கோடிக்கணக்கான ரூபாய் தருவதாக கொங்கு அமைச்சர்கள் வாக்குறுதி…
தமிழக அரசியலில் புதிய கட்சித் தொடங்கி நடிகர் ரஜினிகாந்த் தேர்தலில் குதித்தால், ஆளும்கட்சியான அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இருந்தாலும், தன் உடல்நிலையைக் காரணம் காட்டி, அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த, கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு, அவரது ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமின்றி, எம்.ஜி.ஆர். காலத்து அரசியல் பிரபலங்களுக்கும் கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதுபோலவே, அவரின் அரசியல் பிரவேசத்தால், தங்களுக்கும் புகழ் வெளிச்சம் அதிகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த ஊடகவியலாளர்கள் ஒருசிலரும் கடும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், ரஜினியின் திடீர் பல்டியால் மனம் நொந்துப் போய்வுள்ள அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளில் பலர், உடல்நிலையைப் பற்றி கவலைப்படாமல், துணிந்து அரசியல் கட்சியை ரஜினி தொடங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, தமிழகம் முழுவதும் பல இடங்களில் ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் தங்கள் மனக்குமறல்களை கொட்டினர். கடந்த 30 வருடங்களாக ரஜினிகாந்த் அரசியல் கட்சியை ஆரம்பிப்பார். அதன் மூலம் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்து தங்களது பகுதி மக்களுக்கு கூடுதல் நலத்திட்டங்களை வழங்க வழியேற்படும் என்று ஆர்வத்துடன் காத்திருந்தோம்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட எங்களைப் போட்டியிடக் கூடாது என்று ரஜினி தடுத்துவிட்டார். அவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நாங்கள் நடந்துக் கொண்டதால், உள்ளாட்சி அமைப்புகளில் கூட ஒரு கவுன்சிலராக கூட வெற்றிப் பெற்று எங்களால் அரசு அதிகாரத்துடன் சமுதாயப் பணியை ஆற்ற முடியவில்லை. ரஜினிக்காக நாங்கள் எங்கள் பணம், இளமை, உழைப்பு என அனைத்தையும் இழந்துவிட்டோம். வாழ்க்கையின் நிறைவுப்பகுதியில் நின்றுக் கொண்டிருக்கும் எங்களுக்கு, ரஜினிகாந்த் நல்ல வழிகாட்ட வேண்டும். உள்ளூரில் எங்களில் பலர் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சி நிர்வாகிகளோடு இணக்கமாக தான் பயணித்து வந்துள்ளோம். எல்லோரும் நட்புடன் பழகியிருந்தாலும் கூட, வரும் சட்டமன்றத் தேர்தல் காலம் முக்கியமானது என்பதால், ரஜினி காட்டும் வழியில் நடப்போம். இல்லையெனில், எங்கள் நிர்வாகிகள் பலர் மனம் வெறுத்த நிலையில் இருக்கும் சூழ்நிலையில் அ.தி.மு.க.விற்கோ, தி.மு.க.விற்கோ சென்று விடுவார்கள்.
இத்தனை ஆண்டுகள் கட்டுக்கோப்போடு இருந்த ரஜினி ரசிகர்கள், வேறு அரசியல் கட்சிகளில் இணைந்தால், அது ரஜினியின் புகழுக்குதான் களங்கத்தை ஏற்படுத்தும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
ரஜினி ரசிகர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டுள்ள ஆளும்கட்சி அ.தி.மு.க. பிரமுகர்கள், அவர்களை வரும் தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தந்த பகுதியில் அவரவருக்கு உள்ள செல்வாக்கின் அடிப்படையில் பல ஆயிரம் ரூபாயோ அல்லது லட்சக்கணக்கிலோ பணம் கொடுத்து, இழுத்து அ.தி.மு.க.வில் சேர்க்குமாறு மேற்கு மண்டலங்களைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு கொங்கு அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளார்களாம். ஒரு மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு அ.தி.மு.க.வுக்கு தாவினால், அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வெகுமதிகள் கூட தருவதற்கு தயாராக இருக்கிறார்கள் கொங்கு அமைச்சர்கள் என்று மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றத்தின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர் தகவல் தெரிவித்தார்.