Sun. Nov 24th, 2024

நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழிவகுக்கும், முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா பரவலின் 2-வது அலை, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல், கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு என பல்வேறு சூழ்நிலைகளில் தமிழகம் சிக்கியது.

ஆனாலும் அதிலிருந்து தமிழகம் மீண்டதோடு, தற்போது படிப்படியாக தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 3-வது அலை வந்தாலும் அதை சந்திக்க தயார் என்ற நிலைக்கு தமிழகம் வந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலில் கவலையளிப்பதாக காணப்பட்ட 8 வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகளுடன் 13-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மலைவாழிடங்கள், சந்தைகளில் முக கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் பலர் இருப்பது கவலை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தொற்று பரவலில் சரிவை சந்திக்காத மாநிலங்கள் மற்றும் தொற்று பரவல் அதிகரிக்கும் மாவட்டங்களைக் கொண்ட மாநில முதல்-மந்திரிகளுடன் அவர் உரையாற்றினார்.

அந்த வகையில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்-மந்திரிகளுடன் இன்று காலை 11 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் தமிழக முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

கொரோனா தடுப்புப் பணிகளில் இருந்து தாங்கள் பெற்ற மேலான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பெருந்தொற்றைச் சமாளிக்கும் கடினமான பணியைப், புதிதாகப் பொறுப்பேற்ற ஓர் அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்த ஒரே பெரிய மாநிலம் தமிழ்நாடுதான். எனது அரசு இச்சவாலை எதிர்கொண்டு, உயிரிழப்புகளைக் குறைத்து, நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியமைக்காக இந்திய அரசுக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

பிரதமரின் கவனத்திற்கு சில முக்கிய மான விவரங்களைகொண்டுவர விரும்புகிறேன்.

தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை, எமது அரசு 6 விழுக்காட்டில் இருந்து முழுமையாகக் தவிர்த்துள்ளதுடன், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வையும் பெரிய அளவில் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது. இதனால், தற்போது தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. எனினும், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், எங்கள் மாநிலத்துக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்கக் கோரியிருக்கிறேன். இந்த முக்கியமான பிரச்சினையில், நான் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்.

இரண்டு கோடி குடும்பங்களுக்கு, இரு தவணைகளில் 4 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரணத் தொகையாக கொடுத்துள்ளோம். மேலும், 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் இந்தக் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளோம். ஒன்றிய அரசு முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு வழங்கும் கூடுதல் அரிசியை அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாடு அரசு விரிவுபடுத்தியுள்ளது. இதைப்போன்று, தகுதியுடைய அனைத்து அட்டைதாரர்களுக்கும் இத்திட்டத்தை ஒன்றிய அரசு விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

அடுத்ததாக, தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, கொரோனா தொடர்பான அனைத்துப் பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்றும் ஒன்றிய அரசைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அதனைக் கனிவுடன் பரிசீலிக்கவும். மூன்றாம் அலை வரும் எனக் கூறப்படுகிற நிலையில், அதனைச் சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, மாநிலங்களுக்கு மேலும் பல உதவிகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்.

பள்ளி – கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழி வகுத்துவிடலாம். எனவே, பிரதமர் இம்முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இப்பெருந்தொற்றைக் கையாள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என உறுதியளிக்கிறேன். இதில் இருந்து மீள, உங்களோடும் அனைத்து மாநிலங்களோடும் நாங்கள் துணை நிற்போம்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.