

சட்டமன்றத் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ நெருங்கினால், ஒரு கட்சியில் இருந்து வெற்றி வாய்ப்புள்ள கட்சிக்கு மாறுவது என்பது இந்திய அரசியலில் சகஜமான ஒன்று. அதுவும், கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., இந்த கலையில் அதீத தேர்ச்சி பெற்றுள்ளது என்பது, டெல்லி மூத்த ஊடகவியலாளர்களின் வாக்குமூலங்கள். அதுவும், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க, தேசிய அளவில் புகழ்பெற்ற தலைவர்களையும், மாநில அளவில் செல்வாக்கு உள்ள காங்கிரஸ் தலைவர்களையும் ஸ்கெஜ் போட்டு தூக்கி வருவதை, கடந்த ஆறு ஏழு ஆண்டுகாலமாக, நாடு முழுவதும் உள்ள மூத்த அரசியல் தலைவர்கள் அதிர்ச்சியுடனேயே கவனித்து வருகின்றனர்.
அதேபோல, புதுச்சேரியில் தங்களை கைவரிசையைக் காட்டி, அங்குள்ள காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயத்தையே பா.ஜ.க. பக்கம் இழுக்கும் முயற்சியில் டெல்லி மேலிட தலைவர்கள் வெற்றிப் பெற்றுவிட்டனர். அதேபோல, தமிழகத்திலும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க., அ.தி.மு.க.ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க பா.ஜ.க. மேலிடம் தீவிர முயறசியில் ஈடுபட்டு வருகிறது.
தி.மு.க.வில் இருந்து ஏற்கெனவே, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்து விபி.துரைசாமியை இழுத்து தி.மு.க.வுக்கு அதிர்ச்சியை அளித்தது. அடுத்தகட்டமாக, தி.மு.க. தலைமைக்கு மிக நெருக்கமான கு.க.செல்வம் எம்.எல்.ஏ.வை இழுத்து, தி.மு.க. தலைமையையே ஆட வைத்தது. இதை தொடர்கதையாக ஆக்கும் வகையில், இன்னும் பலருக்கு தமிழக பா.ஜ.க. தலைமை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. ஆனால், பெரிய அளவு விலாங்கு மீன் எதுவும் பா.ஜ.க வலையில் விழவில்லை.
இந்த நேரத்தில்தான், தமிழக பா.ஜ.க.வில் உள்ள பிரபல தலைகளை தி.மு.க. வுக்கு இழுத்து டெல்லிமேலிட பா.ஜ.க.வுக்கே அதிர்ச்சி வைத்தியம் கூட தி.மு.க.வில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளனர். அவர்களின் முதல் குறி,தொலைக்காட்சி விவாதங்களில் தி.மு.க.வையும் திராவிட சித்தாந்தத்தையும் கிண்டலும், கேலியாக பேசி வரும் பா.ஜ.க.பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் மற்றும் நாராயணன் திரிபாதியை இழுக்க, பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார்களாம். அதில், கிட்டதட்ட 75 சதவிகிதம் வெற்றி பெற்றுவிட்டதாகவும் தி.மு.க. தரப்பில் இருந்து தகவல் கசிகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்னதான் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டாலும், தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு தி.மு.க. பக்கம்தான் இருக்கிறது என்பதும், அனைத்துதரப்பு மக்களின் வாக்குகளையும் குறிவைத்து தி.மு.க. பக்கம் இழுப்பதில் மு.க.ஸ்டாலின் முனைப்பு காட்டி வருவதை பற்றியும், அண்மையில் வெள்ளிவேல் ஏந்தி இந்து மக்கள் வாக்குகளையும் முழுவமையாக அறுவடை செய்ய மு.க.ஸ்டாலின் போட்ட திட்டத்தையும், ஒவ்வொரு நாளும் டெல்லி மேலிட பா.ஜ.க தலைவர்களுக்கு ராகவனும், நாராயணும்தான் பாஸ் செய்து வருகிறார்களாம். இப்படி நாள்தோறும் தி.மு..க.வுக்கு பாஸிட்டிவான செய்தியை கொடுத்து வந்த இவர்கள் இருவரும், தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் நிறைய பேரிடம் நாள்தோறும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு டெல்லி பா.ஜ.க மேலிடம் எடுக்கவுள்ள தேர்தல் யுக்திகளையும் சாடை மாடையாக தெரிவிக்கிறார்களாம்.
ராகவன் மற்றும் நாராயணனின் தி.மு.க.பாசத்தை பார்த்து, இருவருக்குக்கும் தி.மு.க.வில் சேர்ந்தால், பிராமணர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளராக களம் இறக்கப்படுவார்கள் என்று வாக்குறுதியும் கொடுக்கப்பட்டதாம். கிட்டதட்ட இரண்டு பேரும் மெல்ட் ஆகும் நேரத்தில்தான், இரண்டாம் கட்ட தலைவர்களின் முயற்சிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தடா போட்டுவிட்டாராம்.
தேவையில்லாமல், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பகைத்துக் கொள்ள வேண்டாம். இருவரின் கோபமும் இப்போதைக்கு அ.தி.மு.க.பக்கமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பக்கமும்தான் இருக்கிறது. ஆகவே, அவர்களை வெறுப்பு ஏற்றும் வகையில் தமிழக பாஜக பக்கம் இருந்து யாரையும் தி.மு.க.வுக்கு இழுக்க வேண்டாம் என்று ஸ்டிரிக்டாக சொல்லிவிட்டாராம் மு.க.ஸ்டாலின். இதனால், விரக்தியின் உச்சநிலைககே போய்விட்டார்களாம் தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள்.