Sun. Apr 20th, 2025

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங். கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை பல்வேறு பகுதிகளில் 100 ரூபாயை எட்டியுள்ள நிலையில் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு தழுவிய அளவில் நடைபெற்ற போராட்டங்களைப் போலவே, தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமையில், அண்ணாசாலை காவல் நிலையம் அருகில் உள்ள பாரத்பெட்ரோலியம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல், வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள், நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மக்கள் விரோத பாஜக அரசின் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு கடுமையான விலை உயர்வை கண்டித்து வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் டில்லி பாபு மற்றும் மாநிலத் துணை தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பெரம்பூர்,திருவிக நகர் பெட்ரோல் நிலையம் முன்பாக திரண்டு, சமையல் எரிவாயு உருளை, இருசக்கர வாகனம் ஆகியவற்றுக்கு மாலையணித்து கண்டன முழக்கஙகளை எழுப்பினர்.