ராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளிலும் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி தமிழகத்தில் கொரோனோ பரவலையடுத்து மூடப்பட்ட நிலையில், 10 மாதங்களுக்குப் பிறகு வரும் மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
கொரோனா தொற்று பரவலையடுத்து கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதியன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தீர்த்தமாடவும், தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து பல மாதங்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், சுவாமி தரிசனம் மற்றும் புனித நீராடலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த அக்டோபர் முதல் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், ராமேஸ்வரத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.
இதனால் உள்ளூர் மற்றும் வெளிமாநில பக்தர்களின் வருகை முழுமையாக குறைந்ததால், சுற்றுலாப் பயணிகளை நம்பியுள்ள வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதிலும் ஊரடங்கில் பெருமளவு தளர்வு அறிவிக்கப்பட்டுவிட்டதால், ராமேஸ்வரத்தில் புனித நீராடகவும், சுவாமி தரிசனத்திற்கும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனை பரிசீலித்த கோயில் தேவஸ்தான நிர்வாகம், பக்தர்களை பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து அனுமதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23.3.2020 முதல் ராமேஸ்வரம் கோயில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடுவதற்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு புண்ணிய தீர்த்த கிணறுகளை பிப்ரவரி முதல் வாரத்தில் திறப்பதற்கான அலுவல் சார்ந்த ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்று கூறப்பட்டுள்ளது.