முந்தைய அதிமுக ஆட்சிக்காலமான 2011 முதல் 2016 வரையிலான காலத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அன்றைய காலத்தில் இரண்டொரு மாதங்களே முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போது அதே துறைகளின் அமைச்சராக நீடித்தார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து 2017 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, 2021 மே 2 ஆம் தேதி வரை முதல் அமைச்சராக நீடித்தார்.
அப்போது அவரிடம் அரசு அதிகாரிகளான கிரிதரன், கார்த்திக் ஆகிய இரண்டு பேர் முறையே சிறப்பு செயலாளர், செயலாளராக இருந்தனர். அலுவலக உதவியாளர், அரசியல் உதவியாளர் ஆகிய பதவிகளைத் தவிர்த்து நிறைய உதவியாளர்கள், அரசு சாரா வகையில், தனிப்பட்ட முறையில் உதவியாளர்களாக பணியாற்றி வந்தனர். அவர்களில் ஒருவர்தான் சேலத்தைச் சேர்ந்த மணி என்பவர். இவர், முதல் அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றி வந்த காலத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார்.
ஆனால், வாக்குறுதி அளித்த படி யாருக்கும் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். மேலும், அரசு வேலைக்காக வசூலித்த கோடிக்கணக்கான பணத்தையும் திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இப்படிபட்டநேரத்தில் அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மணியிடம் வேலைவாய்ப்புக்காக பணம் கொடுத்தவர்கள் மீண்டும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகிவிட்டார்.
இந்தநிலையில், அவரை பல இடங்களில் தேடி அலைந்தும் மணியை கண்டுபிடிக்க முடியாததால், அவருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
அதில், சேலம் அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்த மணி என்பவர், முன்னாள் முதல் அமைச்சரின் உதவியாளர் என்று கூறி, தங்களிடம் இருந்து ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி பணம் பெற்ற அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் வேலையையும் வாங்கி தரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததையடுத்து, முதல் அமைச்சர் பதவியையும் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துவிட்டார். இந்த நிலையில், லட்சக்கணக்கில் பணத்தை இழந்த 14 பேர்களும் ஒன்றாக சேர்ந்து முன்னாள் முதல்வரின் உதவியாளரான மணியை தேடிச் சென்று பணத்தை திருப்பி தரும்படி கேட்க சென்றோம். ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார்.
எனவே, பண மோசடி மற்றம் நம்பிக்கைத் துரோகம், மனஉளைச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ள மணி மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். ஒரு கோடியே 37 லட்சம் ரூபாயை அவரிடமிருந்து பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட 14 பேருக்கும் வழங்க வேண்டும் என போலீஸ் எஸ்.பி.யிடம் கொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
ஏமாற்றப்பட்ட 14 பேர் கூட்டாக அளிததுள்ள மனு மீது சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மனு தொடர்பாக மணியிடம் நடத்த அவரை தேடியபோது தலைமறைவாகிவிட்டதாக தகவல் கிடைத்தது என்று சேலம் போலீசார் தெரிவித்துள்ளார்கள்.
தலைமறைவாகியுள்ள மணியை பிடித்து விசாரணை நடத்தினால்தான், இந்த 14 பேரிடம் வசூலித்த பணத்தை, முள்ளான் முதல் அமைச்சரிடம் கொடுத்தாரா அல்லது அவரது செயலாளர்களான கிரிதரன், கார்த்திக் உள்ளிட்டவர்களிடம் வழங்கினாரா போன்ற விவகாரங்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வரும் என்று கூறிய சேலம் போலீசார், தேவைப்பட்டால் மணிக்கு எதிரான புகார் குறித்து அப்போது முதல் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடமும் நேரில் விசாரணை நடத்துவோம் என்று சேலம் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
compliant-one compliant-one