உண்மையிலேயே கொரோனோ தொற்றால்தான் பாதிக்கப்பட்டிருக்கிறாரா சசிகலா ?
விக்டோரியா மருத்துவமனை கூற்றில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை உள்ளதா? சந்தேகத்தை கிளப்பும் அவரது உறவினர்கள்..
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, நேற்று முன்தினம் சிவாஜி நகரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொரோனோ தொற்று உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு சிகிச்சையும் வழங்கப்பட்டதில், முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறி அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், நேற்று முன்தின நள்ளிரவில் அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, விக்டோரியோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றிய தகவல் வெளியானவுடன் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், இளவரசி மகனும் ஜெயா டி.வி. முதன்மை செயல் அதிகாரியான விவேக் ஜெயக்குமார் உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் அவர்களது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் பெங்களூர் விரைந்துச் சென்று விக்டோரியோ மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர். சசிகலா உடல்நிலை குறித்தும் மருத்துவமனை நிர்வாகத்தோடு அடிக்கடி பேசி வருகின்றனர்.
சசிகலாவுக்கு நேற்று முன்தினம் கொரோனோவை கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கொரோனோ தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே, சசிகலாவுக்கு மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளளார் என்று நேற்று மாலை விக்டோரியோ மருத்துவமனை அறிவித்தது. இதைக் கேட்டு சசிகலா உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இப்படி மாறிமாறி மருத்துவமனை நிர்வாகம் தெரிவிப்பதால், சசிகலா உறவினர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும், மருத்துவமனை நிர்வாகத்திடம் அணுகி உண்மை நிலையை அறிந்துகொள்ள அவர்களது உறவினர்கள் முயன்றபோதும், மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், நுரையீரலில் எந்தளவுக்கு கொரோனோ தொற்று உள்ளது என்பதை துல்லியமாக கண்டறிய, சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அந்த வசதியும் விக்டோரியோ மருத்துவமனையில் இல்லாததால், சசிகலா உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இன்னும் 5 நாள்களில் விடுதலையாகவுள்ள சசிகலாவுக்கு, உயர்தர சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள அவரது உறவினர்கள், கொரோனோ தொற்று பாதிப்புக்கு உரிய சிகிச்சை வழங்கும் வசதிகள் இல்லாத விக்டோரியோ மருத்துவமனையிலேயே தொடர்ந்து சசிகலா வைத்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மருத்துவமனை நிர்வாகம் தரும் தகவல்களை எந்தளவிற்கு நம்புவது என்று அவரது உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் இருந்து சக்கர நாற்காலியில் சசிகலாவை அமர வைத்து நேற்று பகலில் அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கிருந்த அவர்களது உறவினர்களைப் பார்த்து சசிகலா கையசைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட அந்த நிமிடங்களில் அவர் எவ்வளவு உற்சாகமாக காணப்படுகிறார். அதே உற்சாக மனநிலையிலேயே சசிகலா, தமிழகத்திற்கு திரும்ப வேண்டும் என்ற ஆசையோடு காத்திருக்கும் அவர்களது உறவினர்கள், விக்டோரியா மருத்துவமனை நிர்வாகத்தின் குளறுபடிகளாலும், அங்கு குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் தரும் நெருக்கடிகளாலும் பெரும் சோகத்தில் இருக்கின்றனர்.
அதிநவீன வசதிகள் இல்லாத விக்டோரியா மருத்துவமனையிலேயே தொடர்ந்து வைத்து சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கும் முடிவில் கர்நாடகா அரசு பிடிவாதமாக இருப்பதும் அவரது உறவினர்களின் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனோ தொற்று ஆரம்ப கட்டத்தில் இருந்தால், சசிகலாவை எளிதாக குணமாக்கிவிடலாம். அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த நடவடிக்கையில் தேவையற்ற காலதாமதம் செய்தால், சசிகலா உயிருக்கே ஆபத்து ஆகிவிடும் என்று அச்சத்துடன் கூறுகிறார்கள் அவர்களது உறவினர்கள்.
மொத்தத்தில் சசிகலாவிற்கு வழங்கப்படும் சிகிச்சையில் உள்ள மர்மம், விக்டோரியா மருத்துவமனையின் அலட்சியம், பெங்களூர் போலீசாரின் கெடுபிடி உள்ளிட்டவற்றை பார்க்கும் போது, வரும் 27 ஆம் தேதியன்றோ, அல்லது அதற்கு முன்பாகவோ, சசிகலா உயிருடன் சென்னைக்கு திரும்புவாரா? அவரை விடுவிக்கும் விவகாரத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை உள்ளதா? என்றெல்லாம் சந்தேகமாக உள்ளதாகவும் அவர்களது உறவினர்கள் கதறுகிறார்கள்.
நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை முறையாக, முழுமையாக முடித்த சசிகலாவை, கடைசி நாட்களில் இப்படி அலைக்கழிப்பதும், சித்ரவதைக்கு உள்ளாக்குவதும் மனிதநேயமற்ற செயல் என்று கூறும் அவர்களது உறவினர்கள், அரசு மருத்துவமனையில் இருந்து சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற, நீதிமன்றத்தை அணுகி உத்தரவு பெறலாமா? என்பது குறித்து வழக்கறிஞர்கள் குழுவினருடன் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தனர்,