
இந்தியாவின் குடியரசுத் தினம், கடந்த 71 ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி, முப்படைகளின் மிடுக்கான அணிவகுப்பு, மாநிலங்களில் பாரம்பரிய அலங்கார வண்டிகள், என்.சி.சி. என்.எஸ்.எஸ். மாணவ, மாணவியர்களின் சாகசங்கள், வெளிநாட்டு விருந்தினர் பெருமிதம், இந்தியர்களின் உயிர்மூச்சுக்கு மேலான மதிப்புக் கொண்டுதேசியக் கொடியேற்றம் என ஒரு சில மணிநேரங்களில், இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் கொண்டாடி மகிழ்வதுதான் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது இந்த குடியரசுத் தினக் கொண்டாட்டத்தின் மகோன்னத்துவம், அண்டை நாடுகளுக்கும், நட்பு மற்றும் எதிரி நாடுகளுக்கும், இந்தியா வலிமை மிக்க, சக்தி மிக்க, ஒற்றுமை மிக்க நாடு என்ற செய்தியை, உணர்த்தும்.
ஆனால், 72 வது குடியரசுத் தின விழா, அண்டை நாடுகளைத் தாண்டி, இன்றைக்கு உலகம் முழுவதும் அதிர்வு அலைகளை உண்டாக்கியிருக்கிறது என்றால், அதற்கு காரணம், நாம் இத்தனை ஆண்டுகளாக பாரம்பரிய முறையில் கொண்டாடி வந்த குடியரசுத் தின கொண்டாட்டங்கள் அல்ல.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் குவிந்துள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் போராட்டம் 60 நாட்களை கடந்துள்ள நிலையில், இன்று டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணிதான், உலக நாடுகளின் கவனத்தை இந்தியா பக்கம் திரும்ப வைத்துள்ளது.
11 கட்டங்களாக மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துவிட்ட நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற முன்வராத மத்திய அரசைக் கண்டித்து ஏற்கெனவே அறிவித்தபடி விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி, டெல்லி காவல்துறையின் அத்தனை தடுப்புகளையும் தகர்த்து, டெல்லிக்குள் நுழைந்துவிட்டனர். கண்ணீர் குண்டு வீச்சு, தடியடி என அத்தனை கடுமையான நடவடிக்ககைளை விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த போதும், அதைபற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல், விவசாயிகள் தங்கள் ஒற்றுமையை நிலை நாட்டும் விதமாக பாரம்பரிய விடுதலைச் சின்னத்தின் அடையாளமாக திகழ்ந்துக் கொண்டிருக்கும் செங்கோட்டையின் உச்சியில் தேசியக் கொடிக்கு இணையாக தங்களின் கொடியை பறக்க விட்டுள்ளனர் விவசாயிகள்,

தாங்கள் நினைத்தபடி டிராக்டர் பேரணியை அமைதியான முறையில் நடத்தி முடித்த அனைத்து மாநில விவசாயிகளின் கூட்டமைப்பான பாரதீய கிசான் யூனியன், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்கள் போராட்டம் ஓயப்போவதில்லை என்று அறிவித்து இருக்கிறார்கள்.
பிப்ரவரி 1 ஆம் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. விவசாயிகளின் ஒற்றுமையைப் பார்த்து பல்வேறு மாநில முதல்வர்கள், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடியிடம் இருந்து எந்த உறுதியான பதிலும் இந்த நிமிடம் வரை வெளியாகவில்லை…
உலகம் இந்தியாவைக் கவனித்துக் கொண்டிருக்கிறது. டெல்லியில் அமர்ந்திருக்கும் பிரதமர் மோடியிடம் இருந்து ஒற்றை வார்த்தைக் கூட, விவசாயிகள் டிராக்டர் பேரணி பற்றி இதுவரை வரவில்லை…