அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழக தேர்தல் களத்தை சூடாக்கி வருகின்றன. அவர்களுக்கு இணையாக, தேசியக் கட்சியான காங்கிரஸும் தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல் பரப்புரை தொடங்குகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டுப் போட்டியை காண மதுரை வந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி, தமிழ் வணக்கம் என்ற பெயரில் தோதல் பரப்புரையை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, வரும் 23 ஆம் தேதி முதல், 3 நாள்கள் மேற்கு மண்டலத்தில் மின்னல் வேக சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் அவர், 5 மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
ராகுல்காந்தியின் வருகையும், பரப்புரை மேற்கொள்ளும் இடங்களும் இதோ….
வரும் 23-ம் தேதி காலை 8.15 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் ராகுல்காந்தி, 11 மணிக்குக் கோவை வருகிறார்.
அன்று மதியம் 3.30 மணிக்கு திருப்பூர் மாவட்டம் அவிநாசிக்குச் செல்லும் ராகுல்காந்தி, திருப்பூர் குமரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
மாலை 5.45 மணி முதல் 6.45 மணி வரை திருப்பூர் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் தொழில்துறையினருடன் கலந்துரையாடுகிறார்.
இரவு திருப்பூரில் தங்கும் ராகுல்காந்தி, 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஈரோடு மாவட்டத்துக்குச் செல்கிறார்.
பெருந்துறையில் கட்சியினரின் வரவேற்பைப் ஏற்றுக் கொண்டு, மதியம் 1.15 மணிக்கு ஓடந்துறையில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
நண்பகலில் நெசவாளர்களுடன் கலந்துரையாடல். பின்னர், திருப்பூர் மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்ளும் ராகுல், தாராபுரம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
12 மணியளவில் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
அன்று மாலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், ஆத்துமேடு பகுதிகளில் கட்சியினரின் வரவேற்பை ஏற்கிறார்.
மாலை 6 மணிக்கு மதுரைக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு ராகுல்காந்தி எம்.பி திரும்புகிறார்.
புதுச்சேரியில் தி.மு.க தனித்துப்போட்டியிடும் என்ற செய்தி பரவி வரும் நேரத்தில், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி, தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியிடனரிம் எழுந்துள்ளது.