டுகளை பெற்றிருப்பவர் அம்ரேஷ் புஜாரி ஐபிஎஸ். சிறையில் மனநோயாளியாக மாறும் கைதிகளுக்கு, நிம்மதி தரும் வகையில், அவரவர் குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசுவதற்கான வாய்ப்பை உருவாக்கி தந்தவர் டிஐஜி அம்ரேஷ் புஜாரி ஐபிஎஸ். மனிதநேயத்துடனுடம் நேர்மை தவறாமலும் பணியாற்றி வந்த டிஐஜி அம்ரேஷ் புஜாரி ஐபிஎஸ், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சட்டத்திற்கு விரோதமாக வழங்கப்பட்ட சலுகைகளை தடுத்து நிறுத்தியதை திராவிட மாடல் ஆட்சியாளர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அதன் காரணமாகவே, சிறைத்துறையில் இருந்து இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழான தகுதியுடைய காகித ஆலை நிறுவனத்திற்கு டிஐஜி அம்ரேஷ் புஜாரி ஐபிஎஸ் அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து 2023 ஆண்டு வரை, மூன்று வருடங்களில் மூன்று பணி மாறுதல்களை சந்தித்துள்ள டிஐஜி அந்தஸ்திலான உயர் போலீஸ் அதிகாரி, புதிய பணியிடத்தில் நிம்மதியாகவும் உற்சாகமாகவும் பணியாற்றிட முடியுமா என கேள்வி எழுப்புகிறார்கள் அம்ரேஷ் புஜாரி ஐபிஎஸ்ஸுக்கு நெருக்கமான காவல்துறை உயரதிகாரிகள்.

திராவிட மாடல் ஆட்சி, சமூக நீதியை உயிர் மூச்சாக கொண்டிருக்கும் நேரத்தில், அனைவரும் சமம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் நிலையில், நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கலாமா என்று ஆவேசமாக கேட்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

நேர்மையான அதிகாரிகளை துன்புறுத்துவதும், அறத்திற்கு எதிரான மனநிலை அதிகாரிகளை கொண்டாடுவதும் எந்த வகையில் ஜனநாயகம் என்கிறார்கள். திருப்பூரில் பொதுமக்களின் பல நூறு கோடி ரூபாய் முதலீட்டை மோசடி செய்த நிதி நிறுவன பெண் இயக்குனரை கடத்தி 2.5 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்ற வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பவர் பிரமோத் குமார் ஐபிஎஸ். சிபிஐ விசாரணையை எதிர்கொண்டிருக்கும் பிரமோத் குமார் ஐபிஎஸ், காகித ஆலை நிறுவனத்தில் பணியாற்றி போதே முறைகேடுகளில் ஈடுபட்டார் என்று புகார்கள் கூறப்பட்ட நிலையில், அவரை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டது சரியான நடவடிக்கைதானா என்று ஆவேசம் காட்டுகிறார்கள் தமிழ்நாடு காவல்தறையின் உயரதிகாரிகள்.

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணியிட மாறுதல் உத்தரவுகள் வெளியாகும் போதெல்லாம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை மீதே சந்தேகத்தை எழுப்புவோர்தான் அதிகமாக இருக்கிறது. முதல் அமைச்சர் அலுவலக செயலாளர்களின் அறிவுரைகளை ஏற்காமல், மூத்த அமைச்சர்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட தொடங்கினாலே, முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகத்திற்கு எதிராக அடிக்கடி எழும் விமர்சனங்களை தடுத்து நிறுத்தி விட முடியும் என்று உறுதிபட கூறுகிறார்கள் திராவிட சிந்தனையாளர்கள்.