Sun. Nov 24th, 2024

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பனிக்குப்பதில் திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கு பணிபுரிந்து வந்த கோவிந்தராசு(60) என்ற கூலி தொழிலாளி கடந்த மாதம் 19 ஆம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரை எம்.பி. ரமேஷும் அவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும் அடித்து கொலை செய்ததாக கோவிந்தராசு மகன், காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாமக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, உள்ளூர் போலீசார் விசாரணையில் இருந்து சிபிசிஐடி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, திமுக எம்.பி. ரமேஷ் உள்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ரமேஷை தவிர எஞ்சிய 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான எம்.பி. ரமேஷை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் முனைப்பு காட்டி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை பண்ருட்டி நீதிமன்றத்தில் திமுக எம்.பி. ரமேஷ் சரணடைந்தார்.