பாஜக பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி நீடிக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் கடந்த பல மாதங்களாக கூறி வருகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அமைந்த கூட்டணி அப்படியே தொடர்கிறது என்றும் அ.தி.மு.க. தலைவர்கள் தெரிவித்து வரும் நிலையில், அக்கூட்டணியில் உள்ள பா.ம.க. இந்த நிமிடம் வரை அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்பதை உறுதிப்படுத்தவில்லை. அதேபோல, தே.மு.தி.க.வும், 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்தால்தான் அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைப்போம் என்று பகிரங்கமாகவே அறிவித்துவிட்டது.
தமிழகத்தில் இவ்விரு கட்சிகளுக்கும் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. இந்நிலையில், இவ்விரு கட்சிகளுமே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வோடு இணைந்து தேர்தலில் போட்டியிட்ட போதும், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியில் இன்று வரை திரிசங்க சொர்க்க நிலையில்தன் உள்ளன.
இந்தநிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கெனவே இடம் பெற்றிருந்த பா.ஜ.கவும், பொத்தாம் பொதுவாகத்தான் அ.தி.மு.க.வுடனான கூட்டணிப் பற்றி பேசி வருகிறது. அதுவும், அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட முதல்வர் வேட்பாளரை நாங்கள் ஏற்க மாட்டோம். தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில்தான் முதலமைச்சர் வேட்பாளர் யார் ஏன்று அறிவிப்போம் ஏன்று கூறி, அ.தி.மு.க. தலைமைக்கு கிலியை ஏற்படுத்தி வருகிறது.
இந்தநேரத்தில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக, அக்கட்சியை பா.ஜ.க அணுகவில்லை. அ.தி.மு.க.தான், பா.ஜ.க.வை தேடி வருகிறது என்று அக்கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவிதுதுள்ளார். கர்நாடகாவில் இன்று செய்தியாளர்கச் சந்தித்த அவர், தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அதனால், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று வேறு கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், அக்கட்சிதான் பெரிய கட்சி அதனால்,முதல்வர் வேட்பாளரையும், கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்பதை அ.தி.மு.க. தலைமைதான் முடிவு செய்து அறிவிக்கும். அதுதான் கடந்த கால வரலாறு. ஆனால், கடந்த பல நாட்களாக, அ.தி.மு.க.வை கூட்டணிக் கட்சிகள் கால்பந்து போல உதைத்து, உதைத்து ஆடி வருவது, அ.தி.மு.க.வின் செல்வாக்கை கேவலப்படுத்துவது போல இருக்கிறது என்று கொதிக்கிறார்கள் அ.தி.மு.க. வின் விசுவாசமிக்க நிர்வாகிகள்.