குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவையில் பாஜக மகத்தான வெற்றிப் பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு மேல் அதீத இடங்களை கைப்பற்றியுள்ளதால், முந்தைய தேர்தலில் பெற்ற வெற்றிகளை பாஜகவே முறியடித்துள்ளதால், நாடு முழுவதும் உள்ள பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 7 ஆம் தேதியான இன்று காலை எண்ணப்படும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி காலையில் துவங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், துவக்கம் முதலே பாஜகவுக்கு வாக்காளர்கள் பேரதரவு வழங்கியுள்ளனைர் என்பதை நிரூபிக்கும் வகையிலேயே இருந்தது.
மொத்தம் உள்ள 182 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையிடங்களான 92 தொகுதிகளுக்கு மேல் கூடுதலாக தொகுதிகளை பெறும் வகையில் நண்பகல் 1 மணியளவில் 152 இடங்களில் பாஜக முன்னணியில் இருந்தது. கடந்த 2017 ல் நடைபெற்ற தேர்தலில் 99 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்த பாஜக, தற்போதைய தேர்தலில் 155 இடங்களை கைப்பற்றும் அளவுக்கு முன்னேற்றம் கண்டிருப்பதால், நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் துள்ளி குதித்து வருகின்றனர்.
இரண்டாம் இடத்திற்கு போட்டியாக தேர்தல் களத்தில் கடுமையாக போராடிய காங்கிரஸுக்கும், ஆம் ஆத்மிக்கும் பேரதிர்ச்சி வழங்கும் வகையில் தான் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன.
காங்கிரஸ் இரண்டு இலக்கு எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற்று தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், ஆம் ஆத்மி இரண்டு இலக்கு எண்ணிக்கையை தொட முடியாத அளவுக்கு பரிதாபமான நிலையில் இருந்தது.
குஜராத் மாநிலத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஆட்சிப் பீடத்தில் இருந்தும் பாரதிய ஜனதா கட்சியை அகற்றும் வகையில் தேர்தல் பரப்புரையில் பல்வேறு வியூகங்களை காங்கிரஸும், ஆம் ஆத்மியும் முன்னெடுத்தன. ஆனால், அவற்றை எல்லாம் முறியடித்து, மீண்டும் ஆட்சியை பாஜக தக்க வைத்துக் கொண்டதற்கு முழு முதற்காரணம் பிரதமர் மோடியின் சூறாவளி பிரசாரமும், குஜராத் மற்றும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசுகள் மேற்கொண்ட சாதனைகள், வளர்ச்சித் திட்டங்கள் தான் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்கிறார்கள் குஜராத் மாநில பாஜக நிர்வாகிகள்.
குஜராத் மாநிலத்தில் பாஜகவுக்கு கிடைத்த வரலாறு காணாத வெற்றி, அம்மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுவதிலும் பாஜக தொண்டர்களை உற்சாகமாக கொண்டாட்டத்தில் திளைக்க வைத்துள்ளது.
பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக தேதிய அளவில் பார்க்கப்படும் காங்கிரஸ் கட்சி, குஜராத்தில் பரிதாபகரமான தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 2017 ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 59 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் தற்போதைய தேர்தலில் 19 இடங்களில்தான் முன்னிலை வகித்து வருகிறது. அதுவும் கூட்டணி கட்சிகளோடு இந்த இடங்களை சாத்தியப்படுத்தியுள்ளது.காங்கிரஸ் வேட்பாளர்கள் 13 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.
ஆம் ஆத்மி 7 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.
மோடிக்கு குவியும் பாராட்டு..
குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றியை, பிரதமர் மோடிக்கு காணிக்கையாக்கிறோம் என்று பெருமிதத்தோடு கூறுகிறார்கள் குஜராத் மாநில பாஜக தலைவர்கள். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி மேற்கொண்ட சூறாவளி பயணமும், 50 கி.மீ. தூரத்திற்கு திறந்த காரில் நின்றும், நடை பயணமாகவும் சென்று மக்களிடம் மேற்கொண்ட பிரசாரத்திற்கு பேரதரவு கிடைத்துள்ளது என்கிறார்கள். மேலும் மத்திய, மாநில பாஜக அரசின் சாதனைகளும், மோடி அறிமுகப்படுத்திய குஜராத் மாடல் ஆட்சி தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்றதாலும் பொதுமக்கள் ஓரணியில் நின்று பாஜகவிற்கு மகத்தான வெற்றியை தந்துள்ளனர் என்றும் உற்சாகமாக கூறுகிறார்கள் பாஜக மேலிட தலைவர்கள்.
ஹிமாச்சலில் காங். வெற்றி
குஜராத் மாநிலத்தில் வெற்றி வாய்ப்பை பறி கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஹிமாச்சல் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
ஹிமாச்சல் மாநிலத்தில் உள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் 39 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 26 இடங்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். வெற்றி சான்றிதழ்களைப் பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக விலை பேசிவிடக் கூடாது என்பதில் முனைப்பு காட்டி வரும் காங்கிரஸ் மேலிடம், காங்கிரஸ் எம்எல்ஏக்களை சண்டிகர் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியாக அளித்ததையடுத்து, அரசு ஊழியர்கள் பெரும்பான்மையாக காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதன் காரணமாகவே, பாஜக ஆட்சியை இழந்துள்ளது என்கிறார்கள் ஹிமாச்சல் மாநில அரசியல் கள ஆய்வாளர்கள்.