திமுக பிரமுகரை தாக்கியதாக எழுந்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 41 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாக்குச்சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, அங்கு அதிமுக நிர்வாகிகளோடு விரைந்து வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர், திமுக நிர்வாகி நரேஷ் என்பவரை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அப்போது அதிமுகவைச் சேர்ந்த சிலர், நரேஷை அடித்து உதைத்ததாகவும், அவரின் மேல்சட்டையை கிழித்து அவரது கைகளை கட்டி சாலையில் இழுந்து வந்ததாகவும் புகார் கூறப்பட்டது. மேலும், இந்த நிகழ்வுகள் அனைத்தும் கைபேசி மூலம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் நரேஷ், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற விசாரணையில், ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் தன்னை தாக்கி துன்புறுத்தியாக புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த தண்டையார்பேட்டை காவல் துறையினர், ஜெயக்குமார் உள்ளிட்ட 41 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இபிஎஸ் கண்டனம்…
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதற்கு அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
கள்ள ஓட்டு போட்டவரை பிடித்து கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது; குற்றவாளிகளை பிடித்துக்கொடுப்பது தவறா?
குற்றவாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணைபோவது வேதனையளிக்கிறது.
அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், தோல்வி அடைந்தவர்களாக அறிவிக்க வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டுமென வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது
முறைகேடுகள் நடந்தால் அதிமுக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கார் ஓட்டுநரும் தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் கள்ள ஓட்டு விவகாரம் தொடர்பாக புகார் மனு ஒன்று அளித்தார் அதன் பேரில் 10 திமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.