Sat. Nov 23rd, 2024

உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்!-

ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் கூடுதல் பார்வையாளர்கள்! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களா நியமிக்க வேண்டும், மத்திய போலீஸ் படையினரை பாதுகாப்புக்கு அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த மனுவை பரிசீலிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மாவட்டங்களில் 20 சதவீத வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் இணையதள நேரலை வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஸ்டிராங்க் ரூம், வாக்கு எண்ணிக்கை மையங்கள் அடையாளம் காணப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் சிக்கலான, பதட்டமான வாக்குச்சாவடிகளில் மட்டும் வீடியோ பதிவு செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடப்பபட்டிருந்தது.

இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், மாவட்டத்தில் 20 சதவீத வாக்குச்சாவடிகள் மட்டுமல்லாமல் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் இணையதள நேரலை வசதி செய்ய வேண்டும் எனவும், வாக்கு எண்ணிக்கை மையங்கள், ஸ்டிராங்க் ரூம்கள் குறித்த விவரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

மேலும் வாக்குச்சாவடிகளில் தொடர்ந்து வீடியோ பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்த அவர், ஸ்ட்ராங் ரூம்களுக்கு உள்ளேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் எனவும் தேர்தல் பார்வையாளர்களின் விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ரகசியமாக செயல்படக் கூடிய தேர்தல் பார்வையாளர்களை அடையாளப்படுத்த முடியாது எனவும், வாக்கு எண்ணிக்கை மையத்திலும், ஸ்ட்ராங்க் ரூம்களுக்கு வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால், உள்ளே பொருத்த அவசியமில்லை என வாதிட்டார்.முடிந்த அளவு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளக்கமளித்தார்.

அரசு தரப்பு விளக்கத்தை கேட்ட நீதிபதிகள், 100 சதவீத இடைவிடாத வீடியோ பதிவுக்கு நடவடிக்கை எடுப்பதாக அரசுத்தரப்பில் ஒப்புதல் தெரிவித்ததை பதிவு செய்து கொண்டதாகவும், இதே நடைமுறைகளை பின்பற்றி அரசால் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தனர். மேலும் அனைத்து ஒன்றியங்களிலும் கூடுதல் தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், எந்த புகாருக்கும் இடம் தராத வகையில் அதிகாரிகள் நியாயமான தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு கடுமையாக அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.