பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முடியாததால் மனமுடைந்த இளைஞர் மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, திருவாரூர் மாவட்டம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நன்னில்ம் அருகே உள்ள வேலங்குடி ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணமாகி மனைவியும் கைக்குழந்தையும் உள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வந்தார். கட்டட கட்டுமானத்திற்கு தவணை முறையில் மத்திய அரசு வழங்கும் நிதியை பெறுவதற்காக பணிபார்வையாளர் மகேஸ்வரனை அணுகியபோது, திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு 3 ஆயிரம் ரூபாய் லஞ்சமும், அடுத்த இரண்டு தவணைகளுக்கு உரிய பணத்தை வழங்கிய போது ரு. 15 ஆயிரம் ரூபாயும் லஞ்சம் பெற்றதாக அந்த மணிகண்டன் வீடியோ மூலம் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், வீட்டின் மேற்கூரைப் பணியை நிறைவு செய்வதற்கு தேவையான பணத்தையும் மூன்றாவது தவணைக்குரிய பணத்தையும் கேட்டு மகேஸ்வரனை அணுகிய போது மேலும் லஞ்சம் தர வேண்டும் என கூறி மணிகண்டனை இழுத்தடித்துள்ளார்.
இதனால் மனம் வெறுத்துப் போன மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
லஞ்சப் பணம் தரமுடியாததால் உயிரை மாய்ந்து கொண்ட இளைஞர் மணிகண்டனின் சோக முடிவு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மக்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மணிகண்டனின் மரணச் செய்திக் கேட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு விரைந்து சென்ற தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, உயிரிழந்த மணிகண்டனின் குடும்பத்தினரைச் சந்தித்து உயிரிழப்பு தொடர்பு குறித்து கேட்டறிந்ததுடன், லஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்த பணி பார்வையாளர் மகேஸ்வரனின் ஈவு இரக்கமற்ற செயலையும் கேட்டு அதிர்ச்ச்சியடைந்தார்.
மணிகண்டனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய கே.அண்ணாமலை, உயிரிழப்புக்கு காரணமானவருக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவேன் என்றும் மணிகண்டன் உயிரிழப்பால் நிர்கதியாக இருக்கும் குடும்பத்தினர் நிலை குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நீதியும், நிவாரண உதவித்தொகையும் பெற்றுதருவதற்கான நடவடிக்கைகளை உறுதியாக, விரைவாக எடுப்பேன் என்று அவரது பெற்றோர் மற்றும் மணிகண்டனின் மனைவியிடம் உறுதியளித்துள்ளார்.