Sun. Nov 24th, 2024

அதிமுக துவங்கி 50 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு அதிமுக சார்பில் பொன் விழா கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

அதிமுக தலைமைக் கழகம் அமைந்துள்ள சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தொண்டர்கள் காலை முதலே திரளாக திரண்டனர். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள், அந்த வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோரின் திருவுருச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, அதிமுக பொன் விழா துவக்கத்தை முன்னிட்டு சிறப்பு மலர் வெளியிட்டப்பட்டதுடன், அதிமுக துவக்க காலத்தில் இருந்து நிர்வாகியாக நீடித்து சிறப்பாக பணியாற்றி உயிரிழந்த பழம்பெரும் தொண்டர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் 5 குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

பின்னர், அதிமுக தலைவர்கள் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினர்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான அதிமுக நிகழ்ச்சிகளில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதைப்போலவே, மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்கள், அதிமுக பொன்விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா

இதனிடையே, மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தோழியான வி.என்.சசிகலாவும் அதிமுக பொன்விழாவை தனித்து கொண்டாடி வருகிறார். இதில் அவரின் ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கில் திரண்டுள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு வருகை தந்த வி.கே.சசிகலா, அங்கு அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.

அதிமுக பொன்விழாவையொட்டி எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் வி.கே.சசிகலா பெயரில் கல்வெட்டு பதிக்கப்பட உள்ளது.

அந்த கல்வெட்டில், கொடியேற்றியவர்: வி.கே.சசிகலா, கழக பொதுச் செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் வாழ்விடமான ராமாபவரம் தோட்டத்திற்குச் சென்ற வி.கே.சசிகலா, அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொன் விழா மலரை வெளியிட்ட அவர், அங்கு திரண்டிருந்தவர்களுக்கு இனிப்புகளும் வழங்கினார்.

இப்படி அதிமுக பொன் விழா துவக்க ஆண்டு கொண்டாட்டமாகவும், கேலிக் கூத்தாகவும் நடைபெற்று வருவதைக் கண்டு எம்.ஜி.ஆர். காலத்து மூத்த நிர்வாகிகள் கவலையடைந்துள்ளனர்.

ஜெயக்குமார் கண்டனம்…

இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் என்று தன்னை வி.கே.சசிகலா அறிவித்துக் கொள்வதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. பொதுச்செயலாளர் என சசிகலா கூறுவது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது என்று ஆவேசமாக கூறினார்.