சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக சோர்ந்துவிட்டது என்பதுதான் பொதுவான எண்ணமாக இருந்தது. அதுவும், பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்கும் திமுக முன்னணி தலைவர்களும், ஆளும்கட்சி எனும் அதிகாரத்திற்கு முன்பு எதிர்க்கட்சியான அதிமுக அடங்கி ஒடுங்கிப் போய்விடும் என்ற இறுமாப்புக்கு வந்துவிட்டதாக, அரசியல் களத்தில் ஆழ்ந்த ஈடுபாடுள்ள விமர்சகர்கள் பேச தொடங்கியிருந்தனர். ஆட்சி அதிகாரத்தை இழந்தது மட்டுமே அதற்கு காரணம் இல்லையென்றும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையேயான தலைமைப் பதவிக்கான மோதலும், இரட்டையர்களுக்குள் எழுந்துள்ள அதிகார மோதலை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைவதற்காக ஆடியோ ஆயுதத்தை கையில் எடுத்திருக்கும் வி.கே.சசிகலாவின் வீராப்பான போராட்டமும் முக்கிய காரணங்களாக முன்வைக்கப்பட்டன.
இப்படியான காரணங்களால் அதிமுக பலவீனமடைந்து விட்டது என்று கருதி, அதிமுக.விற்கு எதிராக குறிப்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரிலான திட்டங்களை அகற்றும் நடவடிக்கைகளில் ஆளும்கட்சியில் உள்ள ஒரு சிலர் தீவிரம் காட்ட தொடங்கி விட்டார்கள். அந்தவகையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகத்தை கலைத்துவிட்டு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும் என்று அறிவித்தார். அவரின் அறிவிப்பு அதிமுக.விற்குள் சலசலப்பு ஏற்படுத்திய நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், திமுக அரசின் அறிவிப்பையே தனது அரசியல் எழுச்சிக்கான வியூகமாக வகுத்துக் கொண்டார்.
தன்னையோ, தனது மாவட்டத்தில் உள்ள முந்தைய அதிமுக அரசின் சாதனைகளுக்கோ ஆபத்து வந்தால், ஆக்ரோஷமாகிவிடுவோம் என்பதை ஆளும்கட்சிக்கு தெரியப்படுத்தும் வகையில்தான், விழுப்புரம் ஆர்ப்பாட்ட ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்.
தேர்தல் தோல்வியால் துவண்டு போயிருந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக.வினர்களை உசுப்பேற்றும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டத்தை பயன்படுத்திக் கொண்டார் சி.வி.சண்முகம் என்று கூறும் அதிமுக முன்னணி தலைவர் ஒருவர், வேலைன்னு வந்திட்டா வெள்ளைக்காரன் என்ற அளவுக்கு களத்தில் இறங்கி, ஆர்ப்பாட்டத்திற்காக ஆள் திரட்டியிருக்கிறார் சி.வி.சண்முகம். சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததால் சோர்ந்து போயிருந்தாலும் கூட, அதில் இருந்து குறுகிய காலத்தில் மீண்டெழுத்த சி.வி.சண்முகம், எதிர்க்கட்சி அரசியலை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, ஊராட்சி, நகராட்சி, பேரூர், ஒன்றியம், மாவட்ட அளவிலான அதிமுக நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து, அவர்களை உற்சாகப்படுத்தியே வந்தார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சி.வி.சண்முகத்தைப் பற்றி அதிமுக.வினர் பொதுவாக ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பார்கள். அதுதான் அவரின் சிறப்பு இயல்பு என்றாலும்கூட, அண்மைக்காலமாக அந்த சிறப்பு குணத்தை பலர் ரசிப்பதில்லை என்று சொல்லி வரும் அதே நேரத்தில், உரிமையோடு ஏக வசனத்தில் சி.வி.சண்முகம் பேசுவதை எல்லாம் ஒரு பொருட்டாக உண்மையான, விசுவாசமான அதிமுக தொண்டர்கள் எடுத்துக் கொள்வதில்லை என்பதும், அதேசமயம், அவரது சகோதரர் ராதாகிருஷ்ணனும் அதே சிறப்பு குணத்தை காட்டும் போதுதான் கடுப்பாகிவிடுகிறார்கள் விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் என்று கூறும் அந்த அதிமுக முன்னணி நிர்வாகி, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது சகோதரர் ராதாகிருஷ்ணனை, மாவட்ட அரசியலில் தலையிடுவதை கட்டுப்படுத்தியதுடன், தனித்தே கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி வருகிறார்.
அவரிடம் காணப்பட்ட மாற்றத்தின் காரணமாக, மீண்டும் சி.வி.சண்முகத்தின் போர்ப்படை தளபதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவே, வெறித்தனமாக உழைக்க தொடங்கியிருக்கிறார்கள் விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்றைக்கும் அவரது விசுவாசிகளாக இருக்கும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர்.
இப்படிபட்ட நேரத்தில்தான், ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தை அரசியல் போராட்டமாக மாற்றி, விழுப்புரத்தில் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தி காட்டியிருக்கிறார் சி.வி.சண்முகம். ஆளும்கட்சியாக அரியணையில் உள்ள திமுக அரசு 100 வது நாளை வெற்றி விழாவாக கொண்டாடுவதற்கு முன்பாகவே, தமிழகத்தில் ஆளும்கட்சிக்கு எதிரான முதல் ஆர்ப்பாட்டத்தை நடத்தி கெத்து காட்டியிருக்கிறார்.
அவருக்கு துணையாக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுருவும் தன்பங்கிற்கு அந்த மாவட்டத்தில் இருந்து திரளாக ஆட்களை அழைத்து வந்திருக்கிறார். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி 3500 பேர் மீது காவல்துறை அவர்கள் கணக்குப்படி வழக்குப்பதிவு செய்திருக்கிறது என்றால், எப்படியும் அதேஅளவுக்கு மேலும் 3500 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருப்பார்கள் என்றுதான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் அதிமுக தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், உண்மையில் விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்ட எழுச்சி, தமிழகமெங்கும் உள்ள அதிமுக.வினரை வீறுகொண்டு எழ வைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போதைய திமுக அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவது என்பது சிம்மசொப்பணம் இல்லை, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உணர்வுகள் ஒன்று திரண்டால், திமுக அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து விட முடியும் என்பதை விழுப்புரம் ஆர்ப்பாட்டம் நிரூபித்திருக்கிறது என்பதும், எப்போது உள்ளாட்சித் தேர்தல் நடந்தாலும் ஆளும்கட்சியை எதிர்த்து போராடி வெற்றி பெற்றுவிட விட முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் உணர்வோடும் அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கண்க்கில் விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் தைரியத்துடன் திரளாக கலந்து கொண்டிருக்கிறார்கள்.
விழுப்புரம் அதிமுக ஆர்ப்பாட்டத்தின் வெற்றி, முழுக்க, முழுக்க சி.வி.சண்முகத்தின் உழைப்புக்கு கிடைத்தது என்று சொன்னாலும் கூட, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, கோலியனூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் ராமதாஸ் உள்ளிட்டோரின் உழைப்பும் வியக்கத்தக்க வகையில்தான் இருந்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு ஆளும்கட்சி இழுக்கு ஏற்படுத்த நினைக்கும் எண்ணத்திற்கு விழுப்புரம் அதிமுக ஆர்ப்பாட்டம் பாடம் நடத்தியிருக்கிறது என்று கூறும் அதிமுக முன்னணி நிர்வாகி, பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அரசு, ஆட்சி நிர்வாகத்தில் முழு கவனத்தையும் செலுத்தி, பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு நிர்வாகத்தை நடத்தினால், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பெருமை வந்து சேரும். அதைத் தவிர்த்து உள்ளூர் அரசியலில் தலையிட்டு குளிர்காய நினைத்தால், விழுப்புரம் ஆர்ப்பாட்டம் போல, எல்லா மாவட்டங்களிலும் அதிமுக.வினரின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதற்கு முதல் நபராக பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் சி.வி.சண்முகம்.
அதிமுக.வுக்கு உயிர்ப்பு என்பதே திமுக.வுக்கு எதிரான அரசியல்தான். அதை விழுப்புரம் ஆர்ப்பாட்டம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக.வினருக்கு புரிய வைத்திருக்கிறார், சி.வி.சண்முகம். இத்தனைக்கும் வி.கே.சசிகலாவுக்கு எதிராக அவர் பேட்டியளித்த போது எழுந்த எதிர்ப்பு மற்றும் அவரே காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் கூறியிருந்ததைப் போல கொலை மிரட்டல் போன்றவற்றை எல்லாம் கருத்தில் கொண்டால், விழுப்புரம் ஆர்ப்பாட்டம், ஒட்டுமொத்த அதிமுக.வுக்கும் உயிர்த்தண்ணி போலதான்..
அவரின் வழியில் மற்ற அதிமுக தலைவர்களும் முண்டாசு கட்ட துவங்கி விடுவார்கள் என்பதை ஆளும்கட்சி புரிந்து கொண்டால் நல்லது என்று உற்சாகமாகவே பேசினார். விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக.வினர் உற்சாகமாக வலம் வரும் இன்றைய தினத்தில், திமுக நிர்வாகிகளிடமும் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அதிருப்தி மனநிலைதான் ஏற்பட்டிருக்கிறது.
ஜெயலலிதாஆர்ப்பாட்டத்தில் உற்சாகமாக பேசிய சி.வி.சண்முகம், அரசியல் சாதூர்யத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெயலலிதா பெயர் வேண்டாம் என்றால் அம்பேத்கர் பெயரை சூட்டுங்கள் என்று திமுக அரசை வேண்டும் என்றே வம்புக்கு இழுத்திருக்கிறார். இதெல்லாம் அமைச்சர் பொன்முடிக்கு தேவையா என்பதுதான் எங்கள் கேள்வி என்கிறார்கள் விழுப்புரம் மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகள்.
ஆக மொத்தத்தில் ஆர்ப்பாட்டம் மூலம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் நெருப்பை ஊதி பெரிதாக்கிவிட்டார் சி.வி.சண்முகம்….