உக்ரைனுக்கு எதிராக உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் இரண்டு முக்கியமான நகரங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் குண்டு மழை 4 ஆம் நாளை எட்டியுள்ள நிலையில், குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்ய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கமான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அரசு தகவ வெளியிட்டுள்ளது.
நாளுக்கு நாள் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில், உக்ரைனில் மேற்படிப்புக்காகவும், வர்த்தக நடவடிக்கைகளுக்காக சென்றவர்கள் என பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள், தாய்நாடு திரும்ப, ஒன்றிய அரசின் மீட்பு நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புக்காக அந்நாட்டிற்காக சென்ற மாணவ, மாணவியர் ஆயிரக்கணக்கானோர், தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள சிறப்பு முகாமை தொடர்பு தங்களை விரைந்து மீட்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகராமான கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் தமிழக மாணவர்கள் நூற்றுக்கணக்கில் தங்கியுள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஒன்றிய அரசின் உதவியோடு, மீட்பு நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்காக ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் மூலம் கடந்த 24 மணிநேரத்தில் டெல்லி, மும்பை ஆகிய நகரங்களுக்கு மூன்று விமானங்களில் 700 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.
டெல்லி மற்றும் விமான நிலையம் வந்து சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோரை ஒன்றிய அமைச்சர்கள் வரவேற்றனர். இதேபோல, மும்பை வழியாக சென்னை விமான நிலையம் வந்த தமிழக மாணவர்கள் 5 பேரை தமிழக அரசின் சார்பில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவரவர் சொந்த ஊருக்கு செல்வதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உக்ரைனில் இருந்து சென்னை வந்த தங்கள் வாரிசுகளை வரவேற்பதற்காக அவரவர் பெற்றோர்களும் விமான நிலையத்திற்கு வந்திருந்து, தங்கள் வாரிசுகளை கண்ணீர் மல்க ஆரத்தழுவி வரவேற்றது, அங்கிருந்தவர்களிடம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செஞ்சி மஸ்தான், உக்ரைனில் தங்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் இரண்டாரு நாட்களில் அனைத்து மாணவர்களும் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டு விடுவார்கள் என உறுதிப்பட தெரிவித்தார்.