டெல்லியின் புறநகர் பகுதிகளில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை களைகட்டியுள்ளது. இந்தப் ஒத்திகை பேரணியை தடுக்க அதிரடிப்படையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், உத்தரப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல்லாயிரக்கணக்கானோர், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு நடத்தி வரும் போராட்டம் 43 வது நாளாக தொடர்கிறது.
3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளில் விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள். இதனால், 7ம் கட்டமாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் தீர்வு எட்டப்படவில்லை. தங்கள் கோரிக் வெற்றி பெறும் வரை டெல்லியை விட்டு திரும்பிச் செல்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரமாக்கும் வகையில் வரும் 26ம் தேதி நடைபெறும் குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாவும் எச்சரித்துள்ளனர். அதன் முன்னோட்டமாக டெல்லியில் இன்று டிராக்டர் பேரணி ஒத்திகை போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் டெல்லியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க டெல்லி அரசு நிர்வாகம், ஆயிரக்கணக்கான அதிரடிப்படை வீரர்களை குவித்துள்ளது.