Fri. May 2nd, 2025

சிறப்புச் செய்தியாளர் தாரை இளமதி..


கோயில் மூடியிருக்கும் நாளிலும் அரசு ஊழியர்கள் விறுவிறுப்பாக பணியாற்றும் அதிசயம்….

திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ் பெற்ற கோயில்களுக்கு பஞ்சமில்லை. திரும்பிய திசையெங்கும் வரலாறு மற்றும் புராண கால கோயில்கள், கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. கோயில்களில் குடியிருக்கும் தெய்வங்களுக்கும் தனித்துவமிக்க வரலாறுகள், தெய்வக் கதைகள் கூறப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாங்குனேரி வட்டத்தில் உள்ள களக்காட்டில் தெய்வாம்சத்துடன் காட்சித் தந்துக் கொண்டிருக்கிறது, அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்பாள் சமேத சத்யவாகீஸ்வரர் திருக்கோயில். கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் கோயில் கோபுரத்தின் தரிசனமே, அதன் முன் பணியும் பக்தர்களின் உள்ளத்தையும், உடலையும் மெய் சிலிர்க்க வைக்கிறது.

அந்த பக்தி பரவசததோடு ராஜ கோபுரத்தை கடந்து உள்ளே நுழையும் பக்தர்கள், அடுத்த நொடியே பதற்றம் அடையும் வகையில், கோயில் பிரகாரம் பராமரிப்பு இன்றி காட்சியளிப்பதைப் பார்த்து கண்ணீர் சிந்துகிறார்கள். அதுவும், கோயிலுக்குள் இடது பக்கத்தில் உள்ள குளம், மிகவும் மோசமான நிலையில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. முந்தைய அதிமுக ஆட்சியின் பத்தாண்டு காலத்தில் தமிழகத்தில் எந்தளவுக்கு கோயில்கள் பராமரிக்கப்பட்டு வந்தன என்பதற்கு களக்காடு கோயில் ஒன்றே போதும். இத்தனைக்கும் இந்து மதத்தை தூக்கிப் பிடிக்கும் பாஜக.வுடன்தான் கடந்த 4 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி கூட்டணி வைத்துக் கொண்டிருந்தது. அப்போதைய ஆட்சியாளர்கள் தங்களை வளப்படுத்திக் கொண்டார்களே தவிர, மக்களின் அத்தியாவசியப் பணிகள் முதல் ஆலயப் பணி என அத்தனையிலும் அலட்சிய மனப்பான்மையோயுடனே செயல்பட்டிருக்கிறார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பி.கே.சேகர்பாபு, தனது மனதிற்கு மிகவும் பிடித்தமான இறைப்பணியை, அரசியலுக்கு அப்பாற்பட்டு உள்ளார்த்த பக்தியோடு அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொண்டு வருகிறார். கடந்த 100 நாட்களுக்கு மேலாக தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்குச் சென்று, அந்தந்த ஊர்களில் உள்ள புகழ் பெற்ற கோயில்களை எல்லாம் ஆய்வு செய்து, திருப்பணிகளையும், சீரமைக்கும் பணிகளையும் முடுக்கி விட்டார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் காரணமாக எஞ்சிய திருத்தலங்களுக்கு செல்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படிபட்ட நேரத்தில், களக்காடு கோயிலுக்கு நேற்றைய தினம் சென்ற பக்தர் ஒருவர், தான் கண்ட காட்சிகளை எல்லாம், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ். கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

பக்தரின் மனவேதனையை உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். வாட்ஸ் அப் மூலம் மின்னல் வேகத்தில் பகிரப்பட்ட இந்த தகவல்களை விட, தலைமைச் செயலாளரின் துரித பகிர்தலும், அமைச்சர் பி.கே. சேகர் பாபுவின் நிர்வாக நடவடிக்கையும் மின்னல் வேகத்தில் நடைபெற்றுள்ளது. இதுபோல, தலைமைச் செயலாளர் தகவலை பகிர்வதும், அதை தலையாய கடமையென கருதி ஆளும்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் உடனடியாக நிறைவேற்ற உத்தரவுகளை பிறப்பிப்பதும் தமிழகத்தின் கடந்த கால வரலாற்றில் ஒருபோதும் நடந்திருக்காது என்பதுதான் யதார்த்தமான ஒன்று.

களக்காடு கோயில் பக்தர்கள் சற்று முன்பு (பகல் ஒரு மணியளவில்) தொடர்பு கொண்டு தெரிவித்த தகவலை கேட்டு அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமலேயே இந்த செய்தியை தயாரித்துக் கொண்டிருக்கிறேன். தகவல் தெரிவித்த 24 மணிநேரத்திற்குள்ளாகவே, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தும், அமைச்சர் பி.கே.சேகர் பாபு அலுவலகத்தில் இருந்தும் திருநெல்வேலி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு உத்தரவுகள் பறந்து கொண்டிருந்திருக்கிறது.

இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் களக்காடு சத்யவாகீஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை பணியாளர்கள் விறுவிறுப்பாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி நாளான இன்று விடுமுறையைப் பற்றி கவலைப்படாமலும், கோயில் மூடப்பட்டிருந்தாலும் கூட, தூய்மைப்படுத்தும் பணியும், கோயில் பிரகாரத்தை செம்மைப்படுத்தும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முழு முதற்கடவுளான விநாயகர் பெருமானின் ஆசியும், அருளும் முழுமையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கும், கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் தாழ்ந்து போன தமிழகம், இழந்த செல்வாக்கை விரைவாக மீண்டும் பெறும் வகையில் உழைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கும், அதற்காக இரவு பகல் பராமல் உழைத்துக் கொண்டிருக்கும் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுக்கும், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்டவர்களுக்கும் நிறைந்த ஆசியும், நீண்ட ஆயுளும் கிடைத்திட, நல்லரசு தமிழ் செய்திகள் சார்பில் எல்லாம் வல்ல பேராற்றலை மனப்பூர்வமாக வேண்டுகிறேன்…