Fri. Nov 22nd, 2024

ஏரியூர், கூத்தாநல்லூர், திருக்கோவிலூர் உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 10 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை தாக்கல் செய்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

அதன் விவரம் இதோ….

தமிழ்நாட்டில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.

திருச்சுழி, திருக்கோவிலூர், ஏரியூர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், ஆலங்குடி, கூத்தாநல்லூர், சேர்காடு, தாளவாடி, மானூர் ஆகிய 10 இடங்களில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது.

செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், திருப்பூர் அரசு கலைக் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் பாடப் பிரிவு தொடங்கப்பட உள்ளது.

மேலும், வெவ்வேறு பாடப் பிரிவுகளிலிருந்து 100 பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கப்பட உள்ளது,

அடுத்த கல்வியாண்டில் அமைப்பியல் (Civil Engineering) மற்றும் இயந்திரவியல் (Mechanical Engineering) பட்டயப் படிப்புகள் தமிழ் வழியில் தொடங்கப்படும்.

தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 100 பாடப்புத்தகங்கள் ரூ. 2 கோடியில் தமிழில் மொழி பெயர்க்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.